போராட்டம் தற்காலிக வாபஸ்: மத்திய அமைச்சர் - மல்யுத்த வீரர்கள் சந்திப்பில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI
மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார்களை முன்வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்தனர்.
நீண்ட நேரம் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான புகார்கள் மீதான விசாரணை வரும் 15-ம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்னைகளை சந்தித்த பின்னர் பேசிய அமைச்சர் அனுராக் தாகூர், "விசாரணை முடிவுக்கு வந்த பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து இந்த சந்திப்பின் போது பேசினோம். அதனை நாங்கள் செய்வோம்" என்று கூறினார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
அதன் பேரில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாய்த் ஆகியோர் அமைச்சர் அனுராக் தாகூரின் இல்லத்திற்குச் சென்றனர்.
இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது.
அதன் பிறகு பேசிய அமைச்சர் அனுராக் தாகூர், "சந்திப்பின் போது பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்தது" என்றார்.
சந்திப்பின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தரப்பில் எழுப்பப்பட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
"ஜூன் 15-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வீரர், வீராங்னைகள் வலியுறுத்தினர். அதுவரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள். அனைத்து விஷயங்கள் குறித்தும் திறந்த மனதுடன் பேசினோம். எல்லாமே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது." என்று அவர் கூறினார்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் முன்வைத்த கோரிக்கைகள்
- மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தரப்பில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
- பிரிஜ் பூஷனுக்கு எதிரான புகார்கள் மீதான விசாரணையை முடித்து ஜூன் 15-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
- ஜூன் 30-ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
- மல்யுத்த கூட்டமைப்பில் புகார்கைளை விசாரிக்க உள்ளக கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
- அந்த கமிட்டிக்கு ஒரு பெண் தலைவராக நியமிக்கப்பட வேண்டும்.
- மல்யுத்த கூட்டமைப்புத் தேர்தல் நடத்தப்படும் வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக தேர்வுக்குழுவுக்கு 2 பயிற்சியாளர்களின் பெயர்களை முன்மொழிந்துள்ளனர்.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிகக் குழுவில் 2 பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும்.
- தேர்தலுக்குப் பிறகு மல்யுத்த கூட்டமைப்பை முறையாக நடத்த வீரர், வீராங்கனைகளின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- தேர்தலுக்குப் பிறகு மல்யுத்த கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கோ, அவரது உதவியாளர்களோ வரவே கூடாது.
- மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகளுக்கு எதிரான வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கூறியது என்ன?
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய சாக்ஷி மாலிக், "விசாரணையை முடிக்க ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் தருமாறு அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அதுவரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபட மாட்டார்கள்." என்று கூறினார்.
மத்திய அரசுக்கும், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இதுவாகும்.
சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் பொகாட் ஆகியோர் தலைமையில் மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தினர்.

பட மூலாதாரம், ANI
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்புக்குப் பின்னர் பேசிய பஜ்ரங் புனியாவும், வரும் 15-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக கூறினார்.
"சில விஷயங்கள் குறித்து அரசுடன் நாங்கள் பேசியுள்ளோம். மத்திய விளையாட்டு அமைச்சருடன் நேரடியாக பேசினோம். ஜூன் 15-ம் தேதிக்குள் போலீஸ் விசாரணையை முடிப்பது குறித்து அவர் பேசினார். அதுவரை நீங்கள் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்." என்று பஜ்ரங் புனியா தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "அமைச்சருடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து எங்களது ஆதரவாளர்களிடம் தெரிவிப்போம். அவர்களது கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்" என்றார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பின் போது பஜ்ரங் புனியாவும், சாக்ஷி மாலிக்கும் மட்டுமே இருந்தனர். அந்த சந்திப்பில் வினேஷ் பொகாட் இல்லை.
மத்திய அமைச்சருடனான சந்திப்பில் இல்லாத வினேஷ் பொகாட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பஜ்ரங் புனியா, "வினேஷ் பொகாட் கோபப்படவில்லை இதுபோன்ற கேள்விகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை." என்றார்.
பாலியல் புகார்கள் முதல் போராட்ட களம் வரை
சாக்ஷி மாலிக், வினீத் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய போராட்டத்தின் கோரிக்கை.
’மல்யுத்த வீரர்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்தார்’ என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக, டெல்லியின் ’கனட் பிலேஸ்’ (Connaught place) காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு புகார்கள் பதிவாகியுள்ளன.
‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறு மல்யுத்த வீரர்களும், ஒரு இளம் மல்யுத்த வீரரும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு புகார் அளித்துள்ளனர். மற்றொரு புகாரில், ‘இளம் மல்யுத்த வீரருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகாரளித்துள்ளனர். இந்த FIR ’போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டால், குற்றம்சுமத்தப்பட்டிருக்கும் நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆனால் இத்தனை நாட்களுக்கு பிறகும், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை.
ஒருமாத கால தொடர் போராட்டத்திற்கு பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்கள், கடந்த மே 28ஆம் தேதியன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பட மூலாதாரம், ANI
“ நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த அதே நேரத்தில், இந்தியாவிற்காக விளையாடிய மல்யுத்த வீரர்களின் பேரணியை காவல்துறையினர் தங்களது பலத்தைகொண்டு தடுத்தனர்”
இந்த சம்பவத்திற்கு பின், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்கள் அனைத்தையும் கங்கையில் வீசிவிட முடிவு செய்தனர்.
இதற்காக சாக்ஷி மாலிக், வினீஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மூவரும் ஹரித்வாருக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டனர். பதக்கங்களை கங்கையில் வீசிவதற்காக சென்றுகொண்டிருந்த அவர்களை, விவசாயத் தலைவர் நரேஷ் திக்கத் கடைசி நிமிடத்தில் வந்து தடுத்தார்.
இறுதியாக மல்யுத்த வீரர்கள் ஐந்து நாட்கள் வரை இந்திய அரசிற்கு அவகாசம் அளித்திருந்தனர். இந்த ஐந்து நாட்களுக்குள் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துவிட்டனர்.
அமித்ஷாவுடனான இந்த சந்திப்பிற்கு பிறகுதான், சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












