கொசு 'ஓ' ரத்த வகை மனிதர்களை அதிகம் கடிக்குமா? கொசுவர்த்தி சுருள், கிரீம் பாதுகாப்பானதா?

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

இந்த உயிரினத்திற்கு ஒரு பல் கூட கிடையாது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மனிதர்கள் மரணிக்க இந்த ஒரே உயிரினம் காரணமாக இருக்கிறது.

பல் கூட இல்லாத அப்படி எந்த உயிரினம் இவ்வளவு கொடிய உயிர்க்கொல்லியாக இருக்கிறது?

அதற்கான பதில் தினசரி கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் தெரியும்.

ஆம், அந்தக் கொடிய உயிர்க்கொல்லி உயிரினம் கொசுதான்.

கொசுக்கடியால் பரவும் மலேரியா காரணமாக ஆண்டுக்கு 21.9 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 4,00,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில் பெரும்பாலானோர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். மறுபுறம் டெங்கு பாதிப்பு காரணமாக ஆண்டுக்கு 40,000 பேர் வரை மரணமடைகின்றனர். மேலும் சிக்கன்குன்யா, ஜிகா வைரஸ் எனப் பல்வேறு நோய்கள் கொசு மூலமாகப் பரவுகிறது.

கொத்துக் கொத்தாக மனிதர்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்த மலேரியா நோய் கொசுக்கள் மூலமே பரவுகிறது என்பதை பிரிட்டிஷ் மருத்துவரான சர் ரொனால்ட் ரோஸ் என்பவர் கடந்த 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார்.

இதை நினைவுகூரும் விதமாகவே ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 20ஆம் தேதி உலக கொசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

கொசு தினத்துக்கும் இந்தியாவுக்கு ஒரு தொடர்பு உள்ளது. பிரிட்டிஷ் மருத்துவராக இருந்தாலும் ரொனால்ட் ரோஸ் பிறந்தது என்னவோ அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில்தான்.

இந்தியாவின் சிக்கந்தராபாத்தில்தான் மலேரியா கொசுக்களால் பரவுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்.

கொசு என்ற பெயர் வந்தது எப்படி?

கொசு என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் கொசுகு என்ற ஒரு பெயரும் அதற்கு உண்டு. இதற்கு சிறியது என்று அர்த்தம் என்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் செல்வமுத்துக்குமரன் திருநாவுக்கரசு.

“நாம் கொசுறு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோமே அதுபோன்றுதான் இதுவும். இவை அனைத்துமே சிறியது என்பதைத்தான் குறிக்கிறது. மசகம் என்றொரு பெயரும் கொசுவுக்கு உண்டு. கொசு கருமை நிறத்தில் இருப்பதை வைத்து இந்தப் பெயர் வந்திருக்கலாம்” என்கிறார் அவர்.

ஆங்கிலத்தில் கொசுவை குறிக்கும் சொல் ஸ்பானிய வார்த்தையாகும். மொஸ்கிட்டோ என்றால் ஸ்பானிய மொழியில் சிறிய பூச்சி என்று அர்த்தம்.

“பார்ப்பதற்கு சிறியதாகத் தெரியும் கொசுவின் பின்புலம் பலமானது. 400 முதல் 450 மில்லியன் ஆண்டுகளாக அவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. தற்போது வரை 3000 முதல் 3500 வகையான கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்கூட புனேவில் புதிய கொசு வகை (Culex katezari)கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 200 வகைகள் மட்டுமே மனிதர்களின் ரத்தத்தை குடிக்கின்றன.”

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

தன் எடையைவிட மூன்று மடங்கு ரத்தத்தை உறிஞ்சும் கொசு

கொசு உங்கள் உடலில் இருந்து சராசரியாக ஏழரை மில்லிகிராம் ரத்தத்தை உறிஞ்சுகிறது. இதைக் கேட்கும்போது சதாரணமாக இருக்கலாம்.

