You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை : நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது - நடந்தது என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் இன்றைய தினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
''மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மாங்குளம் போலீஸார், 48 வயதான பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- இலங்கையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாகன இறக்குமதி - விலை இரட்டிப்பாகும் என்ற அச்சம் ஏன்?
- மஹிந்த ராஜபக்ஸ பாதுகாப்பு குறைப்பு, அவரது மகன் கைது - இலங்கையில் என்ன நடக்கிறது? முழு விவரம்
- யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன?
- இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல்
நடந்தது என்ன?
முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த சாந்தரூபன் ஜீவநந்தினி, தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்ந்து வந்துள்ளார்.
சாந்தரூபன் ஜீவநந்தினியின் அண்டை வீட்டில் வசித்து வந்த விஜேந்திரன் சஜிதா என்ற பெண், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக மத்தியஸ்த சபை தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த ஆடு இறந்த நிலையில், இருவருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஒட்டுச்சுட்டான் மத்தியஸ்த சபைக்கு வந்துள்ளதாக மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த 25ம் தேதி இடம்பெற்றுள்ளது.
மத்தியஸ்த சபை கூறியது என்ன?
நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக நாயின் உரிமையாளர் மத்தியஸ்த சபையின் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.
''நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என உரிமையாளர் கூறினார். இரண்டு தரப்பும் தங்களுக்குள் கதைத்துள்ளனர். நாயை வழங்க அதன் இணங்கியுள்ளனர். அப்போது நாயை தான் வாங்கிக் கொள்வதாக ஆட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார். நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வருகின்றோம் என்ற பின்னரே நாங்கள் அதற்கான சான்றிதழை வழங்கினோம்.''
''நாங்கள் நாயை கொலை செய்து படத்தை அனுப்புமாறோ அல்லது தூக்கில் போடுமாறோ நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் வழங்கவில்லை. ஆனால் நாயை கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நான் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்."
"போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியது. தான் கொண்டு செல்லும் போது கழுத்து நெரிப்பட்டு நாய் இறந்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளேன்'' என மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
மத்தியஸ்த சபை அவமதிப்பு தொடர்பிலும் போலீஸ் நிலையத்தில், குறித்த பெண்ணிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
முறைப்பாட்டாரான விஜேந்திரன் சஜிதாவிடம் ஏன் நாயை கையளிக்கும் தீர்மானம் எட்டப்பட்டது என்பது குறித்து கேட்டபோது, ''நான் பராமரித்துக்கொள்கிறோன் என அவர் கூறியதன் அடிப்படையிலேயே நாயை அவரிடம் கொடுத்தோம். ஆனால், தீர்வு ஆவணத்தில் பராமரிப்பு என்ற வசனத்தை எழுதாது விட்டு விட்டோம். நாங்கள் பராமரித்துக்கொள்கின்றோம். இனி பிரச்னை இல்லை என அவர் கூறினார்.'' என அவர் குறிப்பிட்டார்.
'புகைப்படத்தை வெளியிட்ட பெண்'
மத்தியஸ்த சபையின் இணக்கப்பாட்டிற்கு அமைய, நாயின் உரிமையாளரான சாந்தரூபன் ஜீவநந்தினி, ஆட்டின் உரிமையாளரான விஜேந்திரன் சஜிதாவிடம் நாயை கையளித்துள்ளார்.
இந்த நிலையில், நாயின் கழுத்து கயிற்றினால் நெரிக்கப்பட்டு தொங்கும் வகையிலான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
நாயை கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் மூன்றாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)