அமித்ஷாவைச் சந்தித்த பின் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் என்ன குழப்பம்?

பட மூலாதாரம், YEARS
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வந்த பிறகு, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தன்னுடைய ரயில்வே பணிக்கும் மீண்டும் திரும்பியுள்ளார். இந்த தகவலை அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதேசமயம், தங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும், அதிலிருந்து தான் பின்வாங்க போவதில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்த தகவலை ட்விட்டரில் பகிர்வதற்கு முன்னால், ’சாக்ஷி மாலிக் தன்னுடைய போராட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக’ பலர் செய்திகளை பகிர்ந்து வந்தனர்.
”சாக்ஷி மாலிக்குடன் இணைந்து, மற்ற மல்யுத்த வீராங்கனைகளும் போராட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டதாக” மற்ற சில செய்திகளும் பகிரப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது இந்த ட்விட்டர் பதிவுகளின் மூலம், சாக்ஷி மாலிக்கும், பஜ்ரங் புனியாவும் தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
சாக்ஷி மாலிக் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, பின்வாங்கவும் மாட்டோம். சத்தியாகிரகத்துடன் இணைந்து ரயில்வேயில் எனது பொறுப்பையும் நிறைவேற்றி வருகிறேன். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், “போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டோம் என்று கூறப்படுவது வெறும் வதந்திதான். இதுபோன்ற செய்திகள் எங்களுக்கு கலங்க விளைவிக்கிறது. நாங்கள் போராட்டத்திலிருந்து பின் வாங்கவில்லை, இனிமேலும் பின்வாங்க மாட்டோம். நீதி கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்” என்று பஜ்ரிங் புனியா தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டம் குறித்து இன்னும் பல கேள்விகள் நிலவி வருகின்றன. அந்த கேள்விகள் என்னவென்று பார்ப்பதற்கு முன்னால், மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து முதலில் பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பாலியல் புகார்கள் முதல் போராட்ட களம் வரை

பட மூலாதாரம், YEARS
சாக்ஷி மாலிக், வினீத் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய போராட்டத்தின் கோரிக்கை.
’மல்யுத்த வீரர்களுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்தார்’ என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக, டெல்லியின் ’கனட் பிலேஸ்’ (Connaught place) காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு புகார்கள் பதிவாகியுள்ளன.
‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறு மல்யுத்த வீரர்களும், ஒரு இளம் மல்யுத்த வீரரும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு புகார் அளித்துள்ளனர். மற்றொரு புகாரில், ‘இளம் மல்யுத்த வீரருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகாரளித்துள்ளனர். இந்த FIR ’போக்சோ’ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டால், குற்றம்சுமத்தப்பட்டிருக்கும் நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஆனால் இத்தனை நாட்களுக்கு பிறகும், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை.
ஒருமாத கால தொடர் போராட்டத்திற்கு பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்கள், கடந்த மே 28ஆம் தேதியன்று திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
“ நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்த அதே நேரத்தில், இந்தியாவிற்காக விளையாடிய மல்யுத்த வீரர்களின் பேரணியை காவல்துறையினர் தங்களது பலத்தைகொண்டு தடுத்தனர்”
இந்த சம்பவத்திற்கு பின், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்கள் தங்களது பதக்கங்கள் அனைத்தையும் கங்கையில் வீசிவிட முடிவு செய்தனர்.

பட மூலாதாரம், TWITTER
இதற்காக சாக்ஷி மாலிக், வினீஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய மூவரும் ஹரித்வாருக்கு தங்களது பயணத்தை மேற்கொண்டனர். பதக்கங்களை கங்கையில் வீசிவதற்காக சென்றுகொண்டிருந்த அவர்களை, விவசாயத் தலைவர் நரேஷ் திக்கத் கடைசி நிமிடத்தில் வந்து தடுத்தார்.
இறுதியாக மல்யுத்த வீரர்கள் ஐந்து நாட்கள் வரை இந்திய அரசிற்கு அவகாசம் அளித்திருந்தனர். இந்த ஐந்து நாட்களுக்குள் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துவிட்டனர்.
அமித்ஷாவுடனான இந்த சந்திப்பிற்கு பிறகுதான், சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்தன.
அமித்ஷாவுடனான சந்திப்பில் என்ன நடந்தது?
சாக்ஷி உட்பட அனைத்து மல்யுத்த வீரர்களும் இத்தகைய செய்திகளை முற்றிலும் மறுத்தனர்.
அதேபோல் அமித்ஷாவுடன் நிகழ்ந்த தங்களது சந்திப்பு குறித்தும் சாக்ஷி மாலிக் உறுதிப்படுத்தினார்.
ஏ.என்.ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “நாங்கள் இந்த போராட்டத்திலிருந்து பின் வாங்கவில்லை. இனியும் பின்வாங்க மாட்டோம். நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினோம். ஆனால் அதில் எந்த முடிவும் கிடைக்கவில்லை. கடுமையான குற்றச்சாட்டுகளை சுமந்திருக்கும் பிரஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது ஒரே கோரிக்கை” என்று தெரிவித்தார்.
வினீஷ் மற்றும் பஜ்ரங் போராட்டத்திலிருந்து பின் வாங்கினார்களா?

பட மூலாதாரம், YEARS
வினீஷ் மற்றும் பஜ்ரங் போராட்டத்திலிருந்து பின் வாங்கிவிட்டதாக வந்த செய்திகளை சாக்ஷி மறுக்கிறார்.
ஏ.என்.ஐ., செய்தி முகமையிடம் பேசிய அவர், “இது முற்றிலும் தவறான செய்தி. நாங்கள் மூன்று பேரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நீதி கிடைக்கும் வரை ஒன்றாகவே இருப்போம். நாங்கள் மூன்று பேருமே போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் புனியாவும் இதையேத்தான் வழிமொழிந்துள்ளார்.
இதுகுறித்து வினீஷ் போகத் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் “இப்படியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு, உண்மையில் பெண் மல்யுத்த வீரர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து தெரியுமா? பலவீனமான ஊடகங்கள் அதிகாரத்தின் முன் நடுங்குகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் வேலைகள் குறித்து மல்யுத்த வீரர்கள் கூறுவது என்ன?
சாக்ஷி மாலிக் போலவே வினீஷ் மற்றும் பஜ்ரங் புனியாவும் தாங்கள் தங்களுடைய பணிகளுக்கு திரும்பியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இவர்கள் மூவரின் பதிவும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் காணப்பட்டது.
“எங்களது பதக்கங்கள் வெறும் 15ரூபாய்தான் மதிப்பு பெறும் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எங்களது வேலையை குறி வைத்து விமர்சித்து வருகின்றனர். எங்களுக்கான நீதியை பெறுவதற்கு இந்த வேலை ஒரு தடையாக இருந்தால், அதை தூக்கி எறிவதற்கு எங்களுக்கு பத்து நொடிகள் கூட ஆகாது. எங்கள் வேலையை விமர்சித்து எங்களை அச்சுறுத்த முடியும் என நினைக்காதீர்கள்” என்று அவர்கள் பதிவிட்டிருந்தனர்.
இளம் மல்யுத்த வீராங்கனை புகாரைத் திரும்ப பெற்றுவிட்டாரா?

பட மூலாதாரம், YEARS
இது தவிர, பிரஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்திருந்த இளம் மல்யுத்த வீராங்கனை, தன்னுடைய புகாரை திரும்ப பெற்றுவிட்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் இளம் மல்யுத்த வீராங்கனை பிரஜ் பூஷன் சரண் சிங் மீது அளித்திருந்த புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டிருக்கும் புகார் எப்படியும் கைவிடப்படலாம் என்பதால் அவர் தனது புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஆனால் இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை சாக்ஷி மாலிக் விளக்கமளித்தார்.
ஏ.என்.ஐ., செய்திடம் பேசிய அவர், “இது அனைத்துமே தவறான செய்திகள்தான். எங்களது சத்தியாகிரக போராட்டத்தை வலுவிழக்க செய்வதற்கும், மக்களை எங்களிடமிருந்து தூரமாக்குவதற்கும்தான் இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் இதனால் நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை, சோர்ந்து போக போவதுமில்லை” என்று தெரிவித்தார்.
நீடிக்கும் குழப்பங்கள்
மல்யுத்த வீரர்கள் இது தொடர்பாக தொடர்ந்து விளக்கமளித்து வரும் நிலையிலும், இந்த பிரச்னையில் தொடர்ச்சியாக சில குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
”அமித்ஷாவுடனான மல்யுத்த வீரர்கள் சந்திப்பில் என்ன நடந்தது? அந்த சில மணி நேர சந்திப்பில் அவர்கள் என்ன உரையாடினார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் இந்த சந்திப்பை ஒருங்கிணைத்தது யார் என்பதும் இதுவரை தெரியவில்லை.”
இப்போது இருக்கும் மிகப்பெரும் கேள்வி என்னவென்றால், மல்யுத்த வீரர்கள் தற்போது தங்களுடைய பணிகளுக்கு திரும்பிய பின்னரும், அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்பதுதான்.
அதேபோல் அவர்கள் தங்களுடைய பணிகளுக்கு திரும்பிவிட்டார்கள் என்றால், இந்த போராட்டத்தை இனி யார் முன்னின்று நடத்துவார்கள் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.
போராட்டம் நீடிக்கும் என்று மட்டுமே கூறிவரும் மல்யுத்த வீரர்கள், அந்த போராட்டம் எப்படி நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்த தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