ஆனால், கொசுவின் எடையே 2.5 முதல் 3 மில்லி கிராம்தான் இருக்கும். தனது எடையைவிட மூன்று மடங்கு அதிகமாக மனித ரத்தத்தை அது உறிஞ்சிக் கொள்கிறது.

கொசு சிறியதாக இருப்பதால் வேகமாகப் பறக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஈ போன்றவற்றுடன் ஒப்பிடும்போது கொசுவின் பறக்கும் வேகம் என்பது மிகவும் குறைவு. ஒரு மணிநேரம் பறந்தால்கூட அதிகபட்சம் 1 மைல் தூரம்தான் கொசுவால் பறக்க முடியும்.

“கொசுவால் வேகமாகப் பறக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், தனது இறக்கையை அது அசைக்கும் வேகம் அபாரமானது. ஒரு நிமிடத்துக்கு 200 முதல் 300 தடவை வரை அது தனது இறக்கையை அடித்துக் கொள்ளும். இதனால், கொசு காது அருகே வரும்போது 'ரிங்...'என்ற சத்தம் கேட்கிறது,” என்று செல்வமுத்துக்குமரன் விளக்குகிறார்.

உலக கொசு தினம்
படக்குறிப்பு, முனைவர் செல்வகுமார்- பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர்

பாதிப்பை ஏற்படுத்தும் 4 வகையான கொசுக்கள்

கொசுக்களில் பல வகைகள் இருந்தாலும் நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது என்னவோ 4 வகையான கொசுக்கள்தான் என்கிறார் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை பூச்சி தடுப்பு அலுவலரான முனைவர் செல்வகுமார்.

“அனோபிலிஸ் ஸ்டீபென்ஸி (Anopheles stephensi) மலேரியாவை ஏற்படுத்துகின்றன, ஏடிஸ் இஜிப்டே (Aedes aegypti), ஈடிஸ் ஆல்போபிக்டஸ் (Aedes albopictus ஆகியவற்றால் டெங்கு, சிக்கன்குன்யா ஏற்படுகின்றன.

க்யூலஸ் (Culex) வகை கொசுக்கள் ஜப்பானிய மூளையழற்சியை ஏற்படுத்துகின்றன. armigeres என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் நோய் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால், உடலில் தடிப்புகள் ஏற்படும்,” என்றார்.

அனோபிலிஸ் கொசுக்கள் மலேரியாவில் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உடலில் இருந்து அந்த ஒட்டுண்ணியை எடுத்து மற்றவரின் உடலில் செலுத்துவதன் மூலம் மலேரியாவைப் பரப்புகிறது. ஈடிஸ் வகை கொசுவை பொறுத்தவரை முட்டையாக இருக்கும்போதே அதில் வைரஸ் இருக்கும். புழு, கூட்டுப்புழு, கொசு என வளர்ச்சி பெற்ற பிறகு அது நம்மை கடிக்கும்போது அதிலுள்ள வைரஸ் காரணமாக டெங்கு ஏற்படுகிறது.

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

கொசு கடிக்கும் போது என்ன நடக்கிறது?

கொசுக்களுக்கு பற்கள் கிடையாது, அப்படியிருக்கும்போது கொசு கடிக்கிறது என்று ஏன் கூறுகிறோம்.

இது தொடர்பாக செல்வமுத்துக்குமரன் பிபிசி தமிழிடம் பேசும்போது, “கொசுவின் வாய் ஊசி போல இருக்கும். அதில் இருக்கும் கூரிய முனைகளை வைத்து நமது தோலில் முதலில் துளையிடுகிறது. பின்னர் தனது வாயில் ஸ்ட்ரா போன்று இருக்கும் மற்றொரு பகுதியை உள்ளே செலுத்தி நமது ரத்தத்தை இழுக்கிறது.

