கோவை மெட்ரோ ரயில் திட்டம் எப்போது தொடங்கும்? 13 ஆண்டுகளாகியும் இன்னும் தாமதம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2011ஆம் ஆண்டில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தகுதியான நகரங்களாக, இந்தியாவில் 19 இரண்டாம் நிலை நகரங்களை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தேர்வு செய்தது.
அந்த பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம்பெற்றிருந்த ஒரே நகரம், கோயம்புத்தூர் மட்டுமே.
அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த கொச்சி, புனே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், சுமார் 13 ஆண்டுகளாகியும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. என்ன காரணம்?
கோவை: எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் உயர் அழுத்த மின் கோபுர திட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு ஏன்?

முதல் 10 ஆண்டுகளில் நடந்தது என்ன?
மத்திய அரசு அறிவித்த மெட்ரோ திட்டத்தை எதிர்த்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, மோனோ ரயில் திட்டத்தையே தமிழக அரசு முன்னெடுக்கும் என்று அறிவித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டில், கோவையிலுள்ள தொழில் அமைப்புகள் இணைந்து, ‘மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீதரனை கோவைக்கு அழைத்து வந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கமான ‘ராக்’ அமைப்பு செய்திருந்தது. அவர் கோவையில் 3 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். பின்பு தன்னுடைய பரிந்துரையை தொழில் அமைப்பினரிடம் பகிர்ந்து கொண்டார்.
‘‘கோவையில் கள ஆய்வு செய்த ஸ்ரீதரன், நகரின் வரைபடம், முக்கிய சாலைகள், வாகன விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் பார்த்து விட்டு, அவர் மெட்ரோ ரயிலே கோவைக்கு சிறந்தது என்று பரிந்துரைத்தார். ‘லைட் மெட்ரோ’ திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்றார். சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.2 கோடி மட்டுமே போதும் என்றார். ’’ என்று அன்றைய நிகழ்வுகளை விரிவாக விளக்கினார் ‘ராக்’ அமைப்பின் கெளரவ செயலாளர் ரவீந்திரன்.

கடந்த 2017ஆம் ஆண்டில், சட்டசபையில் பேசிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். அதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்’’ என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility study) மற்றும் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report -DPR) தயாரிக்க இரு டெண்டர்களை விட்டது. இதற்குத் தேர்வான சிஸ்ட்ரா என்ற ஆலோசனை நிறுவனம் (SYSTRA MVA Consulting (India) Ltd. – RITES Ltd) கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே சாத்தியக்கூறு அறிக்கையை தாக்கல் செய்தது.
கடந்த 2021ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கு முன், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், கோவையில் ரூ.6,683 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.
சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதில்
அதன்பின், திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட் (2021–2022) கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து, அதிமுகவைச் சேர்ந்த தொண்டாமுத்துார் எம்எல்ஏ வேலுமணி, பாஜகவைச் சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகிய இருவருமே கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ‘‘கோவையுடன் சேர்த்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.’’ என்று பதிலளித்தார்.

திட்ட அறிக்கை தயார்
கடந்த 2023-இல், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை சிஸ்ட்ரா நிறுவனம் தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்ட 5 வழித்தடங்களில் முதற்கட்டமாக (Phase 1) இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அதன்பின், அரசாணை வெளியிடப்பட்டு, நிலவியல் சர்வேயும் மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்ட அறிக்கை, 2023 ஜூலையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு 2024 பிப்ரவரியில் ஒப்புதலும் தரப்பட்டது. பின்பு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி கோரி அனுப்பப்பட்டது. கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை, 655 பக்கங்களிலும், மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை 936 பக்கங்களிலும் அமைந்திருந்தது.
மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2024 மே மாதத்துக்கு முன்பாக தமிழக அரசு சமர்ப்பித்த இந்த அறிக்கையை, சில நாட்களிலேயே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்? மத்திய அமைச்சகம் பதில்
மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அரைகுறையாக இருந்ததால், முழுமையான அறிக்கையை அனுப்புமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, கடந்த மே மாதத்திலேயே திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
அதாவது, 2017 மெட்ரோ ரயில் திட்டக் கொள்கையின்படி, மெட்ரோ திட்டத்துடன் லைட் மெட்ரோ போன்ற மாற்று திட்டம், பி.ஆர்.டி.எஸ்., பொது போக்குவரத்து திட்டங்களுக்கான பிற விவரங்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த திட்டத்தை (Comprehensive Mobility Plan and Alternative Analysis Report) அனுப்புமாறு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும், அக்டோபர் வரை மீண்டும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலில் அந்த அமைச்சகம் பதில் அளித்திருந்தது.

