You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியாவில் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிய மோதல் - நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்ட பொதுமக்கள்
- எழுதியவர், இயன் ஐக்மேன்
- பதவி, பிபிசி செய்திகள்
சிரியாவில் பாதுகாப்பு படைக்கும், அலவைட் மத சிறுபான்மையினருக்கும் இடையே பல நாட்களாக நடந்து வரும் மோதலில், நூற்றுக்கணக்கான அலவைட் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்நாட்டின் தலைவர் அகமது ஷாரா அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் அலவைட் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட சுமார் 30 "படுகொலைகளில்" சுமார் 745 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு செயல்படும் 'சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம்' (SOHR) தெரிவித்துள்ளது.
இந்தக் கூற்றுக்களை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
"நாம் முடிந்தவரை தேசிய ஒற்றுமையையும் சிவில் அமைதியையும் பாதுகாக்க வேண்டும். மேலும் கடவுளின் அருளால், இந்த இந்த நாட்டில் நாம் ஒன்றாக வாழ முடியும்" என்று அகமது ஷாரா கூறினார்.
இப்போது சிரியாவில் நடப்பவை, பஷர்-அல்-அசத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு "எதிர்பார்க்கப்பட்ட சாவால்களின்" ஒரு பகுதியாகும் என்று இடைக்கால அதிபர் அகமது ஷாரா, காணொளி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
வன்முறைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வகையில் வன்முறை தொடர்பாக ஒரு விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடலோர பகுதிகளான லடாகியா மற்றும் டார்டஸில் அவரது ஆதரவாளர்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நேரடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
லடாகியா மற்றும் டார்டஸ் இடையே சுமார் பாதிவழியில் அமைந்துள்ள பனியாஸ் நகரில் செயல்படும் ஒரு எரிவாயு மின்சார நிலையத்தில் அரசு படைகளுக்கும், அசத் ஆதரவாளர்களுக்கும் இடையே சண்டை மூண்டிருப்பதாக சிரிய ஊடகங்கள் ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய வன்முறை வியாழனன்று அரசு படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. அப்போது முதல் அசத் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே மோதல்கள் மோசமடைந்துள்ளது.
சிரியாவின் அதிபர் பதவியில் இருந்து பஷர்-அல்-அசத் அகற்றப்பட்ட பிறகு, அவருக்கு ஆதரவு அளித்த முக்கிய கடலோர மாகாணங்களான லடாகியா மற்றும் டார்டஸில் இருந்து, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. பஷர்-அல்-அசத், அலவைட் மதப்பிரிவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படைகளை சேர்ந்தவர்களையும் கணக்கிட்டால், கடந்த 4 நாட்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. மோதலில் அரசின் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 125 பேரும், அசத்துக்கு ஆதரவான படையை சேர்ந்த 148 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிளர்ச்சியாளர்கள் அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்து சிரியாவில் நடந்த மிக மோசமான மோதல்களில் இது ஒன்றாகும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அலவைட்டுகள், சிரியாவின் மக்கள் தொகையில் சுமார் 10% இருக்கின்றனர். சிரியாவில் சுன்னி இஸ்லாமியர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர்.
சிரியாவின் பாதுகாப்பு படையினருக்கு எதிரான ''சதி தாக்குதல்களுக்கு'' பிறகு, அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்நாட்டின் சனா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேறியதாக கூறப்படும் இந்த மோதல் அலவைட் மக்களை "திகிலூட்டும் நிலையில்" ஆழ்த்தியுள்ளது என்று சிரியா ஆர்வலர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பிபிசியிடம் தெரிவித்தார்,
லடாகியாவில் உள்ள ஹ்மெய்மிம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு ரஷ்ய ராணுவ தளத்தில் ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் பகிர்ந்த வீடியோ காட்சிகள், அந்த ராணுவ தளத்துக்கு வெளியே டஜன் கணக்கான மக்கள், "அனைத்து மக்களும் ரஷ்யாவின் பாதுகாப்பை விரும்புகிறார்கள்" என்று கோஷமிடுவதைக் காட்டியது.
இதற்கிடையில், டஜன் கணக்கான குடும்பங்கள் அண்டை நாடான லெபனானுக்கு தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் கடலோர பகுதிகளில் "பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த மிகவும் கவலையளிக்கும் செய்திகளால்", தான் "மிகுந்த அச்சத்தில்" இருப்பதாக சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கெய்ர் பெடர்சன் கூறினார்.
சிரியாவை "ஸ்திரதன்மை நோக்கிக்கொண்டு செல்ல" மற்றும் "நம்பகமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மாற்றத்துக்கு", ஆபத்து விளைவிக்கும் செயல்களில் இருந்து அனைத்து தரப்பினரும் விலகி இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)