இரானில் இந்த நகருக்கு இஸ்ரேல் குறி ஏன்? அங்கே என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல், இரான் இரு நாடுகளுக்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றத்தைத் தொடர்ந்து, இரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இரவு ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்பஹான் பிராந்தியத்தின் மீதான இந்தத் தாக்குதலின் விளைவுகள் மற்றும் சேதத்தின் அளவு குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்துள்ளன. இரான் அரசு ஊடகங்கள் தாக்குதல் பற்றி விரிவாக செய்தி அறிக்கைகள் வெளியிடவில்லை.
சிரியாவில் இரானிய வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இரான் இஸ்ரேல் மீது நடத்திய முன்னறிவிப்பில்லா தாக்குதல், என கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. தற்போது பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டது எப்படி?
பல சந்தர்ப்பங்களில் சிரியா மற்றும் இராக்கில் உள்ள இரானிய ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் இஸ்ரேல் வழக்கமாக அவற்றைப் பற்றி உறுதியான தகவலை வெளியிடாது.
எவ்வாறாயினும், வெள்ளிக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலிய ஏவுகணை இரானை தாக்கியதை பிபிசியின் அமெரிக்க கூட்டாளரான சிபிஎஸ் செய்தி ஊடகத்திடம் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன அல்லது அவை எங்கிருந்து ஏவப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
தாக்குதலில் ஏவுகணை ஒன்று பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்த சிறிய ட்ரோன்களை ஈடுபடுத்தியதாக இரான் தரப்பு கூறியது.
இரான் அரசாங்கம் நாட்டின் தொடர்புகளைக் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தியுள்ளது. எனவே, தாக்குதல் சம்பவம் நடந்த இஸ்பஹான் பகுதியில் பிபிசி நேரடியாக ஆய்வு செய்ய முடியவில்லை.
தாக்குதல் பற்றி இரான் தரப்பு சொல்வது என்ன?
இரானிய அதிகாரிகளும் ஊடகங்களும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்றதை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் அதன் விளைவுகளைப் பற்றிய போதுமான தகவல் கிடைக்கவில்லை. உயிர்ச் சேதம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ராணுவ தளம் அருகே வெடிச் சத்தம் கேட்டதாகவும் உடனடியாக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இஸ்ஃபஹானில் உள்ள ஒரு ஜெனரல் ஒருவரை மேற்கோள் காட்டி, "சந்தேகத்திற்குரிய ட்ரோன் போன்ற வானூர்தியை நோக்கி வான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் வெடிச்சத்தம் கேட்டது. இதனால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை,’’ என்று கூறியதாக அரசு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இரானின் சக்தி வாய்ந்த இஸ்லாமிய புரட்சிக் காவலர் படைப் பிரிவுடன் நெருங்கிய தொடர்புடைய இரானின் பகுதி-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம், இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையத்தின் வீடியோவை வெளியிட்டது. ஆனால் அந்த வீடியோவில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பட மூலாதாரம், EPA
இரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இரானின் தேசிய சைபர்ஸ்பேஸ் மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் டாலிரியன், ”எல்லைகளுக்கு அப்பால் இருந்து எந்த வான்வழித் தாக்குதலும் நடத்தப்படவில்லை,” என்றார்.
இஸ்ரேல் "குவாட்காப்டர்களை (ட்ரோன்கள்) பறக்கவிட்டு ஒரு அவமானகரமான தோல்வி முயற்சியை மட்டுமே மேற்கொண்டது, அந்த குவாட்காப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன," என்று அவர் விவரித்தார்.
தாக்குதலைத் தொடர்ந்து இரான் உடனடியாக வணிக விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது, ஆனால் அந்தத் தடைகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.
இரானின் ஆதரவுடன் ஆயுதக் குழுக்கள் செயல்படும் பகுதிகளான இராக் மற்றும் சிரியாவிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. ஆனால் அவை நேரடியாக இஸ்பஹான் தாக்குதலுடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிரியாவின் தெற்கில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு தளம் ஒன்று இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக சிரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் தாம் இருப்பதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை.
இஸ்ஃபஹான் குறிவைக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், IRIB
இஸ்பஹான் மாகாணம் இரானின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பகுதி. அங்குள்ள மிகப்பெரிய நகரத்தால் இந்த பெயரைப் பெற்றது. ஒரு பெரிய விமான தளம், பெரிய ஏவுகணை தயாரிப்பு வளாகம் மற்றும் பல அணுசக்தி நிலையங்கள் எனக் குறிப்பிடத்தக்க இரானிய ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் இப்பகுதியில் உள்ளன.
