இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டிப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையின் 77வது சுதந்திர தினம் எதிர்வரும் 04ம் தேதி (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று வரை நீதி கிடைக்காத பின்னணியில், தமக்கு சுதந்திர தினம் கிடையாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்னையை அடுத்து இடம்பெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக குற்றஞ்சுமத்தி, யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை அவர்களின் உறவினர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் பிரகடனப்படுத்தி போராட்டங்களை நடத்துவது வழமையானதாக காணப்பட்டது.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலங்களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வாக்குகளை அளித்து அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் அரசாங்கத்துக்கு வாக்களித்து அரசுக்கு எதிராகவே இந்தப் போராட்டத்தை நடத்த முற்படுகின்றனர்.

2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது.

குறிப்பாக மட்டக்களப்பு தவிர்த்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை தன்வசப்படுத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகாரத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு கோரி, கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது மாத்திரமன்றி, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர்.

எனினும், இம்முறை அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்துவிட்டு, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் எதிர்வரும் 4ம் தேதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சுதந்திர தினத்தை கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி, இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ன சொல்கின்றார்கள்?

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவியாக அமலராஜ் அமலநாயகி செயற்பட்டு வருகின்றார்.

கடந்த 2009ம் ஆண்டு வயலுக்கு வேலைக்கு சென்ற தனது கணவரான அந்தோனி அமலராஜ் ரஞ்ஜித், விசேட அதிரடி படையினரால் அழைத்து செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக அமலநாயகி குற்றஞ்சுமத்துகின்றார்.

''தமிழனாக பிறந்த பாவம் தான் நாங்கள் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம்'' என அமலநாயகி தெரிவிக்கின்றார்.

மூன்று பிள்ளைகளின் தாயான அமலநாயகி, 2009ம் ஆண்டு முதல் இன்று வரை தனது கணவரை தேடிய பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.

ஆனால், கணவரை தேடும் கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார் அமலநாயகி.

''மாவட்ட ரீதியாக 2010ம் ஆண்டிலிருந்து எமது போராட்டம் தொடர் போராட்டமாக தொடங்கியது. ஒவ்வொரு விதங்களாக போராட்டங்களை நடத்தி வந்தோம். வழிபாடுகள், தியானங்கள், பேரணிகள், மௌன ஊர்வலங்கள் போன்ற விதமான போராட்டங்களை நாங்கள் 2010ம் ஆண்டே தொடங்கி விட்டோம். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 2015ம் ஆண்டு ஒருங்கிணைந்து விட்டோம். சில அமைப்புக்களின் ஊடாக வடக்கு, கிழக்கில் ஒருங்கிணைந்து செயற்பட்டோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அவர்.

எனினும், கடந்த 2017ம் ஆண்டு தனித்துவமாக வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்ததாக, அமலநாயகி கூறினார்.

இவ்வாறு போராட்டங்களை நடத்திவரும் தமது அமைப்பிலுள்ள 300க்கும் அதிகமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீர்வு எட்டப்படாத நிலையில், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

போர் இடம்பெற்ற காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கான காரணத்தை தெளிவூட்டினார் அமலநாயகி.

''இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில், நாங்கள் 15 வருடங்கள் தாண்டிய நிலையிலும் வடகிழக்கு தாயக மக்கள் எந்தவொரு அடிப்படை உரிமைகளும் அற்ற நிலையில் தான் வாழ்ந்துகொண்டு வருகின்றோம். முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்ட விடய பரப்பு, தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர தினத்தை நாங்கள் கருப்பு தினமாக தான் அனுஷ்டிப்போம்,'' என அமலநாயகி குறிப்பிடுகின்றார்.

நாட்டில் கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய நிலையில், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்தமைக்கு மாறாக, மத்திய அரசாங்கத்துக்கு இம்முறை முழுமையான ஆதரவை வழங்கிய நிலையில் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக ஏன் அனுஷ்டிக்க வேண்டும் என பிபிசி தமிழ், அமலநாயகியிடம் கேள்வி எழுப்பிது.

''இந்த அரசாங்கம் கூட தமிழர்களின் உரிமைகளை தடுக்கும் வகையில் தான் செயற்பட ஆரம்பித்துள்ளது. எங்கள் இனத்துக்கு நடந்த இன அழிப்பு மற்றும் அநீதிகள், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் காயங்களுக்கு மருந்து போடாமல் வெறும் அபிவிருத்தி மற்றும் மாயைக்குள் தான் நாங்கள் இருக்கின்றோம். எங்களுடைய உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூற சொல்லி, இந்த 15 வருட காலமாக நாங்கள் தெருக்களிலிருந்து போராடி வருகின்றோம்" என கூறுகிறார் அவர்.

மேலும் பேசிய அவர், "நாங்கள் தொலைத்தது ஆடோ, மாடோ பொருளோ இல்லை. விலைமதிக்க முடியாத எங்களின் வாழ்க்கையை தொலைத்திருக்கின்றோம். வாழக்கூடிய வல்லமை இப்போது எங்களிடம் இருந்தாலும், அந்த வலியுடனான சுதந்திர வாழ்க்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான ஒரு நீதியை பெற்றுக்கொள்ளாமல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறியாமல் இந்த போராட்டத்தை விட மாட்டோம்.'' என அவர் கூறுகின்றார்.

மேலும் ''இவர்கள் ஒரு இனத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இதற்குள் இனவாதம் பேசப்படுகின்றது. அவர்களின் பெரும் ஆதிக்கத்தை தான் பேசுகின்றார்கள். மனிதர்களின் உணர்வுகளை கண்டுகொள்ள தவறுகின்ற பட்சத்தில் தான் நாங்கள் இவ்வாறான தினங்களை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்துகின்றோம்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வர இளம் சந்ததியினரே முன்வந்ததாக கூறிய அவர், இளைஞர், யுவதிகளை ஒரு மாயைக்குள் இந்த அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த அரசாங்கத்தை இளைஞர், யுவதிகள் நம்பி வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் சில சோதனைச்சாவடிகளை அப்புறப்படுத்தியுள்ள போதிலும், தமிழர்களுக்குத் தேவையான விடயத்தை இன்னும் தொடவில்லை என அவர் கூறுகின்றார்.

இதனால், புதிய அரசாங்கம் தமக்கான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை தமக்குக் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

காணாமல் போன உறவினர்கள் இன்று அல்லது நாளை வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் போராட்டங்களை தொடர்ந்தும் நடத்தி வருவதாக, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலராஜ் அமலநாயகி தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் பதில்

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் பிபிசி தமிழ் வினவியது.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையினால், அது தொடர்பில் அதிகாரபூர்வ பதிலொன்றை வழங்க முடியாதுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பதில்

இந்த காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த தாம் எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

77வது சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கின்றமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''நாங்கள் நஷ்ட ஈட்டை வழங்க தயாராக உள்ளோம். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். உங்களின் கிராமங்களை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். கிராமத்திலுள்ள வீதிகளை கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம். இதைவிட வேறு என்ன செய்ய இருக்கின்றது?'' என அவர் கேள்வி எழுப்பினார்.

''காணாமல் போனோரை கொண்டு வருமாறு கூறுகின்றார்கள். அவர்களை எங்கிருந்து கொண்டு வருவது? உலகத்தில் எங்காவது காணாமல் போனோரை கொண்டு வந்ததாக வரலாறு இருக்கின்றதா?. 100 வீதம் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கின்றதா? எங்கேயும் கிடையாது. கூடுதலான அனுபவம் உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. தென் ஆப்பிரிக்காவில் கூட 5 சதவிகிதம் தான் விசாரிக்கப்பட்டுள்ளனர்.'' என அவர் கூறுகின்றார்.

''அவர்கள் அனுபவிக்கும் வேதனையை நாங்கள் அறிவோம். இனி எந்தவொரு காலத்திலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையில் இனி முரண்பாடுகள் ஏற்படாத அளவுக் மக்களை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என்றார் அவர்.

தங்கள் தரப்பிலும் பல ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதாகவும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)