பிரசவத்துக்கு சென்ற பெண்ணின் கருக்குழாயை தைத்ததாக சர்ச்சை: ராமநாதபுரத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். என்ன நடந்தது?

ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வைஜெயந்தி மாலா(23). இவருக்கும் போகலூர் ஒன்றியம் மஞ்சக்கொல்லை சேர்ந்த பிரபாகரனுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் வெளிநாட்டில் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி கர்ப்பமாக இருந்த வைஜெயந்திக்கு வயிற்று வலி ஏற்பட்டு போகலூர் சத்திரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால், ஒரு வார காலத்துக்குப் பின் வைஜெயந்திக்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. இதையடுத்து தனக்கு பிரசவம் பார்த்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று அங்குள்ள மருத்துவரிடம் தமது நிலையை விளக்கியுள்ளார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர், கருத்தடை சாதனம் (காப்பர் டி) பொருத்தி தேவையின்றி சில தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் அதனால் அவருக்கு வலி ஏற்பட்டதாகவும் கூறி அனுப்பி வைத்தனர்.

இதன் பிறகும் வைஜெயந்திக்கு கடுமையான வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தார். அதில் அவரது கருக்குழாயும் சேர்த்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் தனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்களுடன் சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற வைஜெயந்தி அங்குள்ள மருத்துவர் மற்றும் சுகாதார நிலைய செவிலியர்களிடம் தமக்கு செய்த அறுவை சிகிச்சை குறித்து விசாரித்தார்.

ஆனால், அவருக்கு அங்குள்ளவர்கள் சரியான பதில் கூறாமல் அலைக்கழித்ததாக வைஜெயந்தி தரப்பில் கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனை எச்சரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக வைஜெயந்தி மாலாவை பரிசோதனை செய்த தனியார் மருத்துவரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.

அப்போது, "பிரசவத்தின் போது அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனம் பொருத்தும் போது கருக்குழாயை சேர்த்து தைத்துள்ளனர். இதனால் வைஜெயந்தியால் எதிர்காலத்தில் மீண்டும் கர்ப்பம் தரிக்க இயலாது. மாதாந்திர மாதவிலக்கு ஏற்படாது," என்று மருத்துவர் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய வைஜெயந்தி மாலா, "எனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சில மாதங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக சத்திரக்குடி அரசு மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதிக ரத்த போக்கு இருப்பதாகக் கூறி கருத்தடை சாதனத்தை பொருத்தினர். ஆனால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது எனது கருக்குழாய் சேர்த்து தைக்கப்பட்டது தெரிய வந்தது, என்று கூறினார்.

"கடந்த 10 மாதங்களாக எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை மேற்கொள்ள வசதியும் இல்லை. கைக்குழந்தையுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனக்கு ஏற்பட்ட தவறான சிகிச்சைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வைஜெயந்தி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் உறுதி

இந்த விவகாரம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வைஜெயந்தி முறையிட்டுள்ளார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக கூறுகிறார் வைஜெயந்தி மாலா.

ஆரம்ப மருத்துவ நிலையம் மீதான வைஜெயந்தியின் புகார் குறித்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம்.

"வைஜெயந்தி மாலாவுக்கு பிரசவம் செய்த மருத்துவர்கள் யார் என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவர் தவறான சிகிச்சை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வைஜெயந்தி மாலாவுக்கு மீண்டும் மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் அவரது உடல் பிரச்சனையை முழுமையாக சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: