மல்டிவர்ஸ் என்றால் என்ன? நாம் வாழும் பேரண்டம் தவிர வேறு பேரண்டங்கள் உண்டா?

மல்டிவர்ஸ்

பட மூலாதாரம், Science Photo Library

    • எழுதியவர், டெய்சி ரோட்ரிக்ஸ்
    • பதவி, .

கடந்த வாரம் 7 ஆஸ்கார் விருது வென்ற "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" படத்தின் பாத்திரமான ஈவ்லின் ஒரே நேரத்தில் ஒரு சலவை இயந்திர நிறுவனத்தின் உரிமையாளராகவும், குங்ஃபூ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரமாகவும், நீண்ட, தளர்வான விரல்களைக் கொண்ட பெண்ணாகவும் இருக்கிறார்.

இந்த பாத்திரம் பல்வேறு இணை பிரபஞ்சங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்கிறது. அவரது சுயத்தின் மாற்று வடிவங்களைக் காட்டுகிறது.

"மல்டிவர்ஸ் முழுவதும் நான் ஆயிரக்கணக்கான ஈவ்லின்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் நினைவுகள், அவர்களின் உணர்ச்சிகள், அவர்களின் திறன்கள் அனைத்தையும் நீங்கள் அணுகலாம்" என்று அவளது கணவர் டேப்பில் அவளிடம் கூறுகிறார்.

மல்டிவர்ஸ் (பல பேரண்டங்கள்) என்ற அறிவியல் கதைகளில் காணப்பட்ட கருத்தை சினிமா தழுவிக்கொண்டது.

"இந்த அழகான படத்தில் மல்டிவர்ஸ் என்ற கருத்தாக்கம் துல்லியமாக அறிவியல்ரீதியாக பயன்படுத்தப்படவில்லை. ஒரு கலைப்படைப்பில் அப்படி அறிவியல் ரீதியான விளக்கத்தை எதிர்பார்க்க முடியாது," என்று இந்த சினிமாவின் இயக்குநர்கள் டேனியல் ஷீனெர்ட், டேனியல் குவான் ஆகியோர் பிபிசி முண்டோவிடம் கூறினர்.

அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் பேராசிரியரான ஜோர்ட்ஜே மினிக்.

"நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்த சிறந்த படம் இது. சில தர்க்கவாதிகள் மற்றும் தத்துவவாதிகளால் ஆராயப்பட்ட ஒரு கருத்தை, குடும்பக் கதை பாணியில் விவரிக்கிறது” என்கிறார்.

ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் மல்டிவர்ஸ் என்பதன் பொருள் என்ன?

மினிக் உள்ளிட்ட நிபுணர்கள் இது குறித்துக் கூறுகிறார்கள். இது குறித்து விஞ்ஞானிகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. எல்லா இயற்பியலாளர்களும் இதை ஏற்பதுமில்லை.

ஒரு பெரிய மர்மம்

2022 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கார்லோஸ் ஃப்ரெங்க், ஒரு பிபிசி வீடியோவில் நமது பிரபஞ்சத்தின் ஐந்து மர்மங்களை ஆராய்ந்தார்.

"நமது பிரபஞ்சம் தனித்துவமானது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. நமது பிரபஞ்சம் உருவானது போலவே, பல பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம்," என்று அவர் முதல் மர்ம் குறித்துப் பேசினார்.

"அப்படியானால், நாம் ஒரு பிரபஞ்சத்தில் அல்ல, இயற்பியலாளர்கள் பல பிரபஞ்சங்கள் என்று கூறுகிறவற்றின் தொகுப்பில் வாழ்கிறோம்."

"நாம் அவற்றை தீவு பிரபஞ்சங்கள் என்று நினைக்கலாம், ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் , ஒருவேளை ஒவ்வொன்றும் அதன் சொந்த இயற்பியல் விதிகளுடன் கூட இருக்கலாம்.

"உதாரணமாக, நமது பிரபஞ்சத்தை விட ஈர்ப்பு விசை 100 மடங்கு வலுவாக இருக்கும் பிரபஞ்சம்கூட இருக்கலாம்.

"பல பிரபஞ்சங்கள் இருப்பதை எப்படியாவது உறுதியாக நிரூபிக்க முடிந்தால், அது ஒரு உண்மையான அறிவுப் புரட்சியாக இருக்கும், பேரண்டம் குறித்த நமது சிந்தனையில் ஒரு முழுமையான மாற்றமாக அது இருக்கும்."

மெக்சிகோவில் உள்ள UNAM இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரானமியை சேர்ந்த ஆய்வாளரான இயற்பியலாளர் ஜூலியட்டா ஃபியர்ரோ, ஒரு வெற்றுப் பெட்டியைக் கற்பனை செய்து பார்க்கும்படி கூறுகிறார், அதில் இயற்கையின் அனைத்து சக்திகளும் காணப்படுகின்றன மற்றும் பெரு வெடிப்பு போன்ற ஏதாவது வெற்றிட ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

நமது பிரபஞ்சம் பிறந்தது இப்படித்தான்: "வெற்றிடத்திலிருந்து ஆற்றல் வெளியானது, அது பொருளை உருவாக்கியது, மேலும் இந்த விரிவடையும் பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோம்" என்று அவர் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

"நாம் பெருவெடிப்பின் இந்தப் பக்கத்தில் இருக்கிறோம், ஆனால் மறுபுறம் என்ன நடந்திருக்கும்? வெவ்வேறு விஷயங்கள், வெவ்வேறு பிரபஞ்சங்கள் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

"நமது பிரபஞ்சம் உருவாக்கிய அந்த வெற்றுப் பெட்டியைத் தவிர, நமது பெருவெடிப்பு, எல்லையற்ற பிறவற்றை உருவாக்கியிருக்கலாம் . இணையான பிரபஞ்சங்கள் இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

"ஒரு பிரபஞ்சத்திற்கும் இன்னொரு பிரபஞ்சத்திற்கும் இடையில் உடனடியாக தொடர்புகொள்வதற்கான வழிகள் இருக்கலாம், ஆனால், திரைப்படங்களில் இருப்பதைப் போல நடப்பதற்கான வாய்ப்பு ஒரு புனைவு."

ஃபியர்ரோ படத்தைப் பார்த்தார், அது வெளிப்படுத்தும் மனித உணர்ச்சிகளை ரசிக்கிறார். ஆனால், அதற்கு அறிவியல் அடிப்படை ஏதுமில்லை.

மல்டிவர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒரு விளைவு

மல்டிவர்ஸ் என்பது பல்வேறு கோட்பாடுகளின் விளைவாக உருவானது என்பது விஞ்ஞானிகள் கருத்து.

"மல்டிவர்ஸ் குறித்த பார்வை உண்மையில் ஒரு கோட்பாடு அல்ல; மாறாக கோட்பாட்டு இயற்பியல் பற்றிய நமது தற்போதைய புரிதலின் விளைவு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்த வேறுபாடு முக்கியமானது " என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தத்துவார்த்த இயற்பியல் பேராசிரியர் யூஜின் லிம் எழுதுகிறார்.

"நாங்கள் எங்கள் கைகளை மேலே தூக்கி 'ஒரு மல்டிவர்ஸ் உண்டாகட்டும்' என்று கூறவில்லை. மாறாக, பிரபஞ்சம் பல முடிவிலிகளில் ஒன்றாக இருக்கலாம் என்ற எண்ணம் தற்போதைய குவாண்டம் மெக்கானிக்ஸ் மற்றும் ஸ்ட்ரிங் தியரி போன்றவற்றிலிருந்து வருகிறது ."

