You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய மாணவி 'ரஞ்சனி ஸ்ரீநிவாசன்' யார்? பின்னணி தகவல்கள்
கடந்த ஆண்டு கொலம்பியா பல்கலைக் கழக வளாகத்தில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவி ரஞ்சனி ஶ்ரீநிவாசன் அமெரிக்காவில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஹாமில்டன் அரங்கை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்ட மாணவர்கள் சிலரை தற்காலிக நீக்கம் செய்தும், சிலரை கல்வி நிறுவனத்தில் இருந்து முழுமையாக நீக்கம் செய்தும் அந்த பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் யூத எதிர்ப்பை கையாள்வதில் தோல்வி அடைந்ததாகக் கூறி அந்த கல்வி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.
கொலம்பிய பல்கலைக் கழகத்தில் படித்து வந்த செயற்பாட்டாளர் முகமது கலீல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கலீல் அமெரிக்க பெடரல் குடியேற்ற அதிகாரிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை (மார்ச் 13) அன்று பல்கலைக்கழக நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பல்கலைக்கழக நீதி வாரியம் (University Judicial Board (UJB)) முடிவெடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சில ஆண்டுகளுக்கு இடைக்கால தடை, பட்டம் வழங்குவதை நிறுத்தி வைப்பது மற்றும் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேற்றுவது என்று பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
பிபிசியின் அமெரிக்க கூட்டணி நிறுவனமான சி.பி.எஸ். இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், பல்கலைக் கழகம் அனுப்பியுள்ள மின்னஞ்சலின் படி ஒரு டஜனுக்கும் அதிகமான மாணவர்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை மீண்டும் பல்கலைக் கழகத்தில் சேர்ப்பது தொடர்பான முடிவுகளை பல்கலைக்கழகத்தின் அலுவலகமே (Columbia University Life's Office) மேற்கொள்ளும் என்று பல்கலைக்கழக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை முறையாக மேம்படுத்தும் நோக்கில் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியேறிய ரஞ்சனி ஶ்ரீநிவாசன்
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நகர்ப்புற மேம்பாடு என்ற பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வந்தவர் ரஞ்சனி ஶ்ரீநிவாசன்.
பாலத்தீனம் மற்றும் ஹமாஸுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களுக்கு ரஞ்சனி ஆதரவு தெரிவித்த காரணத்தால் அவருடைய விசா ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க உள்துறையும் ரஞ்சனி அமெரிக்காவில் இருந்து வெளியேறினார் என்பதை உறுதி செய்துள்ளது.
இத்துறையின் செயலாளர் கிறிஸ்டி நோயம், விமான நிலையத்தில் ரஞ்சனி சூட்கேசுடன் இருக்கும் வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
"அமெரிக்காவில் தங்கி படிக்க அனுமதிப்பது என்பது ஒரு சிறப்புரிமை. வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கும் போது உங்களிடம் இருந்து அந்த சிறப்புரிமை திரும்பப் பெறப்படும். மேலும் நீங்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
"கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒருவர் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு செயலியை பயன்படுத்தி சுயமாக நாட்டைவிட்டு வெளியேறுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றும் நோயம் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மார்ச் 5-ஆம் தேதி அன்று, அமெரிக்க உள்துறை அமைச்சகத்தால் ரஞ்சனியின் விசா ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு மேற்கூறிய செயலியை பயன்படுத்தி மார்ச் 11-ஆம் தேதி அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
யார் இந்த ரஞ்சனி ஶ்ரீநிவாசன்?
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி, ரஞ்சனி கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நகர்ப்புற திட்ட பிரிவில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்தார்.
அதே பல்கலைக் கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்ற அவர் உதவித்தொகை பெற்று மேற்படிப்பை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டிசைன் பிரிவில் அவர் பட்ட மேற்படிப்பு பயின்றார். இந்தியாவில் ஆமதாபாத் நகரில் உள்ள சி.இ.பி.டி. பல்கலைக் கழகத்தில் அவர் இளநிலை பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸுக்கு ஆதரவு அளித்ததைத் தவிர, ரஞ்சனியின் விசாவை ரத்து செய்ததற்கான வேறெந்த காரணங்களையும் அமெரிக்க அரசாங்கம் வழங்கவில்லை.
- சௌதி அரேபியாவும், கத்தாரும் பல சர்வதேச பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வது ஏன்?
- சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிய மோதல் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள்
- காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்பின் திட்டம் என்ன? - 5 கேள்விகளும் பதில்களும்
- பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் கட்டப்படும் காஸா - நீண்ட பயணத்திற்கு காத்திருக்கும் மக்கள்
கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்தது என்ன?
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹாமில்டன் அரங்கை ஆக்கிரமித்த கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தினார்கள்.
பல்கலைக் கழக அலுவலர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் அவர்கள் மீது எந்தவிதமான குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு செயற்பாட்டாளர் கலீல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சிரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கலீல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். லூசியானாவில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவர் புதன்கிழமை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
கலீல் மீதான நடவடிக்கை கல்லூரி வளாகங்களில் பேச்சுரிமை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பாளர்கள் அந்தஸ்து பெற்றவர்களை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
கலீல் போன்ற பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் ஹமாஸை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இவ்வாறு போராட்டம் நடத்தும் நபர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்திற்கு புறம்பாக போராட்டங்களை நடத்த அனுமதி அளிக்கும் பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)