குழந்தைகளை சமூக ஊடகத்திலிருந்து தடுக்க முடியுமா? தடையை தவிர்க்க புது வழி கண்டுபிடித்த சிறார்கள்

டிசம்பர் 10 முதல், ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பட மூலாதாரம், BBC/Jessica Hromas

படக்குறிப்பு, சமூக ஊடகத் தடை தன்னைப் போன்ற குழந்தைகளைத் தடுக்காது என்று இசபெல் உறுதியாக நம்புகிறார்
    • எழுதியவர், டிஃப்பனி டர்ன்புல்
    • பதவி, பிபிசி

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்காக அமல்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தடையை முறியடிக்க, 13 வயது சிறுமியான இசபெல்லுக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது.

தடை விதிக்கப்பட்ட பத்துத் தளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டில் இருந்து வந்த ஒரு அறிவிப்பு அவரது திரையில் தோன்றியது. இந்த வாரம் தடைச்சட்டம் அமலுக்கு வந்தவுடன், அவர் 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரது கணக்கு முடக்கப்படும் என்று அது எச்சரித்தது.

"நான் என் அம்மாவின் புகைப்படம் ஒன்றை எடுத்தேன். அதை கேமராவின் முன் காட்டினேன். உடனே அது என்னை உள்ளே அனுமதித்துவிட்டது. 'உங்கள் வயதைச் சரிபார்த்ததற்கு நன்றி' என்று கூட சொன்னது," என்கிறார் இசபெல்.

மேலும், "யாரோ ஒருவர் பியோன்ஸின் முகத்தையும் பயன்படுத்தியதாகக் கூட கேள்விப்பட்டேன்," என்றும் அவர் கூறினார்.

டிசம்பர் 10 முதல், ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்தத் தடையை, உலகில் முதன்முறையாக அமல்படுத்தப்படும் கொள்கை என்றும், பல பெற்றோரால் வரவேற்கப்படுகிறது என்றும் ஆஸ்திரேலியா அரசு கூறுகிறது.

மேலும் குழந்தைகளை இணையத்தில் உள்ள தீங்கான உள்ளடக்கங்களிலிருந்து, சைபர் தொல்லை போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இது கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், குழந்தைகள் நன்றாக உறங்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் அரசு கூறுகிறது.

இசபெலின் தாய் மெல், தனது மகளுக்கு டிக்டாக், ஸ்னாப்சாட்டை கடுமையான மேற்பார்வையுடன் பயன்படுத்த அனுமதித்திருந்தாலும், அரசாங்கம் உறுதியளித்த இந்தத் தடை, தன்னைப் போன்ற பெற்றோர் குழந்தைகளுக்கு தெளிவான எல்லைகள் அமைக்க உதவும் என அவர் எதிர்பார்த்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கொள்கையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நிபுணர்களும் குழந்தைகளும்கூட எச்சரிக்கை விடுப்பதால், அந்த நம்பிக்கை இப்போது தளர்ந்துள்ளது. இந்தக் கொள்கை உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், மிகவும் செல்வாக்கு மிக்க சில நிறுவனங்களும் இதனை அச்சத்துடன் கண்காணித்து வருகின்றன.

 மெல்

பட மூலாதாரம், BBC/Jessica Hromas

படக்குறிப்பு, பிற அர்த்தமுள்ள ஆன்லைன் பாதுகாப்பு சீர்திருத்தங்களிலிருந்து தடை திசை திருப்பப்பட்டதாக மெல் வருத்தம் தெரிவிக்கிறார்.

தடை எவ்வாறு செயல்படுத்தப்படும்?

2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், சமூக ஊடகத்தை பயன்படுத்தியதற்காக பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் மீது எந்தத் தண்டனையும் விதிக்கப்படாது எனக் கூறப்பட்டது.

அதற்குப் பதிலாக, கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 16 வயதுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்த, அந்தந்தத் தளங்கள் "நியாயமான நடவடிக்கைகளை" எடுக்க வேண்டும்.

மிகவும் கடுமையான மீறல்களுக்கு, அவர்கள் 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (33 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.

அரசு வழங்கிய நிதியுடன், தொழில் துறை முன்னெடுத்த ஒரு பரிசோதனை, வயதை உறுதிப்படுத்தும் பல்வேறு வழிகளை ஆய்வு செய்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான அறிக்கை, அனைத்து முறைகளும் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமே எனக் கூறினாலும், எந்த முறையும் 100% நம்பகமானதல்ல, எல்லாவற்றிலும் சில ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்தது.

அடையாள அட்டைகளை பயன்படுத்தி சரிபார்ப்பதுதான் மிகவும் துல்லியமான முறையாக இருந்தது. ஆனால் அதற்கு பயனர்கள் தங்களின் முக்கியமான ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும் .