‘இணையான பிரபஞ்சங்கள் குறித்த கோட்பாடு கணிதம் மட்டுமல்ல - இது சோதிக்கத்தக்க அறிவியல் கருத்து‘என்ற தலைப்பில் 2015 இல் The Conversation இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் இது சுட்டிக்காட்டப்பட்டது.

"ஓயாத விரிவாக்கம்" என்று அழைக்கப்படும் அண்டவியல் கோட்பாடும் இயல்பாக மல்டிவர்ஸ் குறித்த கருத்துக்கு இட்டுச் செல்கிறது என்கிறார் மினிக்.

பெருவெடிப்பு நடந்த பிறகான நேரத்தில் பேரண்டம் அதிவேகமாக விரிவடைந்தது என்று அண்ட விரிவாக்க கோட்பாடு கூறுகிறது.

"இப்போது பிரபஞ்சத்தின் விரைவான அதிவேக விரிவாக்கம் ஒருபோதும் நிற்காது மற்றும் உண்மையில், இந்த செயல்பாட்டில் பல பிரபஞ்சங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் என்று பரிந்துரைக்கும் சில தர்க்கரீதியான கோட்பாடுகள் உள்ளன."

குமிழ்கள்

மல்டிவர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியற்பியல் பேராசிரியரான அண்டவியல் நிபுணர் ஜோ டன்க்லே பிபிசி முண்டோவிடம் மல்டிவர்ஸ் என்பது ஒரு கோட்பாடு, ஆனால் "அது என்னவாக இருக்க முடியும் என்பதற்கு பல சாத்தியமான மற்றும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன" என்று கூறுகிறார்.

"பொதுவாக சொன்னால், இப்போது பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும், அவற்றை நீங்கள் தனித்தனி குமிழ்கள் என்று நினைக்கலாம் ."

"மற்றும் அவை ஒவ்வொன்றிலும், பொருள்கள் கொஞ்சம் வித்தியாசமாக செயல்படலாம், ஒருவேளை இயற்கையின் வெவ்வேறு மாறிலிகளுடன் அவை செயல்படலாம்."

"இருப்பினும், இந்த தனித்தனி குமிழ்கள் வழியாக நாம் பயணிக்க முடியாது என்பதால் நாம் ஒரு மல்டிவர்சின் ஒரு பகுதியாக இருக்கிறோமா என்பதை நிரூபிக்க இயலாது."

டங்க்லீ இந்தப் படத்தைப் பார்க்கவில்லை, எனவே அது குறித்து அவரிடம் எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் நான் இதை எழுதும் போது, படத்தில் ஈவ்லின் எப்படி ஒரு யதார்த்தத்திலிருந்து இன்னொரு யதார்த்த நிலைக்கு தாவிச் செல்கிறார் என்பதை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

"இணையான பிரபஞ்சங்கள்" என்ற யோசனை படத்தில் ஒரு உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது, ஒரு துல்லியமான அறிவியல் அர்த்தத்தில் அல்ல," என்று மினிக் கூறுகிறார்.

இரண்டு கருத்துகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்துகிறார். ஒருபுறம், மல்டிவர்ஸ் என்பது ஒரு அண்டவியல் கருத்து, மறுபுறம், குவாண்டம் இயந்திரவியலுக்கு அளிக்கப்படும் பல்லுலக விளக்கம் இது என்கிறார் அவர்.

மல்டிவர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

1957 ஆம் ஆண்டில், ஹக் எவரெட் III பல உலக விளக்கத்தை உருவாக்கினார்.

குவாண்டம் அளவீடு தொடர்பான குழப்பம் அளிக்கும் சிக்கலுக்கு ஒரு தீர்வைத் தேடிக்கொண்டிருந்தார் அவர்.

