You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் கட்டப்படும் காஸா - நீண்ட பயணத்திற்கு காத்திருக்கும் மக்கள்
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, பிபிசி ராஜ்ஜீய செய்தியாளர்
நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே.
இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம்.
"இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உள்கட்டமைப்புகள் இல்லை" என்று காஸா பத்திரிகையாளர் காடா எல்-குர்த் கூறுகிறார்.
இவர் பல மாதங்களாக டெய்ர் எல்-பலாவில் தங்கியிருந்தார், இப்போது வடக்கு காஸாவிற்கு திரும்பிச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்.
"நாங்கள் மீண்டும் எங்களை தொடக்கத்திலிருந்து நிறுவிக்கொள்ளவேண்டும், பூஜ்ஜியத்திலிருந்து."
உடனடித் தேவைகளான உணவும், தங்கும் இடமும் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
"இந்த சண்டை தொடங்கியது முதல் நாங்கள் பார்த்திராத அளவு உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன," என ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் முகமையான UNRWA-ஐ சேர்ந்த சாம் ரோஸ் சொல்கிறார்.
"எனவே உணவு, தண்ணீர், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் போன்ற அடிப்படை தேவைகளை எங்களால் பூர்த்தி செய்ய முடிகிறது. ஆனால் அதைத் தாண்டி மிக நீண்ட பாதை இது."
காஸாவின் இடிபாடுகளில் இருப்பிடங்களை கண்டுபிடிப்பது மிகப்பெரிய நீண்ட கால சவால்களில் முதன்மையானது.
யுத்தத்தின் தொடக்க வாரங்களில் 70,000 பேர் காஸா நகரையும் அதன் சுற்றுப்புறங்களையும் விட்டு வெளியேறினர். எவ்வளவு என தெரியாத அளவிலானவர்கள்- ஒருவேளை கிட்டதட்ட 40,000 பேர், தங்களது இடங்களிலேயே இருந்தனர்.
காலி செய்யப்பட்ட இடங்களில் சில முற்றாக அழிக்கப்பட்டன, மற்றவை பெயரளவில் பிழைத்திருக்கின்றன.
அக்டோபர் 2023 முதல் காஸாவில் 70% வீடுகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போருக்கு முன் 2,00,000 மக்கள் தொகையிருந்த ஜபலியா கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. இந்த பகுதி மக்களில் பாதி பேர் காஸாவின் மிகப் பழமையானதும், மிகவும் பெரியதுமான ஒரு அகதிகள் முகாமில் வசிக்கின்றனர்.
கூடாரத்தில் வசிக்கும் நாட்கள் பலருக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவு.
ஹாமாஸால் நடத்தப்படும் காஸா அரசு ஊடக அலுவலகம் உடனடியாக 135,000 கூடாரங்கள் மற்றும் மூடிய வாகனங்கள் (கேரவன்) தேவை என அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் எல்லையில் தேங்கிக்கிடந்த 20,000 கூடாரங்களையும், பெருமளவிலான தார்ப்பாய் மற்றும் படுக்கைகளையும் தற்போது கொண்டுவர முடிவதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஆனால் தங்குமிடத்திற்கு திடீரென ஏற்பட்டுள்ள தேவையை பூர்த்திசெய்ய போராடவேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளது.
"நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உலகில் எங்குமே இவ்வளவு கூடாரங்கள் தயார் நிலையில் இல்லை," என்கிறார் ரோஸ்.
ஏற்கனவே இருப்பிடத்திற்கான தேவை அதிகமாக உள்ள நிலையில், வீடுகளை விட்டு ஓராண்டுக்கு முன் வெளியேறியவர்கள் திரும்பவந்து இருக்க இடம் தேடும்போது, இருப்பிடத்திற்கான அழுத்தம் அதிகரிக்கும் என யுத்தகாலம் முழுவதும் வடக்கிலேயே இருந்தவர்கள் அஞ்சுகிறார்கள்.
"இது ஒரு மிகப்பெரிய பிரச்னை, ஏனென்றால் மக்கள் இதுவரை தெற்கில் உள்ள உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்," என்கிறார் ஜாபலியாவை விட்டு வெளியேறினாலும் வடக்கை விட்டு செல்லாத அஸ்மா தாயே.
"இப்போது அவர்கள் அந்த வீடுகளை காலி செய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டும். எனவே ஒரு புது வகையான இடமாற்றம் தொடங்கியுள்ளது.''
தனது கட்டடத்தில் ஏற்கனவே நான்கு குடும்பங்கள் வசிப்பதாகவும், மேலும் மூன்று குடும்பங்களை எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார் அஸ்மா. போதிய இடமின்மையும், தனிமையின்மையும் ஏற்கனவே பிரச்னைகளை உருவாக்கியிருப்பதாகவும் கூறுகிறார்.
அகதிகள் திரும்புவது மேலும் பல விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது.
" உறையவைத்த மீன் வாங்குவதற்காக இன்று சந்தைக்கு முதல் முறையாக சென்றேன்," என்றார் ஆஸ்மா.
"ஆனால் ஏற்கனவே வியாபாரிகள் விலையை உயர்த்தத் தொடங்கிவிட்டனர்."
ஏற்கனவே அரிதான தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தின் தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு கஷ்டங்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், வீடு திரும்புவோர் தங்களது நிம்மதியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
"ஒருவழியாக நாங்கள் ஆறுதலை கண்டறியக்கூடிய வடக்கிற்கு திரும்புவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்." என ஒருப் பெண் பிபிசியிடம் தெரிவித்தார்.
"தெற்கில் நாங்கள் அனுபவித்த துன்பங்களை விட்டுவிட்டு, 'பெய்ட் ஹனவுனின்' கண்ணியத்திற்கு திரும்புகிறோம்."
காஸாவின் வடகிழக்கு மூலையில் இஸ்ரேலுடனான எல்லைக்கு அருகில் உள்ள பெய்ட் ஹனவுன் அடையாளம் தெரியாத அளவு உருகுலைந்திருப்பதாக அங்கிருந்து அண்மையில் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ எகிப்து அல்லது ஜோர்டானுக்கு செல்லவேண்டும் என டொனால்ட் டிரம்ப் ஓர் ஆலோசனையை முன்வைத்துள்ளர்.
இந்த ஆலோசனைக்கு எகிப்திய மற்றும் ஜோர்டான் அதிகாரிகள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். திடீரென அகதிகள் வருகை அதிகரித்தால் ஏற்படும் சமூக மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளை நினைத்து இருநாடுகளும் அஞ்சுகின்றன.
"ஜோர்டான், ஜோர்டான் மக்களுக்கானது, பாலஸ்தீனம் பாலஸ்தீனர்களுக்கானது," என்றார் ஜோர்டானின் வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடி. அவரது நாட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 2.4 மில்லியன் பாலத்தீன அகதிகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரப்பின் ஆலோசனைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் அமைச்சரவையில் உள்ள வலதுசாரியினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
காஸாவை இஸ்ரேலுடன் இணைக்கவேண்டும் என்பதற்கு ஆதரவானவரான நிதியமைச்சர் பெஜலெல் ஸ்மோட்ரிச் அதை ஒரு "சிறந்த திட்டம்" என விவரித்தார்.
கடந்த ஆண்டு தனது ஆதரவாளர்களின் மாநாட்டில் பேசிய அவர், " காஸாவின் மக்கள்தொகை இரண்டு ஆண்டுகளில் இப்போது இருப்பதில் பாதியாக குறைக்கப்படும்" என கூறியிருந்தார்.
காஸா உடனடியாக புனரமைக்கப்பட்டு, காஸா மக்களுக்கு சிறந்த எதிர்காலத்திற்கு நம்பிக்கை விதைக்கப்படாவிட்டால் ஸ்மோட்ரிச் அவர் நினைத்ததை சாதிக்கக்கூடும்.
"முதல் சில மாதங்களில் என்ன நடக்கிறது என பார்ப்பார்கள் என நினைக்கிறேன்," என்கிறார் பத்திரிகையாளர் காடா எல்-குர்த்."அவர்கள் எல்லாவற்றையும் இழந்து, மறுசீரமைப்பு பணிகள் தாமதமனால், மக்கள் காஸாவில் தங்க மாட்டார்கள் என நினைக்கிறேன்."
அக்டோபர் 2023-ல் யுத்தம் தொடங்கியது முதல் சுமார் 150000 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.
வசதி படைத்தவர்கள் நல்ல எதிர்காலத்தை தேடிக்கொண்டு அரபு நாடுகள் அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக சொல்லும் காடா இருப்பதிலேயே ஏழைகளே எஞ்சியிருப்பார்கள் என்றும் கூறுகிறார்.
"மக்களுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை வேண்டும் என்ற டிரம்பின் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன்." என்று அவர் சொல்கிறார். " அது ஏன் காஸாவில் இருக்கக்கூடாது?"
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)