இதற்கு இடைபட்ட வேளையில், தனது உமிழ்நீரை நமது உடலுக்குள் கொசு செலுத்துகிறது. இந்த உமிழ்நீர் காரணமாக அந்தப் பகுதி மட்டும் மரத்துபோய்விடுகிறது. அதனால்தான், கொசு ரத்தத்தை உறிஞ்சும்போது வலிப்பதற்கு பதிலாக உறிஞ்சிய பின்னரே நமக்கு வலி ஏற்படுகிறது.

மேலும் நமது ரத்தத்தை உறிஞ்சிகொண்டு இருக்கும்போதே மீண்டும் ஒருமுறை உமிழ்நீரை உள்ளே அனுப்புகிறது. இது ரத்தம் உறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது,” என்றார்.

பின்னர், இந்த உமிழ்நீர் நமது உடலுக்குள் செல்லும்போது அது தோலில் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதேபோல், மனிதர்களுக்கு நோயைப் பரப்புவதும் இங்குதான் நடக்கிறது என்கிறார் செல்வமுத்துக்குமரன்.

“உமிழ்நீரை நமது உடலுக்குள் செலுத்தும்போது அதன் உடலில் உள்ள வைரஸ், ஒட்டுண்ணி, பாக்டீரியா போன்றவற்றையும் சேர்த்து அனுப்பி விடுகிறது. அதனால்தான் நாம் நோய் பாதிப்புக்கு ஆளாகிறோம்.”

இதேபோல், நேரத்தை வைத்து எந்த வகையான கொசு கடிக்கிறது என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும் என்று செல்வகுமார் கூறுகிறார்.

“க்யூலஸ் வகை கொசுக்கள் மாலையில் மட்டுமே கடிக்கும். ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். சூரியன் உதித்து மூன்று மணிநேரத்துக்கும், சூரியன் மறைவதற்கு முன்புள்ள மூன்று மணிநேரத்துக்கும் அவை வீரியமாக இருக்கும்.

மற்ற நேரங்களில் நம்மை கடிக்காது. மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் கொசு விடியற்காலையில் தான் கடிக்கும். எனவே, நேரத்தை வைத்தே எந்த கொசு கடிக்கிறது என்று நம்மால் கூற முடியும்,” என்று அவர் விளக்கினார்.

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

ஆண் கொசு ஏன் மனிதர்களைக் கடிப்பது இல்லை?

பொதுவாக பெண் கொசுதான் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது, அதுவும் தேவைப்படும்போது மட்டுமே என்கிறார் செல்வமுத்துக்குமரன்.

“ரத்தம் கொசுவின் உணவு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆண், பெண் கொசுகள் பூவில் உள்ள தேனையே உணவாக எடுத்துகொள்கின்றன.

இனச்சேர்க்கை முடிந்த பின்னர், தனது முட்டையை உற்பத்தி செய்வதற்கான புரதச்சத்து பெண் கொசுக்குத் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில்தான் மனித ரத்தத்தையோ, விலங்கு ரத்தத்தையோ கொசு உறிஞ்சுகின்றன,” என்று அவர் விளக்கினார்.

கொசுவின் பார்வை மங்கலானது. ஒருநபரின் உடலில் இருந்து வெளியேறும் வேர்வை, அவரின் முச்சுக்காற்று ஆகியவற்றை வைத்துதான் மனிதர்களை கொசு தேடி வருகிறது.

நூறு அடி தூரத்தில் இருந்தாலும் நமது உடலில் இருந்து வெளியேறும் கரியமில வாயு, லாக்டிக் ஆசிட், ஆக்டெனால் ஆகியவற்றை வைத்து நம்மை கொசு அடையாளம் கண்டுவிடும்.

உலக கொசு தினம்
படக்குறிப்பு, முனைவர் செல்வமுத்துக்குமரன்- இணைப் பேராசிரியர், பூச்சியியல் துறைஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்

கொசு 'ஓ பாசிட்டிவ்' ரத்தம் கொண்டவர்களை அதிகம் கடிக்குமா?