செவ்வியல் இயற்பியல் காலத்தில் பார்க்கப்பட்ட ஒரு பொருள்கள், எடுத்துக்காட்டாக ஒரு பந்து, ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு வரையறுக்கப்பட்ட ஒரு பாதையில் பயணித்துச் செல்லும். ஆனால், எலக்ட்ரான் போன்ற பிளக்கமுடியாத அடிப்படைத் துகள்கள் இரு புள்ளிகளுக்கு இடையில் எந்தப் பாதையில் வேண்டுமானாலும் நகரலாம் என்பதை மினிக் நினைவூட்டுகிறார்.

தி மெனி வேர்ல்ட்ஸ் ஆஃப் ஹக் எவரெட் III என்ற புத்தகத்தில் , பீட்டர் பைர்ன் இப்படி விளக்குகிறார்: "தர்க்கரீதியாக, ஒரு அணுத் துகள் வெளியிலும் காலத்திலும் ஒரே நேரத்தில் பல திசைகளில் நகர்வது சாத்தியம். ஆனால், ஒரு துகளுடன் நாம் ஊடாடும்போது, அதை அளவிடும்போது, அதை ஒரு இடத்தில் மட்டுமே காண்கிறோம், பல இடங்களில் அல்ல,”

ஒரு விஞ்ஞானி ஒரு அணு துகளின் நிலையை அளவிடும் போது, அது தன்னைப் பல பிரதிகளாகப் பிரித்துக் கொள்கிறது என்று கூறுவது கணித ரீதியாக ஒத்துப்போகிறது என்று எவரெட் காட்டினார்.

ஒவ்வொரு பிரதியும் வெவ்வேறு பிரபஞ்சத்தில் வாழ்கிறது. மேலும் ஒவ்வொரு பிரதியும் துகளை வெவ்வேறு நிலையில் பார்க்கிறது.

அனைத்து நகல்களின் தொகுப்பு ஒரு மல்டிவர்ஸில் உள்ள சாத்தியமான அனைத்து துகள் நிலைகளின் தொகுப்பையும் உள்ளடக்கியது.

எவரெட்டின் கூற்றுப்படி, மல்டிவர்ஸில் உள்ள ஒவ்வொரு பிரபஞ்சமும் ஒரு மரத்தைப் போல , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாத தனி ஆனால் இணையான உலகங்களாக அது தொடர்ந்து கிளைக்கிறது.

எவரெட்டின் இந்தக் கருத்தாக்கம், அவரது காலத்தின் முன்னணி இயற்பியலாளர்களால் ஏளனத்துடன் பார்க்கப்பட்டது.

இன்றும், இது மிகவும் சர்ச்சைக்குரிய இயற்பியல் கோட்பாடுகளில் ஒன்றாகவே பார்க்கப்பட்டாலும், சிலரால் இது நம்பிக்கைக்குரியதாகவும் கருதப்படுகிறது.

குவாண்டம் உலகம்

மல்டிவெர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மல்டிவர்ஸ் கருத்தை பல உலக விளக்கத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று மினிக் எச்சரிக்கிறார்.

குவாண்டம் கோட்பாட்டைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, "வெவ்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட பல கிளாசிக்கல் உலகங்களை" நாம் கற்பனை செய்ய முனைகிறோம், ஆனால் நாம் உண்மையில் கற்பனை செய்ய வேண்டியது "ஒரு குவாண்டம் உலகைப்பற்றி, பல கிளாசிக்கல் உலகங்களைப்பற்றி அல்ல" என்கிறார் அவர்.

நாம் கிளாசிக்கல் சொற்களில் விண்வெளி நேரத்தைப் பற்றி சிந்திக்க முனைவதால் அது நிகழ்கிறது, "ஆனால் நமக்கு குவாண்டம் விண்வெளி நேரம் பற்றிய புதிய கருத்து தேவை, அது குவாண்டம் ஈர்ப்பு மற்றும் அந்த சூழலில் குவாண்டம் கோட்பாடு என்பது என்ன என்ற கேள்விக்கு நம்மை இட்டுச் செல்கிறது."

பல உலகம் பற்றிய விளக்கத்தில், குவாண்டம் கோட்பாட்டில் உள்ள புதிர்களை எதிர்கொள்ள மக்கள் "இணையான பிரபஞ்சங்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர் என்கிறார் அவர்.

அத்தகைய புதிர்களில் ஒன்று சூப்பர்பொசிஷன் என்பதாகும்.

எலக்ட்ரான் போன்ற குவாண்டம் துகள் "கோட்பாட்டு அளவில், ஒரே நேரத்தில், வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்றாலும், உண்மையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் குறிப்பிட்ட இடத்திலேயே அவற்றைப் பார்க்க முடியும்"

"நம்மைப் போன்ற பெரிய பொருள்களுக்கு சூப்பர்பொசிஷன் சாத்தியமில்லை. நாம் சுவர்கள் வழியாக செல்ல முடியாது, ஆனால் கோட்பாட்டளவில் எலக்ட்ரான்களால் முடியும்."

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அண்டவியல் நிபுணரும், கணிதப் பேராசிரியருமான ஜோர்ஜ் எஃப்ஆர் எல்லிஸ், ஸ்டீபன் ஹாக்கிங்குடன் இணைந்து The Large Scale Structure of Space-Time என்ற கோட்பாட்டை எழுதியுள்ளார்.

அவர், மல்டிவர்ஸ் ஏன் இயற்பியலில் மிகவும் ஆபத்தான கருத்தாக இருக்கலாம் என்ற தலைப்பிலான கட்டுரையை 2014ம் ஆண்டு சயிண்டிபிக் அமெரிக்கன் ஆய்விதழில் எழுதினார்.

மல்டிவர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மல்டிவர்ஸ் குறித்து அந்தக் கட்டுரையில் எழுதிய பின்வரும் கருத்து பல அண்டவியலாளர்களை ஈர்த்தது:

"நம்மைச் சுற்றி நாம் காணும் விரிவடையும் பிரபஞ்சம் ஒன்றல்ல; பில்லியன் கணக்கான பிற பிரபஞ்சங்களும் வெளியில் உள்ளன."

பின்னர், அது குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டார். "மல்டிவர்ஸ் என்பது என்பது கணித ரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும் நிரூபிக்கப்படவேண்டிய கருத்து,” என்று அவர் குறிப்பிட்டார்.

"மற்ற பிரபஞ்சங்களின் இருப்பு நிரூபிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை, அல்லது அதை எப்போதும் நிரூபிக்க முடியாது. மல்டிவர்ஸ் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், இயற்பியல் யதார்த்தத்தைப் பற்றிய நமது கருத்தை பரந்த அளவில் விரிவுபடுத்துவதோடு, 'அறிவியல்' என்றால் என்ன என்பதை மறைமுகமாக மறுவரையறை செய்கிறார்கள்."

மேலும் இது "இணையான பிரபஞ்சங்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்; இது நிரூபிக்கப்படவில்லை அறிவியல் அடிப்படையிலான தத்துவ ஊகங்களில் எந்தத் தவறும் இல்லை, மல்டிவர்ஸ் என்பது அப்படிப்பட்ட ஒரு ஊகம்தான்." என்று அந்தக் கட்டுரை முடிவு கூறுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரான ஆடம் ஃபிராங்க், ஒரு கட்டுரையில் இப்படி எழுதினார்: "இணை யதார்த்தங்கள் நிலவும் மல்டிவர்ஸ் இருப்பதாக நம்புவதற்கு அனுபவ ரீதியாக ஆதாரபூர்வமான அறிவியல் காரணம் எதுவும் இல்லை."

மல்டிவர்ஸ் குறித்த பார்வையில் விஞ்ஞான உலகம் இரு முகாமாகப் பிரிந்து நிற்கிறது. ஆனால், எந்தக் கருத்தாக இருந்தாலும், எந்தக் கருதுகோளாக இருந்தாலும் அது அறிவியலை செறிவூட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: