தனியே பேசிக் கொண்டிருந்த இந்து ஆண் - முஸ்லிம் பெண் மீது தாக்குதல் - கர்நாடகாவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூருவில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஏரிக்கரை ஒன்றில் இருவேறு மதங்களைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் உறவினர்கள் என்ற நிலையில், அவர்கள் இத்தாக்குதலுக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் சுமார் 21-24 வயதுடையவர்கள். கோட்டை ஏரியின் கரையில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதேசமயம், சிலர் அங்கு வந்து, அவர்களை அருகில் இருந்த காலி கொட்டகைக்கு இழுத்துச் சென்று சென்று கண்மூடித்தனமாக தாக்கினர்.
மாநில அரசு வேலையில்லாதோருக்கு அளிக்கும் ‘இளைஞர் நிதிக்காக’ பதிவு செய்வதற்காக அவர்கள் இருவரும் கர்நாடக வனத்துறைக்குச் சொந்தமான ஒரு மையத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள கணினி சர்வர் செயலிழந்ததால், அவர்கள் இருவரும் கோட்டை ஏரிக்கரைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில், சுமார் ஒன்பது இளைஞர்கள் அவர்களிடம் வந்து கொட்டகைக்கு இழுத்துச் சென்றனர்.
முதலில் ஏன் இருவரும் ஒன்றாக இருக்கிறீர்கள் என்று அந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். உண்மையில், பாதிக்கப்பட்ட இளைஞர் நெற்றியில் திலகம் பூசியிருந்த நிலையில், அவருடன் இருந்த பெண் தலையை மூடி ஹிஜாப் அணிந்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பாதிக்கப்பட்ட நபர் அவர்களிடம் விளக்கம் அளித்தபோதும் அவர் தாக்கப்பட்டார்.
பெலகாவி காவல் ஆணையர் சித்தராமப்பா பிபிசி இந்தியிடம் பேசுகையில், “அவரது (பாதிக்கப்பட்டவரின்) உறவினர்கள் ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிகிறார்கள். அவர்கள் காவல் துறையின் ரோந்து பிரிவுக்கு தகவல் கொடுத்த பிறகு இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்,” என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் இரண்டு சகோதரிகளின் குழந்தைகள் என்றும் அவர்கள் லம்பானி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஒரு முஸ்லிம் நபரை மணந்துள்ளார் என்பதுடன் அப்பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் என்று தெரியவருகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல சமூக ஆர்வலர்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உரையாடல் போன்ற செயல்களின் குறுக்கே மத அடிப்படையிலான சின்னம் எப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.
தார்வாட் ஜாக்ரிதி மகிளா உக்குதா அமைப்பைச் சேர்ந்த சாரதா கோபால் இந்த சம்பவம் கூறித்துப் பேசியபோது, “ஆணோ பெண்ணோ எதையாவது அணிந்தால் அல்லது அவரது நம்பிக்கையின் அடிப்படையில் எங்காவது சென்றால் அது தவறா? ஒரு சமூகமாக நாம் எங்கே இருந்து வந்துள்ளோம்?" என்று கேள்வி எழுப்பினார்.

மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை
பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு (21 வயது) முதுகில் காயங்கள் இருந்த நிலையில், பெண்ணின் (24 வயது) முகத்தில் அறையப்பட்டதால் அவருக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது.
இருவரையும் தாக்கிய இளைஞர்கள் அனைவரும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.
தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
2021 அக்டோபரில் திலகம் அணிந்த ஒரு ஆணும், பர்தா அணிந்த ஒரு பெண்ணும் ஆட்டோரிக்ஷாவில் பயணித்தது போன்ற சம்பவம்தான் இந்த தம்பதியினருக்கு நடந்துள்ளது. அவர்கள் இருவரும் கடன் பெறுவது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த பெண் கிராமப்புற பின்னணியில் இருந்து, வந்த நிலையில், கடன் பெறுவது எப்படி என அந்த ஆணிடம் ஆலோசனை கேட்டதாகத் தெரியவந்தது.
ஆட்டோரிக்ஷாவில் இருவருக்குமிடையிலான உரையாடலுக்குப் பிறகு, ஒரு கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட அனைவரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த சில தசாப்தங்களில், மங்களூருவைச் சுற்றியுள்ள கடலோர நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து அது வெளிச்சத்துக்கு வருவது தொடர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்து ஆண்கள்.
ஒரு இந்து பெண் அல்லது ஆண் ஒரு தனியார் பேருந்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு, மிருகக்காட்சி சாலைக்கு குழுவாகச் செல்வது அல்லது இதுபோல் எங்காவது செல்வதற்காக இருக்கையைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட செயல்களுக்கு இதுபோன்ற கும்பல்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.

பெலகாவி எப்படி வேறுபட்ட பகுதியாக விளங்குகிறது?
ராணி சென்னமா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் நடத்தும் பேராசிரியர் காமக்ஷி தடாபடா இதுகுறித்துப் பேசிய போது, “கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில், பெலகாவி எப்போதுமே வித்தியாசமானது. அங்கு இந்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவு இருந்துவருகிறது. கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் அரசியல் நிலைப்பாடுகள் அதிகம்," என்றார்.
அசோக் சந்திரகி பெலகாவியில் ஒரு சமூக சேவகர். அவர் பேசியபோது, “1992 மற்றும் 2002ல் நடந்த சில சம்பவங்களைத் தவிர, இரு சமூகத்தினரும் இங்கு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சூழலைக் கெடுக்க நினைக்கும் ஒரு சிறு பிரிவினர் இரு சமூகங்களிலும் உள்ளனர். ஆனால் சமீப காலமாக நிலைமை கட்டுக்கடங்காததாக மாறி வருகிறது. இது சமுதாயத்திற்கு நல்லதல்ல,” என்றார்.
மத போதனைகளுக்குப் பதிலாக இதுபோன்ற கூறுகளால் மக்கள் செல்வாக்கு செலுத்தப்படுவதாகத் தோன்றுவதால் இப்போது சிறிய சம்பவங்களுக்கு கூட தவறான வண்ணம் கொடுக்கப்படுகிறது என்று பேராசிரியர் காமக்ஷி கூறுகிறார்.
சமூக ஆர்வலர் பிருந்தா அடிகே பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, “எந்த மதத்தின் அடையாளத்தையும் அணிவது தனிப்பட்ட முடிவு. அதற்காக மட்டுமே ஒருவரை அவமதிக்க கூடாது. எந்தவொரு தனிநபரோ அல்லது தனி நபர்களின் குழுவோ, யார் மீதும் கைகளை உயர்த்துவதற்கு தங்களுக்கு உரிமை இருப்பதாக உணர்ந்தால், சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
அரசியல் மற்றும் மத தலைவர்களின் தூண்டுதலால், மத வெறியர்களின் ஆணவம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், வன்முறை மற்றும் அரசியலமைப்பின் உத்தரவாதங்களை மீறும் வழக்குகளை சட்டத்தை அமல்படுத்துபவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் பிருந்தா கூறுகிறார்.
சிலர் தங்களின் செயல் மதத்தை பாதுகாக்கும் என்று நினைக்கிறார்கள் என்கிறார் சாரதா கோபால். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களைக் குறைக்க வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
பிபிசியிடம் பேசிய அவர், “சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தாக்கப்பட்டதில் அவரது மண்டை உடைந்தது. அவருடைய ஒரே தவறு அவர் விரும்பிய நபருடன் இருந்ததுதான். மக்களை தண்டிக்க இவர்கள் யார்? இதுபோன்ற செயல்களால் மதம் பாதுகாக்கப்படாது” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)








