டொனால்ட் டிரம்ப் தலையெழுத்தை தீர்மானிக்கும் 12 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், BBC/Getty Images
டொனால்ட் டிரம்புக்கு எதிரான வழக்கில் ஒருபக்கச் சார்பற்ற 12 நடுவர்கள் மற்றும் ஆறு மாற்று நடுவர்களைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமான பணியாக இருக்கவில்லை.
பல்வேறு சவால்களைக் கடந்து நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
“அப்பட்டமாக ஒருபக்கச் சார்பாக இருந்தவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்படவில்லை” என, மான்ஹாட்டன் முன்னாள் வழக்கறிஞர் ஜெரிமி சாலண்ட் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நடுவர்கள் குறித்த விவரங்களைப் பாதுகாக்க, பத்திரிகையாளர்கள் அவர்கள் குறித்துப் பகிரும் தகவல்களுக்கு நியூயார்க் நீதிபது ஜுவான் மெர்ச்சன் கட்டுப்பாடு விதித்துள்ளார்.
நமக்குத் தெரிய வந்துள்ள தகவல்களின்படி, இக்குழுவில் அதிகம் படித்தவர்கள் உள்ளனர். ஐந்து பெண்களும் ஏழு ஆண்களும் அடங்குவர். எம்.பி.ஏ படித்த முதலீட்டு வங்கியாளர், வெஸ்ட் வில்லேஜை சேர்ந்த பாதுகாப்புப் பொறியாளர், ஓய்வுபெற்ற நிதி மேலாண்மை ஆலோசகர் உள்ளிட்டோரும் நடுவர் குழுவில் உள்ளனர்.
இந்த வழக்கில் அதிகம் படித்த நடுவர்கள் இருப்பது மதிக்குரியது என்று வழக்குடன் தொடர்பில்லாத சாலண்ட் கூறினார். “என்ன நடந்தது என்பதை அலசுவதற்கும் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் போதுமான திறன் மற்றும் புத்திசாலித்தனம் உள்ள இருவர் தேவை.”
ஆனால், டிரம்ப் அதிபராவதற்குப் போட்டியிடும்போது திட்டமிடப்பட்ட உயர்மட்ட குற்ற விசாரணையில் நடுவர்கள் கடுமையான வெளிப்புற அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.
“இது ஒன்றும் தினசரி விசாரிக்கப்படும் சராசரியான குற்ற வழக்கு அல்ல. இது நடுவர்களின் மனதில் உறுதியாக இருக்கும்,” என்றும் சாலண்ட் கூறினார்.
தேர்வின்போது பதிலளிக்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் முன்னாள் அதிபரின் சட்ட விதியைத் தீர்மானிக்கும் 12 பேர் யார்?
டொனால்ட் டிரம்ப் வழக்கு விசாரணையின் போது தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் மான்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
தீ வைத்துக்கொள்வதற்கு முன்பாக அந்நபர் துண்டுப் பிரசுரங்களை வீசியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் இதைச் செய்ததற்கான நோக்கம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
டொனால்ட் டிரம்ப் மீதான வழக்குக்கான நடுவர்களை (வழக்குக்குத் தொடர்பில்லாத மக்களின் பிரதிநிதிகள் நடுவர்களாக வழக்கைக் கவனித்து தீர்ப்பில் தாக்கம் செலுத்துவார்கள்) தேர்ந்தெடுக்கும் நேரத்தில் டிரம்ப் அங்கிருந்தார். அவருக்குப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இச்சம்பவம் நடப்பதற்கு முன்னதாகவே டிரம்ப் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் நீதிமன்ற பாதுகாப்பு மீறப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டொனால்ட் டிரம்ப் மீதான வழக்கில் மாற்று நடுவர் தேர்வு முடிந்துள்ள நிலையில், விசாரணை பிற்பகலுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. வழக்கின் தன்மை, சாட்சியங்கள், உண்மைகள் குறித்து நடுவர் மன்றத்திற்குத் தெரிவிப்பது திங்கள்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நபர் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டதாக, உள்ளூர் நேரப்படி சுமார் 13:30 மணியளவில் 911 என்ற எண்ணுக்கு அவசர அழைப்பு வந்ததாக விசாரணை அதிகாரிகள் ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
துண்டுப் பிரசுரங்களை வீசிய நபர்

பட மூலாதாரம், Reuters
அந்த நபர் 37 வயதான மேக்ஸ்வெல் அஸரெல்லோ என அடையாளம் கண்டுள்ளனர். அவர் கடந்த வாரத்தில் ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து நியூயார்க்கிற்கு வந்திருந்தார். நியூயார்க்கில் அவருக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. ஃப்ளோரிடாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அவர் நியூயார்க் வந்தது தெரியாது.
நியூயார்க் காவல்துறைத் தலைவர் ஜெஃப்ரி மாட்ரே கூறுகையில், அந்நபர் தீப்பற்றக்கூடிய திரவம் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பையில் எடுத்துக்கொண்டு வருவதற்கு முன்பு பூங்காவில் "சுற்றிக் கொண்டிருந்தார்" என்றார்.
துண்டுப் பிரசுரங்கள் "பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டவை" என்று தெரிவித்த அவர், அவை "சதிக் கோட்பாடு" தொடர்பானவை என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப் வழக்கு விசாரணை காரணமாக நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர். அந்நபர் தீ வைத்துக் கொண்டதைக் கண்ட அதிகாரிகள், தீயை அணைக்கும் கருவியுடன் பூங்காவுக்குள் விரைந்து ஓடினர். அவரது உடல் மோசமாக எரிந்தது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை நேரில் கண்ட ஜூலி பெர்மன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடந்தது என்னவென்றே புரியவில்லை. முழு சம்பவமும் மிக வேகமாக நடந்துவிட்டது. என்ன நடக்கிறது என்பதை அறியவே எனக்கு 20 நொடிகள் ஆனது," என்றார்.
நியூயார்க் நகர காவல்துறையினர், தீ வைப்பதற்கு முன்பு அந்நபர் வீசிய துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்தனர். சாட்சியங்களிடம் விசாரணை அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர். தீ வைத்துக் கொள்வதற்கு முன்பு அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.
நியூயார்க் காவல்துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிமன்ற அதிகாரிக்கு, தீயை அணைக்கும் முயற்சியின்போது சிறிய காயம் ஏற்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரம்ப் எதிர்கொள்ளும் வழக்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட ட்ரம்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ எனப் பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது.
டேனியல்ஸ் ட்ரம்புடனான தொடர்பு குறித்து மௌனமாக இருப்பதற்காக, அவருக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) செலுத்துமாறு தனக்கு டிரம்ப் உத்தரவிட்டதாக கோஹென் கூறுகிறார். சட்டச் செலவுகள் என்று பதிவு செய்து அந்தப் பணத்தைத் தனக்கு டிரம்ப் கொடுத்ததாகவும் கோஹென் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயலை 2016 தேர்தலில் "சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்தும்" முயற்சி என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.
வெளியே பேசாமல் இருப்பதற்கான பணம் (Hush Money) செலுத்துவது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம், டிரம்ப் ஆபாச நடிகைக்கு அளித்த பணத்தை, ‘சட்டச் செலவுகள்’ என்று குறிப்பிட்டு கோஹனுக்கு செலுத்தியது தவறு என்று குற்றம் சாட்டுகிறது.
மொத்தத்தில், பொய்யான வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்ததாக டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