இஸ்ரேல் வழக்கமாக அமெரிக்காவிடம் ராணுவ நடவடிக்கை பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும். இருப்பினும் இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ஜி7 கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஷிங்டனுக்கு "கடைசி நிமிடத்தில் தெரிவிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.
ஆனால் பகிரங்கமாக அமெரிக்கா கருத்து தெரிவிக்கவில்லை.
இரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவி ஒரு வாரத்திற்குள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரானின் வழக்கமாக மேற்கொள்ளும் முன்னறிவிப்பில்லாத தாக்குதல்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும். காரணம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன் இஸ்ரேலிய வான் பாதுகாப்புப் படைகளால் இரானிய ஏவுகணைகள்சுட்டு வீழ்த்தப்படும்.
ஏப்ரல் 1ஆம் தேதியன்று சிரியாவில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இரானின் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுதான் காரணம் என இஸ்ரேல் பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை எனினும் அனைத்து தரப்பாலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிக்குமா?

பட மூலாதாரம், UGC
இந்த சமீபத்திய தாக்குதலின் சேதம் பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து இரான் பதிலளிக்க முற்படுமா என்பதும் இன்னும் தெரியவில்லை.
பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்டனர் வெள்ளிக்கிழமை தாக்குதலின் தீவிரத்தை "வரையறுக்கப்பட்டது, கிட்டத்தட்ட எச்சரிக்கைக் குறியீடு" என்று விவரித்தார். மேலும் மோதலைத் தொடராமல் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் பின்வாங்க வேண்டும் என அவரது சொந்த அமைச்சரவையில் இருக்கும் ஜெனரல்கள் மற்றும் அரசியல் கூட்டாளிகள் சிலரிடமிருந்து அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும் என்று பிபிசி சர்வதேச ஆசிரியர் ஜெர்மி போவன் தெரிவித்துள்ளார்.
இரு மத்திய கிழக்குப் போட்டு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் மறைமுகப் போரை நேரடி மோதலாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகளிடம் இருந்து இஸ்ரேல் பெரும் சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நீண்டகால விரோதத்திற்கு இஸ்ரேலிய ராணுவம் இரான் ஆதரவுடைய ஹமாஸுக்கு எதிராக காஸாவில் போரிட்டு வருவதே காரணம்.
இஸ்ரேல் மற்றும் சர்வதேச அரங்கில் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், EPA
இஸ்ரேல் நாட்டில் இருந்து வெளியான சில பதில்கள் நாட்டின் அரசியல் பிளவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தீவிர தேசியவாத பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் ஜிவிர், இரான் மீதான தாக்குதலை "பலவீனமான" அல்லது "முழுமையற்ற" ஒன்று என விவரித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யய்யார் லாப்பிட் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரது கருத்து இஸ்ரேலை கேலி செய்து தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறினார்.
பிரிட்டன் அரசாங்கம் தாக்குதல் குறித்து ஊகிக்க விரும்பவில்லை என்று கூறியது, ஆனால் இஸ்ரேல் தனது "தற்காப்பு உரிமையை" பயன்படுத்தும்போது தீவிர தாக்குதலைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அனைத்து தரப்பையும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.
உலகப் பொருளாதாரத்தில் எவ்வாறு பிரதிபலித்தது?
மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் மோதல் சம்பவங்கள் எண்ணெய் விநியோகத்தைச் சீர்குலைக்கும் என்று கவலைகள் எழுந்துள்ளன.
தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலைக்கான சர்வதேச அளவுகோலான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 1.8% அதிகரித்து ஒரு பீப்பாய் 88 டாலராக இருந்தது.
எண்ணெய் விலை ஆரம்பத்தில் 3.5% வரை உயர்ந்தது, ஆனால் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன் விலை நிலைத்தன்மை அடைந்தது.
இது நிச்சயமற்ற நேரங்களில் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படும் தங்கத்தின் விலை - ஒரு அவுன்ஸ் $2,400 க்கு அதிகரித்து வரலாற்று உயர்வைச் சந்தித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