மனிதர்களில் பெரும்பான்மையானோர் ஓ பாசிட்டிவ் ரத்தத்தை கொண்டுள்ளனர். அதனால், ஓ பாசிட்டிவ் ரத்தத்தை கொசு விரும்பி உறிஞ்சுகிறது என்று கூறுகிறார் செல்வமுத்துக்குமரன்.

“பெரும்பாலானோர் ஓ பாசிட்டிவ் ரத்த வகையைக் கொண்டுள்ளனர். அதனால், அந்த வகை ரத்தத்தை கொசு அதிகமாக குடித்திருக்கும்.

மனிதர்கள் 10 லட்சம் ஆண்டுகளாக பூமியில் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாகவும் மனிதர்கள் கொசுவிடம் கடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். மனிதர்களின் ரத்தத்தை கொசுவால் எளிதாக உறிஞ்ச முடியும்,” என்றார்.

எனவே, கொசுவின் பரிணாம வளர்ச்சியில் ஓ பாசிடிவ் ரத்தத்தின் தாக்கம் அதிகம் என்று கூறிய அவர், “13 வகையான கொசுகளை ஆராய்ச்சி செய்ததில், மனித ரத்தத்தை உறிஞ்சும் கொசுவின் உடலில் உள்ள மனித ரத்தத்தை விரும்புவதற்கான காரணியாக உள்ள மரபணு தொடர்ந்து தன்னை செழுமைப்படுத்திக்கொண்டே இருப்பது தெரிய வந்தது.

அந்த மரபணுதான் மனித ரத்தத்தை தேடிப்போய் குடிப்பதற்கான விஷயங்களை கொசுவுக்கு கூர்மைப்படுத்திக்கொண்டே இருக்கிறது,” எனவும் தெரிவித்தார்.

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

கொசு எங்கு முட்டையிடும்?

ஒரு கொசு தன் வாழ்நாளில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே முட்டையிடும். ஒருமுறை முட்டையிடும்போது 100 முதல் 300 முட்டை வரை இடுகிறது என்று வைத்துக்கொண்டாலும் அதிகபட்சம் 1000 முட்டைகள் வரை ஒரு கொசு இடுகிறது.

அதேபோல், ஒரே நேரத்தில் மொத்தமாக கொசு முட்டையிடுவதில்லை. எடுத்துக்காட்டாக ஒரு கொசு 300 முட்டையிடுகிறது என்றால், முதலில் 50 முட்டைகள் இடும், பின்னர் அடுத்த 50 முட்டைகள் என்று பகுதி பகுதியாகதான் முட்டையிடும்.

கொசுக்களில் பல வகைகள் இருப்பதுபோல அவை முட்டையிடும் இடங்களும் மாறுபடுகின்றன.

“அனோபிலிஸ் சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிடும். அதேநேரம் தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிடாது. க்யூலஸ் கொசு சாக்கடை தண்ணீரிதான் முட்டையிடும், ஏடிஸ் வகை கொசுகள் சுத்தமான அதேநேரத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிடும்.

உதாரணத்துக்கு வீட்டு மாடியில் வைத்திருக்கும் தண்ணீர் டேங்கில் சிறிதளவு திறந்திருந்தால்கூட ஏடிஸ் வகை கொசுக்கள் முட்டையிட்டு விடும் என்று செல்வமுத்துக்குமரன் கூறுகிறார்.

கொசு எத்தனை நாட்கள் உயிர் வாழும்?

மனிதர்களிடையே நோயைப் பரப்பி அவர்களின் உயிருக்கு ஆபத்தாகத் திகழும் பெண் கொசுக்களின் வாழ்நாள் என்பது 40 முதல் 60 நாட்கள்தான்.

முட்டை, புழு, கூட்டுப்புழு, வளர்ந்த கொசு என அவற்றின் பருவம் நான்கு வகைப்படும்.

