நீதிக்கான போராட்டத்தில் பில்கிஸ் பானுவுடன் துணைநின்ற மூன்று பெண்கள்

பில்கிஸ் பானு வழக்கு
படக்குறிப்பு, ரேவதி லால், சுபாஷினி அலி, ரூப்ரேகா வர்மா
    • எழுதியவர், சுசீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தபோது, ​​​​இருட்டில் ஒளிக்கதிர்கள் தோன்றின. அந்த ஒளிக்கதிர்களை நாம் நம்மை நோக்கி ஈர்ப்பது போன்று அது இருந்தது."

இது ரேவதி லாலின் வார்த்தைகள். அவர் குஜராத் கலவரம் குறித்து 'தி அனாடமி ஆஃப் ஹேட்' (The Anatomy of Hate) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு வழக்கில் இவரும் ஓர் மனுதாரர்.

தொழில் ரீதியாக பத்திரிகையாளரான ரேவதி லால், ஒருநாள் மாலை தனக்கு சக பத்திரிகையாளரிடமிருந்து அழைப்பு வந்ததாக கூறுகிறார். இந்த விவகரத்தில் பொதுநல மனு தாக்கல் செய்கிறீர்களா என அந்த பத்திரிகையாளர் ரேவதி லாலிடம் கேட்டபோது, அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டார்.

டெல்லியை சேர்ந்த ரேவதி லால், "குஜராத் கலவரத்திற்கு பின், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றினேன். அப்போது, இந்த வழக்கு என் மனதில் இருந்தது. இந்த வழக்கில் 11 பேர் தண்டனை பெற்றபோது, பில்கிஸ் பானு செய்தியாளர்களை சந்தித்த சமயத்தில் ​​நானும் அங்கு இருந்தேன்" என்கிறார்.

ரேவதி லால் கூறுகையில், "பில்கிஸ் பானுவை நான் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. ஏனெனில் அவருடைய துன்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அவருடைய பொறுமை கற்பனைக்கு அப்பாற்பட்டது. எனவே, எனக்கு அழைப்பு வந்தவுடன், நான் உடனடியாக அதற்கு ஒப்புக்கொண்டேன். இந்த எண்ணம் எனக்கு ஏன் வரவில்லை என தோன்றியது” என்கிறார்.

பில்கிஸ் பானு வழக்கு

பட மூலாதாரம், FB/REVATI LAUL

படக்குறிப்பு, பில்கிஸ் பானுவை தனிப்பட்ட முறையில் தான் சந்தித்ததே இல்லை என்கிறார் ரேவதி லால்

”இதுதான் நீதி”

உத்தர பிரதேசத்தின் ஷாம்லியில் 'சர்பரோஷி அறக்கட்டளை' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் ரேவதி லால், சுபாஷினி அலி மற்றும் ருப்ரேகா வர்மா ஆகியோர் ஏற்கனவே இந்த வழக்கை கவனித்து வந்தார்கள் என்று கூறுகிறார்.

இந்த முயற்சியின் வெற்றி சுபாஷினி அலியையே சேரும் என்கிறார் ரேவதி லால்.

பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு மற்றும் அவரது மகளை கொலை செய்த குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜன. 08) ரத்து செய்தது. மேலும், அவர்கள் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தண்டனையை குறைப்பது குஜராத் அரசின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த முடிவுக்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த பில்கிஸ் பானு, "இதுதான் நீதி. எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மற்றும் அனைத்து பெண்களுக்கும் சம நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி" என்று கூறினார்.

பில்கிஸ் பானு வழக்கு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 2008-ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 11 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது

விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள்

பில்கிஸ் பானு வழக்கில் பல ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

ஆனால், முன்கூட்டியே விடுதலை கோரி குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றக் கதவைத் தட்டியதால், இதுகுறித்து முடிவெடுக்க குஜராத் அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

குஜராத் அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில், குஜராத் அரசு 2022-ஆம் ஆண்டு 11 குற்றவாளிகளையும் விடுவித்தது.

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

பில்கிஸ் பானு வழக்கு
படக்குறிப்பு, பெண்கள் எந்த சமயத்திலும் தைரியத்தை இழக்கக் கூடாது என்கிறார் சுபாஷினி அலி.

”நீதிபதிகளின் துணிச்சலுக்குப் பாராட்டு”

முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான சுபாஷினி அலி கூறும்போது, ​​“பிரதமர் ஒருபுறம் செங்கோட்டையில் இருந்து உரை நிகழ்த்தியதையும் மறுபுறம் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டதையும் பார்த்தோம்” என்கிறார்.

அவர் கூறுகையில், "இந்த சம்பவத்திற்குப் பிறகு, ’இதுதான் நீதியின் முடிவா’ என்று பில்கிஸ் ஒரு பேட்டியில் கேட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியது போன்று உணர்ந்தேன்” என்கிறார் அவர்.

இதைத் தொடர்ந்து சுபாஷினி அலிக்கு உச்ச நீதிமன்றக் கதவைத் தட்டும் யோசனை வந்தது. இந்த போராட்டத்தில் பலர் ஈடுபட்டதாகவும், அதில் வழக்குரைஞரும் எம்.பி.யுமான கபில் சிபல், அபர்ணா பட் மற்றும் பலர் ஒன்றிணைந்ததாகவும் இந்த வழக்கில் தான் முதல் மனுதாரர் ஆனதாகவும் அவர் கூறுகிறார்.

2002-ஆம் ஆண்டு சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் பில்கிஸ் பானுவை சந்தித்ததாக அவர் கூறினார்.

சுபாஷினி அலி கூறுகையில், "பல ஆண்டுகளுக்குப் பின் அரசுக்கு எதிராக இதுபோன்ற முடிவு வந்துள்ளது. நீதிபதிகளின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்" என்றார்.

“இவ்வளவு நீண்ட போராட்டத்தை யாரால் நடத்த முடியும்? எத்தனை பேர் உச்ச நீதிமன்றத்துக்குப் போக முடியும் என்பதை யோசிக்க வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பில்கிஸ் பானு வழக்கு
படக்குறிப்பு, மகாராஷ்டிராவில் பாஜக அரசு இருப்பதால் தாங்கள் அச்சத்தில் இருப்பதாக கூறுகிறார் ரூப்ரேகா வர்மா.

'போர் இன்னும் நீடிக்கிறது...'

பேராசிரியை ரூப்ரேகா வர்மா கூறுகையில், "நீதி தொடர்பான எங்கள் நம்பிக்கைகள் தொலைந்துவிட்டன, ஆனால் இப்போது அவை விழித்துக்கொண்டன, எங்கள் விரக்தியின் மேகம் கொஞ்சம் கலைந்துள்ளது" என்றார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பேராசிரியராக இருந்த அவர், சமூகம் மற்றும் பாலினம் தொடர்பான விவகாரங்களில் பணியாற்றியுள்ளார். 11 குற்றவாளிகள் விடுதலையான போது தான் மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

”சில நாட்கள் கழித்து, இதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் விவாதித்தோம். பின்னர் இதுதொடர்பாக நாங்கள் டெல்லியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள ஆரம்பித்தோம்” என்கிறார்.

இன்னும் இந்த போர் நீடிப்பதால் (வழக்கு), பலருடைய பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். ஆனால் கபில் சிபல், விருந்தா குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட தன்னுடைய சகாக்கள் பலரையும் குறித்து வெளிப்படையாக பேசுகிறார்.

பொதுநல மனு தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டபோது அவர் டெல்லி விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த மனுவில் தங்கள் பெயர்களை சேர்க்குமாறு அவருக்கு அழைப்பு வந்தது.

இதைத் தொடர்ந்து, சுபாஷினி அலி, ரேவதி லால், பேராசிரியை ரூப்ரேகா வர்மா ஆகியோரின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும், பேராசிரியை ரூப்ரேகா வர்மா, பில்கிஸ் பானுவை சந்திக்கவே இல்லை. ஏனெனில், பில்கிஸ் பானுவை தொந்தரவு செய்ய ரூப்ரேகா வர்மா விரும்பவில்லை.

”பயம் நீடிக்கிறது”

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பேராசிரியை ரூப்ரேகா வர்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார். "நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளது, ஏனெனில் அவர்கள் பொய் சொல்லி விடுதலையாகியுள்ளனர். ஆனால் இப்போது மகாராஷ்டிராவில் பாஜக அரசாங்கம் இருப்பதால் பயம் நீடிக்கிறது. ஆனால் எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது" என அவர் நம்புகிறார்.

சுபாஷினி அலியும் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பதுகுறித்து குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்துகிறார், ஆனால், அதேநேரத்தில் பெண்கள் தைரியத்தை இழக்கக்கூடாது என்றும் அவர்களுக்கு உதவ தயாராக உள்ள பல அமைப்புகள் உள்ளன என்றும் கூறுகிறார்.

பில்கிஸ் பானுவின் மனுதாரர் சுபாஷினி அலி கூறுகையில், இது சாதாரண மக்கள், ஊடகங்கள் மற்றும் அனைவருடைய போராட்டம் என்கிறார்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத் அரசு மீதும் கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இரண்டு வாரங்களில் சிறை செல்ல வேண்டும்

இப்போது இந்த வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகளும் அடுத்த இரண்டு வாரங்களில் சிறைக்கு செல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானுவின் வழக்குரைஞர் ஷோபா குப்தா, இப்போது தண்டனையை எளிதாக குறைக்க முடியாது என்று கூறுகிறார்.

2008-ல் மகாராஷ்டிர அரசு அமல்படுத்திய கொள்கையின்படி, இவ்வழக்கின் குற்றவாளிகள் குறைந்தது 28 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்தல் அல்லது பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளில் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பின்னரே மன்னிப்பு வழங்க முடியும் என மாநில அரசின் கொள்கை கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)