தோல்வி நெருங்கியபோது ரோஹித்திடம் ஹர்திக் கேட்டது என்ன? அடுத்து என்ன நடந்தது?

பட மூலாதாரம், SPORTZPICS
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் டி20 தொடரில் மற்றொரு கடைசி ஓவர் த்ரிலிங் போட்டியை நேற்று ரசிகர்கள் ரசித்தனர். மும்பை அணியில் 11 வீரர்களுக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் தனி ஒருவனாக அச்சத்தை ஏற்படுத்தினார்.
10 ஓவர்களுக்கு மேல் ஓவர்கள் நகர, நகர, பஞ்சாப் அணியின் ரன்ரேட் உயரும்போது, ஹர்திக் பாண்டியா முகம் இறுகத் தொடங்கியது. வெற்றியும் மும்பையைவிட்டு நகரத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் அந்த பேட்டருக்கு எவ்வாறு பந்துவீசுவது என்றே தெரியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறி மும்பையின் 11 வீரர்களும் போராடி இறுதியில் ஆட்டமிழக்கச் செய்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் 4 முறையாக கடைசி ஓவர் வரை வந்துவெற்றியை கோட்டைவிட்டுள்ளது.
18-வது ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அஷுதோஷ் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய எப்படி பீல்டிங் அமைப்பது என்பதில் அனுபவம் நிறைந்த ரோஹித் சர்மாவிடம் பேசி உதவி கேட்டார்.
ரோஹித் களத்தில் இறங்கி அஷுதோஷ் சர்மா எவ்வாறு ஷாட் அடிப்பாரோ அதற்கு ஏற்றார்போல் பீல்டிங்கை மாற்றிஅமைத்தார். அதன் விளைவாகவே கோட்ஸீ வீசிய முதல் பந்திலேயே அஷுதோஷ் ஆட்டமிழக்க ஆட்டம் மும்பை வசம் சென்று, தோல்வியிலிருந்து தப்பியது என்று மும்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதுகிறார்கள்.

பட மூலாதாரம், SPORTZPICS
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. 193 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 3வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் இன்னும் மைனஸில் இருந்து மீளவில்லை, மைனஸ் 0.133 என்ற அளவில்தான் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் வெளி மைதானத்தில் பெற்ற முதல் வெற்றியாகும்.
அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் மட்டும் 4 போட்டிகளில் கடைசி ஓவர் வரைவந்து தோற்றுள்ளது. இந்த 4 ஆட்டங்களையும் வெற்றியாக மாற்றி இருந்தால், இப்போது 10 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு நகர்ந்திருக்கும்.
மும்பை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பும்ராவின் துல்லியமான பந்துவீச்சுதான். பும்ரா புதிய பந்தில் தனது முதல் ஸ்பெல்லில் பஞ்சாப் அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்களை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். கோட்ஸியும் தனது பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்த பஞ்சாப்பின் 4 விக்கெட்டுகள் 3 ஓவர்களுக்குள் வீழ்ந்தன.

பட மூலாதாரம், SPORTZPICS
4 ஓவர்கள் வீசிய பும்ரா 21 ரன்கள் கொடுத்து ஷசாங்க் சிங், ரூஸோ, சாம் கரன் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஆயினும் ஆட்டத்தில் அதிகமாகப் பேசப்பட்டது பஞ்சாப் அணியின் ஷசாங் சிங், அஷுதோஷ் சர்மா இருவரும்தான். 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்த பஞ்சாப் அணியை கட்டி இழுத்து வெற்றியின் பக்கம் கொண்டு சென்றது இருவரின் பேட்டிங்தான். அதிலும் ஷசாங் சிங் ஆட்டமிழந்தபின் அஷுதோஷ் தனி ஒருவனாகப் போராடி வெற்றிக்கு அருகே கொண்டு ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், நிர்வாகத்துக்கும் கிலி ஏற்படுத்தினார்.
அஷுதோஷ் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள்(7சிக்ஸர்,2பவுண்டரி) சேர்த்து கடைசியில் ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒட்டுமொத்தமே 10 சிக்ஸர்கள்தான் அடித்த நிலையில் அஷூதோஷ் மட்டுமே 7 சிக்ஸர்களை விளாசினார் எனும்போதே அவரின் ஆக்ரோஷமான பேட்டிங்கை தெரிந்து கொள்ள முடியும்.

பட மூலாதாரம், SPORTZPICS
அஷுதோஷை புகழ்ந்த பாண்டியா
வெற்றிக்குப்பின் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ மிக அருமையான கிரிக்கெட். ஒவ்வொருவரின் உணர்ச்சி நரம்பையும் இந்த ஆட்டம் தொட்டுப்பார்த்தது. எங்கள் குணம் இந்த ஆட்டத்தில் பரிசோதிக்கப்படும் என ஆட்டம் தொடங்கும் முன் பேசியிருந்தேன். அதை வெளிப்படுத்தி இருக்கிறோம். ஐபிஎல் போட்டியின் அழகே,தோல்வியை நோக்கி செல்லும் எதிரணி மீண்டும் எழுந்து வந்து நெருக்கடி கொடுப்பதுதான் அது இந்த ஆட்டத்தில் நடந்தது. அஷுதோஷ் சர்மா அற்புதமான பேட்டர், நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். களத்துக்கு வந்தது முதல் ஒவ்வொரு பந்தையும் துல்லியமாகக் கணித்து நடுப்பகுதி பேட்டில் ஷாட்டாக மாற்றி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்குத் தேவையானதை அஷுதோஷ் செய்தார். அவரின் பேட்டிங் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
ஷசாங் சிங்- அஷுதோஷ் கூட்டணி
7-வது விக்கெட்டுக்கு ஷசாங் சிங்குடன் வந்து சேர்ந்தார் அஷுதோஷ் சர்மா. இருவரும் சேர்ந்தபின்புதான் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஷசாங் சிங் அதற்கு முன்பே அவ்வப்போது பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடித்து ரன்களை சேர்த்துவந்தார். அஷுதோஷ் களமிறங்கி சந்தித்த 2வதுபந்திலேயே மத்வால் ஓவரில் சிக்ஸர் விளாசினார்.
ஷெப்பர்ட் வீசிய 11வது ஓவரில் அஷுதோஷ் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் வீசிய 12வது ஓவரில் அஷுதோஷ் ஒரு சிக்ஸர் விளாச அந்த ஓவரில் பஞ்சாப் 11 ரன்கள் சேர்த்தது. 13வது ஓவரில்தான் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது.
அரைசதத்தை நோக்கி நகர்ந்த ஷசாங் சிங்கை 41 ரன்னில் பும்ரா வெளியேற்றி பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் அஷுதோஷ் மனம் தளரவில்லை.அடுத்து களமிறங்கிய ஹர்பிரித் பிராரை வைத்து ஆட்டத்தை நகர்த்தினார்.

பட மூலாதாரம், SPORTZPICS
ஆட்டம் மாறியது எங்கே?
கோட்ஸி வீசிய 15-வது ஓவரில் ஹர்பிரித் பிரார் 2 பவுண்டரிகளும், அஷுதோஷ் ஒருபவுண்டரியும் என 13 ரன்கள் சேர்த்தனர். கடைசி 30 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது.
மத்வால் வீசிய 16-வது ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. மத்வால் 4 பந்துகளை வீசுவதற்குள் 3 வைடு பந்துகளை வீசிய நிலையில் 4வது பந்தில் அஷுதோஷ் நோபாலில் சிக்ஸர், 5வது பந்தில் மீண்டும் சிக்ஸர், அதன்பின் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் கிடைத்தது.
இந்த ஒரு ஓவரால், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 28 ரன்கள் எனக் குறைந்து ஆட்டம் பரபரப்பாகியது. பும்ரா 17-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
பாண்டியாவுக்கு உதவிய ரோஹித்
கடைசி 3ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை. களத்தில் அஷுதோஷ் இருந்தார். கோடீஸ் 18வது ஓவரை வீசினார். ஏதோ நடக்கப் போகிறது,அஷுதோஷ் ஏதாவது மாயம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அஷுதோஷுக்கு எப்படி பீல்டிங் அமைப்பது என்பதில் கேப்டன் ஹர்திக் ரோஹித்துடன் ஆலோசனை நடத்தினார். அஷுதோஷ் பேட்டிங்கைப் பார்த்த ரோஹித் பீல்டிங்கை மாற்றி அமைத்து, கோட்ஸியைப் பந்துவீசச் செய்தார்.
ரோஹித் சர்மா பீல்டிங் செய்தமைக்கு நல்ல பலன் கிடைத்தது. கோட்ஸீ வீசிய ஸ்லோவர் பந்தை லாங்ஆன் திசையில் அஷுதோஷ் தூக்கி அடிக்க முகமது நபி கேட்ச் பிடித்தார். அஷுதோஷ் 61ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமேசேர்த்தது.
மும்பை அணியின் வெற்றி பெற்றதை கொண்டாடியதைவிட அஷுதோஷ் ஆட்டமிழந்து சென்றபோதுதான் உற்சாகமாகக் கொண்டாடினர். அந்த அளவுக்கு மும்பை அணியின் மீது அழுத்தத்தை அஷுதோஷ் ஏற்படுத்தினார்.