முட்டையில் இருந்து கொசுவாக வளர்ச்சி பெறுவதற்கு கொசுவின் வகைக்கு ஏற்ப 6-7 நாட்கள் ஆகிறது. அதில், ஆண் கொசுக்களின் வாழ்நாள் என்பது 10 நாட்கள்தான். அவற்றின் வேலையே இனச்சேர்க்கைதான்.

இனச்சேர்க்கை முடிந்த பின் அவை இறந்துவிடும். முட்டையிடும் பெண் கொசுக்கள் கிட்டத்தட்ட 40 முதல் 60 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என செல்வமுத்துக்குமரன் கூறுகிறார்.

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவது சரியா?

கொசுவை விரட்ட சுருள் பயன்படுத்துவது சரியா என்று செல்வகுமாரிடம் கேட்டப்போது, கொசுவர்த்தி சுருள்கள் 18 மணிநேரம் வரை எரியும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. நாம் முன்பே கூறியது போல் ஒவ்வொரு வகை கொசுவும் ஒவ்வொரு நேரத்தில் கடிக்கின்றன.

அப்போது மட்டும் அரை மணி நேரத்திற்கு கொசுவர்த்தி சுருளை கொளுத்தி வைத்துவிட்டு கொசுக்கள் வெளியே சென்றதும் அணைத்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல், “கொசுவை விரட்ட பயன்படுத்தும் வேப்பரைசர்களையும் (vaporizer) பயன்படுத்துவது சரியானதாக இருக்காது என்று அவர் கூறுகிறார். அவற்றில் வேதிப் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவது உடல்நலத்தை பாதிக்கும். ஒருசிலர் ஏசி-ஐ போட்டுக்கொண்டே வேபரைசர்களை பயன்படுத்துகின்றனர். இதுவும் தவறு,” என்று விளக்கினார்.

உடலில் கிரீம்களைத் தடவிக்கொள்வது பாதுகாப்பானதா?

ஒரு சிலர் கொசு போன்ற பூச்சிகள் கடிக்காமல் இருப்பதற்காக உடலில் அதற்கென உள்ள கிரீம்களைத் தடவிக்கொள்கிறார்கள். இவ்வாறு தடவுவது நமது உடலில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று இந்திய சருமநோய், பால் வினை நோய் மற்றும் தொழுநோய் மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள மருத்துவர் தினேஷ் குமாரிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “நீங்கள் எங்காவது பயணம் செல்கிறீர்கள் என்றால், பூச்சி கடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இதுபோன்ற கிரீம்களைப் பயன்படுத்தலாம். ஆனால், எப்போதும் பயன்படுத்தக்கூடாது.

ஒருசில குழந்தைகளுக்கு உணர்ச்சி திறன் அதிகம் உள்ள தோல் இருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய கிரீம்களைப் பயன்படுத்துவது எரிச்சலை ஏற்படுத்தும். எட்டோப்பி என்ற அலர்ஜி ஏற்படும் தன்மையுள்ளவர்களும் இத்தகைய கிரீம்களைப் பயன்படுத்தக் கூடாது,” என்றார்.

உலக கொசு தினம்

பட மூலாதாரம், Getty Images

கொசு வலை பயன்படுத்துவது நல்லது

முடிந்தவரை வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்.

இதைத் தாண்டி, தற்போது ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றில் கொசு வலை அடிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கொசு வீட்டுக்குள் வருவதை பெரியளவில் தடுத்துவிடலாம்.

அதற்கு அவர், “நம் படுக்கைக்கு கொசுவலையைப் பயன்படுத்துவதன் மூலமும் கொசுக் கடியில் இருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும். ஆப்ரிக்காவில் மலேரியாவில் இருந்து லட்சக்கணக்கானவர்களை கொசுவலைதான் காப்பாற்றுகிறது. எனவே, இந்த எளிய முறைகள் மூலம் கொசுக் கடியில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்,” என்கிறார் செல்வமுத்துக்குமரன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: