டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?

    • எழுதியவர், தினுக் ஹேவாவித்தரன
    • பதவி, பிபிசி சிங்கள சேவை

அமெரிக்காவால் வழங்கப்படுகின்ற நிதி தொடர்பான வெளிநாட்டு திட்டத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கும் வகையிலான ஆவணத்தில், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவுக்கு அமைய, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் USAID-ஆல் நடத்திச் செல்லப்படுகின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்ட தளங்கள் செயலிழந்துள்ளன.

USAID என்றால் என்ன?

முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போரால் பேரழிவை சந்தித்த ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் மேம்பாட்டிற்காக அமெரிக்கா உதவிகளை வழங்கியது.

இருப்பினும், சர்வதேச நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காகவும், வெளிநாடுகளுக்கான உதவிகளை வழங்குவதற்காகவும் தனி நிறுவனமொன்றை நிறுவும் நோக்கில் அப்போதைய அதிபர் ஜான் எஃப். கெனடியினால் 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி USAID நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கைக்குள் USAID திட்டங்களின் ஆரம்பம்

கடந்த 1961ஆம் ஆண்டு முதல் சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி, விவசாயம், வாழ்வாதார அபிவிருத்தி, சுற்றாடல், இயற்கை வளங்களின் முகாமைத்துவம், உள்ளூராட்சி மன்றங்கள், மனிதாபிமான உதவித் திட்டங்கள் போருக்குப் பின்னரான காலத்தில் நிலைமாற்று நியாயத்திற்கான துறைகள் உள்ளிட்ட விடயங்களில் அமெரிக்கா உதவி வழங்கும் திட்டங்களை நாட்டிற்குள் முன்னெடுத்திருந்தது.

இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்தத் திட்டங்களுக்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமான USAID-இன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதியுதவிகளை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

'விருப்பமின்றி விடைபெற நேர்ந்தது'

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் உதவித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து, தங்கள் திட்டங்களில் பணியாற்றிய சிலர் விடைபெற நேர்ந்துள்ளதாக இலங்கைக்கான மாற்றுத் திறனாளி சமூகத்திற்கான திட்டத்தின் தலைவர் பூமி ஹரேந்திரன் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''எந்தவொரு வேலையைச் செய்யவும் நிதி தேவைப்படுகிறது. இந்த நேரத்தின் பிரகாரம், சமூகம் ஒன்றுக்காக நாங்கள் வழங்கிய சேவை தடைபட்டுள்ளது. எங்களுடன் வேலை செய்த சிலர் விடைபெற நேரிட்டது. இதுதான் தற்போதுள்ள நிலைமை.''

''இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அந்த நபர்களுக்காக சமூகத்தில் வேறெங்கும் திட்டங்கள் கிடையாது.

திருநர் சமூகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் ஆதரவை வழங்குதல் போன்றவை எமது நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் உள்ளடங்கும். நாங்கள் இந்த திட்டத்தை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம் தடை ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறுகின்றார்.

'பெருந்திரளானோருக்கு தொழில் வாய்ப்பில் பிரச்னை'

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற நிதியுதவி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால், அந்தத் திட்டங்களில் பணியாற்றிய நபர்களின் தொழில் வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் சமூகப் பொறுப்பு திட்டத்தின் பணிப்பாளர் சந்துன் துடுகல பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

''USAID மட்டுமின்றி, மேலும் பல பிரிவுகள் மூலம், வெளிநாடுகளுக்கு உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்தக் குறிப்பிட்ட நிறுவனமானது அரச மற்றும் அரச சார்பற்ற திட்டங்களுக்கு நிதியுதவிகளை வழங்குகின்றது. எனினும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதியைப் பெற்றுக்கொண்டு சேவையை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

அவரது கூற்றின்படி, ''அதனூடாக மனித உரிமைகள், வாழ்வாதார முன்னேற்றம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றுக்கான பாரிய அளவிலான நிதி USAID நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது.''

மேற்கொண்டு பேசிய அவர், 'தற்போதுள்ள நிலைமையின் பிரகாரம், 90 நாட்களுக்கு நிதி வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. USAID நிறுவனத்தின் இணையவழி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சார்ந்துள்ளனர்.

சமூகத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தற்போதும் இருக்கின்றன. தற்போதுள்ள நிலைமையின் பிரகாரம், இந்தத் திட்டங்களில் வேலை செய்வோருக்கு என்ன நடக்கும் என்று சரியாகக் கூற முடியாதுள்ளது. அதனால், திட்டங்களுக்கும், வேலைகளுக்கும் நேரடியாகவே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.

அதோடு, ''புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததுடன், புதிய சட்டங்கள் வகுக்கப்படும் நடவடிக்கைகளால் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு தற்போது இயலுமை கிடையாது" எனவும் அவர் கூறுகின்றார்.

'கிராம மட்டத்தில் பாரிய பாதிப்பு'

அமெரிக்காவினால் வெளிநாடுகளுக்கு வழங்கப்படுகின்ற நிதியுதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் கிராம மட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு அதிகம் என வடமேல் பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவிக்கின்றார்.

'இம்முறை டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் குறித்து அனைவரது கவனமும் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபராக வரும்போது முதலில் தமது நாட்டை பற்றிச் சிந்திப்பார் எனக் கூறப்படுகின்றது. அதனால், கனடா, சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்குத் தீர்வை வரி முறை அமல்படுத்தப்படுகின்றது.''

'அதேபோன்று, அமெரிக்காவில் புதிய அதிபரும், மறுபுறத்தில் தமது நாடு ஏனையோருக்குச் செய்யும் உதவிகளை நிறுத்துமாறு கூறுகின்றார். தமது நாடு தொடர்பில் சிந்திக்கும் போது, இது தமது நாட்டிலிருந்து வெளியேறும் டாலர் அளவை குறைப்பதற்கான முயற்சியாகும்.''

'இறுதியாக இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார நிலைமையுடன் ஒப்பிடுகையில், இந்த முடிவு எவ்வாறு பாதிக்கின்றது எனப் பார்ப்போமானால், வெளிநாடுகளில் இருந்து பாரிய உதவிகளை எதிர்பார்த்திருந்தோம். USAID போன்ற நிறுவனங்களின் ஊடாக அமெரிக்கா இலங்கைக்குப் பாரிய அளவிலான பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியிருந்தது. அதனூடாக போருக்குப் பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள், கிராம மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் போன்ற பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.''

''அதேபோன்று USAID உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஊடாக, அரச அதிகாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் அரச பிரிவுகளுடன் தொடர்புடைய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியது. புதிய அதிபரின் தீர்மானத்தின் பின்னர் இலங்கை போன்ற நாடுகளுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இலங்கைக்கு மாத்திரமன்றி, அமெரிக்காவிடம் இருந்து உதவிகளைப் பெறும் பல நாடுகளுக்கு இந்த நிலைமை ஏற்படும்.''

''அரச சார்பற்ற அமைப்புகள் குறித்து எம்மில் பலருக்கு எதிர்மறையான எண்ணங்களே காணப்படுகின்றன. எனினும், போருக்குப் பின்னரான காலத்தில் வறுமையை ஒழிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாரிய உதவிகளை இந்த அமைப்புகள் முன்னெடுத்திருந்தன. தற்போது காணப்படுகின்ற திட்டங்கள் நிறுத்தப்படுவதன் ஊடாக, அதன் பாதிப்புகள் அதிகளவில் காணப்படும்'' என பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

அமெரிக்க தூதரகம் கூறுவது என்ன?

அமெரிக்காவின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள USAID திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னை குறித்து பிபிசி சிங்கள சேவை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் கீழ்கணும் கேள்விகளை எழுப்பியது.

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள USAID திட்டத்தில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களின் எண்ணிக்கை எத்தனை? தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளனவா? அந்தத் திட்டங்களை மீள செயல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?

பிபிசி சிங்கள சேவையினால் எழுப்பப்பட்ட இந்த கேள்விகளை, தாம் வாஷிங்டனிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதற்கான பதிலை அங்கிருந்து தாம் எதிர்பார்துள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் பதிலளித்துள்ளார்.

USAID தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை என்ன?

அமெரிக்க அரசாங்கத்தின் பிரதான வெளிநாட்டு உதவித் திட்ட நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பில் எழுந்துள்ள நிச்சயமற்ற நிலைமையானது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது உயர்நிலை ஆலோசகரான ஈலோன் மஸ்க் ஆகியோரால் இந்த உதவித் திட்ட நிறுவனம் குறித்து கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மூடப்படுகின்றமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பலர் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது ஏன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது? இதிலுள்ள அபாய நிலைமை என்ன?

இதை அமெரிக்க அரசு மூடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவித் திட்ட நிறுவனமானது ''தீய'' ''குற்றவியல் அமைப்பு'' மற்றும் ''தீவிர இடதுசாரி அரசியல் மனோநிலை' என அவர் தனக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் ''கடும் இடதுசாரி வெறியாளர்களினால்'' நடத்தப்பட்டு வருவதாகவும், ''கடும் மோசடி'' நடவடிக்கைகளில் இருந்து விடுபடுவதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்துகின்றார். ஆனாலும், அவர் பெயர்களையோ அல்லது வேறு தகவல்களையோ வெளியிடவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)