பட மூலாதாரம், FACEBOOK/M.K.STALIN
இந்நிலையில், ரூ.63,246 கோடி மதிப்பிலான சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த மாதத்தில் ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 26 அன்று, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் தொடர்பாக, சென்னையில் முக்கியக் கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்க வந்திருந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லாலிடம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

2018-ல் கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநரான சதீஷ் பிபிசி தமிழிடம், ‘‘கோவை திட்டக்குழுமப் பகுதிக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் இணைத்து, முழுமையான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு விரைவாக அனுப்ப வேண்டுமென்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளை வலியுறுத்தியிருக்கிறோம்.’’ என்றார்.
கடந்த ஜூலையிலேயே கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான தேவைகள் குறித்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) அதிகாரிகள் கோவைக்கு வந்து கள ஆய்வு செய்ததையும் குறிப்பிட்ட சதீஷ், ‘‘ஏற்கெனவே 10 ஆண்டுகள் தாமதமாகிவிட்ட நிலையில், இனியும் தாமதிப்பது கோவையின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாகிவிடும். இரு அரசுகளும் இணைந்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.’’ என்று வலியுறுத்தினார்.

மத்திய அரசிடம் முழு அறிக்கையை சமர்ப்பிப்பது எப்போது?
மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய முழுமையான அறிக்கை குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக்கிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘எல்லா அறிக்கைகளும் தயாராகி விட்டன. முழுமையான அறிக்கை, இன்னும் சில நாட்களில் சமர்ப்பிக்கப்பட்டு விடும். இனியும் தாமதமாக வாய்ப்பில்லை. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கைககள் எடுக்கப்படும்.’’ என்றார்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம்
மொத்த துாரம் : 34.8 கி.மீ.
மொத்த மெட்ரோ ஸ்டேஷன்கள் : 32
உயர் மட்டப்பாதை உயரம் : 13 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை
ரயில் பெட்டிகள் எண்ணிக்கை : 3
பயணிகள் தோராய எண்ணிக்கை : 200 முதல் 300 வரை
கால இடைவெளி : 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
கோவை சந்திப்பு முன் : 2 அடுக்கு மெட்ரோ ஸ்டேஷன்
திட்டப்பணிக்கான காலம் : 3 முதல் மூன்றரை ஆண்டுகள்
கையகப்படுத்த வேண்டிய நிலம் : 73 ஏக்கர்
(வழித்தடம்–35 ஏக்கர், பணிமனை–38 ஏக்கர்)
முதல் வழித்தடம்: அவிநாசி சாலை
அமைப்பு: பாலத்தின் இடது புறம் சற்று உயரமான உயர்மட்டப்பாதை
துாரம்: 20.4 கி.மீ. (உக்கடம்–நீலாம்பூர்)
மெட்ரோ ஸ்டேஷன் எண்ணிக்கை : 17
இரண்டாம் வழித்தடம்-சத்தியமங்கலம் சாலை
அமைப்பு: சாலை நடுவில் உயர்மட்டப்பாதை
துாரம்: 14.4 கி.மீ. (கோவை சந்திப்பு–வலியம்பாளையம் பிரிவு)
மெட்ரோ ஸ்டேஷன் எண்ணிக்கை : 14