பட மூலாதாரம், SPORTZPICS
கடைசி 2 ஓவர் திக் திக்
கடைசி 2 ஓவர்களில் 23ரன்கள் பஞ்சாப் வெற்றிக்குத் தேவை. ஹர்திக் வீசிய ஓவரில் பிரார் 17 ரன்கள் சேர்த்தநிலையில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ரபாடா முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி, ஒரு ரன் சேர்க்கவே ஆட்டம்பரபரப்பாகியது.
கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சல் படேல், ரபாடா இருவருமே ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர்கள் என்பதால், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பை அடைந்தது. மத்வால் வீசிய முதல் பந்து வைடாகியது. அடுத்த பந்தில் ரபாடா லெக் திசையில் தட்டிவிட்டு ரன் ஓடினார், 2வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரபாடா ஓடி வந்தபோது, பந்தை பீல்டிங் செய்து முகமது நபி மின்னல் வேகத்தில் எறிய ரபாடா ரன்அவுட்ஆகினார்.
ரபாடா 2வது ரன்னை தேவையின்றி ஓடினார். ஹர்சல் படேலிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருந்தால் ஏதாவது பெரிய ஷாட்டுக்கு சென்றிருப்பார், அல்லது அடுத்து ரன்கள் சேர்த்து ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம். அஷுதோஷ் நடத்திய போராட்டத்தை வெற்றியாக்க கடைசி நிலை பேட்டர்கள் முயன்றிருக்கலாம்.

பட மூலாதாரம், SPORTZPICS
தனிஒருவனாகப் போராடிய அஷுதோஷ்
ஐபிஎல் டி20 தொடரில் 25 வயதான அஷுதோஷ் சர்மா முதல்முறையாக அறிமுகமாகி விளையாடி வருகிறார். இதற்கு முன் 14 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம்தான் அஷுதோஷ் சர்மாவுக்கு இருக்கிறது.
ஆனால், ஆட்டத்தை நம்பமுடியாத வகையில் பஞ்சாப் பக்கம் இழுத்து வந்து அஷுதோஷ் மிரளவைத்தார். 8-வது வீரராகக் களமிறங்கி 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். அனைத்து பேட்டர்களும் பும்ரா பந்துவீச்சுக்கு திணறியபோது, ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் அடித்து அனைவரையும் வியக்கவைத்தார் அஷுதோஷ்.
பஞ்சாப் அணி 2.1 ஓவர்களில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அதன்பின் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியபோது, பஞ்சாப் வெற்றி சதவீதம் 9.5% மட்டும்தான். ஆனால், அஷுதோஷ் களமிறங்கிய விளையாடத் தொடங்கியபின் பஞ்சாப் வெற்றி 79.12% சதவீதமாக மாறியது. குறிப்பாக மத்வால் வந்துவீச்சில் ஒரே ஓவரில் 24 ரன்கள் சேர்த்து அஷுதோஷ் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
ஆயினும் வெற்றிக்கு அருகில் வந்தபோது ஆட்டமிழந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