பயனாளர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பார்த்து வயதை மதிப்பீடு செய்வது (age inference), மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும், குறிப்பாக இளம் வயதினரிடம் நம்பத்தகுந்த துல்லியத்தை வழங்கவில்லை.

இருப்பினும், வயதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக அவை பல அடுக்குகளில் பயன்படுத்தப்படும்போது, "தனியுரிமைக்குப் பாதுகாப்பானது, வலிமையானது மற்றும் பயனுள்ளது" என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

"நீங்கள் ஒரு மது கடைக்கு சென்றால், விற்பனையாளர் உங்களை ஒரு பார்வை பார்த்து 'சரியாகத் தெரியவில்லை, அடையாள அட்டையை காண்பிக்க முடியுமா?' என்று கேட்பார் அல்லவா… அதே தத்துவம் தான் இங்கும்," என்கிறார் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட ஏஜ் செக் சான்றிதழ் திட்டத்தின் தலைவரும், சோதனையை நடத்தியவருமான டோனி ஆலன்.

ஆனால் அதன் கண்டுபிடிப்புகளில் சர்ச்சையில்லாமல் இல்லை. ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர், இந்த ஆய்வில் பாகுபாடு உள்ளது என்றும், தனியுரிமை சிறப்பாக உள்ளது போல காட்ட முயற்சிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மேலும், இளம் வயதினர் தடைகளை எவ்வாறு மீறுவார்கள் என்பதை ஆய்வு செய்தாலும், அதை நேரடியாகச் சோதிப்பது இவர்களின் பணியாக இல்லை.

ஆனால் அதன் கண்டுபிடிப்புகளில் சர்ச்சையில்லாமல் இல்லை. ஆலோசனைக் குழுவின் இரண்டு முன்னாள் உறுப்பினர்கள், இந்த ஆய்வின் மீது பாகுபாடு மற்றும் “தனியுரிமை சுத்திகரிப்பு” (privacy-washing) நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images

அதன் பின்னர், தடையைத் தவிர்க்கும் முறைகள் குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான குறிப்புகள் பரவத் தொடங்கின.

வயது உறுதி தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்கள், தடையை தவிர்ப்பதை தடுக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே இருப்பதாக கூறுகிறார்கள். இசபெல் பயன்படுத்தியதாகக் கூறியதைப் போன்ற ஒரு புகைப்படம், இந்த சரிபார்ப்புகளை ஏமாற்றக் கூடாது.

இதைப் பற்றி பிபிசி ஸ்னாப்சாட்டிடம் கேட்டபோது, இந்தத் தடையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள "தொழில்நுட்ப சவால்கள்" குறித்து நாங்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துள்ளோம். "இதுவும் அத்தகைய ஒரு சவால் தான் " என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

"தடையைத் தவிர்க்கும் முயற்சிகளை தடுக்கப் பயன்படும் கருவிகள் தினமும் மேம்பட வேண்டும், இது இடையறாத ஒரு போராட்டம்," என்று ஸ்னாப்சாட்டின் சார்பாக வயது மதிப்பீடுகளைச் செய்யும் கே-ஐடி நிறுவனத்தின் நிர்வாகி லுக் டெலானி கூறினார்.

'வேறு ஒரு ஆப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்'

தனது அனுபவத்தால் உற்சாகமடைந்த இசபெல், இந்தத் தடை சரியாகச் செயல்படாது என்று நிச்சயமாக கருதுகிறார்.

"ஒருவேளை நான் உண்மையிலேயே தடை செய்யப்பட்டால், வேறு ஒரு ஆப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்," என்கிறார் இசபெல்.

அது விவாதத்திற்குரிய விஷயம் என்று மெல் தெளிவுபடுத்துகிறார். ஆனால், குழந்தைகள் மற்ற அப்பிளிகேஷன்களுக்குச் செல்வதால், தளங்களுக்கும் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புக்கும் இடையே ஓயாத இத்தகைய பிரச்னைகள் தொடரும் என்று அவர் கவலைப்படுகிறார்.

2013 முதல் 2017 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஃபேஸ்புக்கை வழிநடத்திய ஸ்டீபன் சீலர் உள்ளிட்ட சிலர், சமூக ஊடக நிறுவனங்கள் இந்தத் தடையை மறைமுகமாக தகர்க்க முயற்சிக்கலாம் என்றும், அபராதங்கள் அவர்களைச் சரியாக நடக்கத் தூண்டும் அளவுக்கு இல்லை என்றும் கூறுகின்றனர்.

உதாரணமாக, ஃபேஸ்புக் உலகளவில் அந்த அளவு பணத்தை இரண்டு மணி நேரத்திற்குள் சம்பாதித்து விடுகிறது.

"அது ஒரு பார்க்கிங் டிக்கெட் மாதிரிதான்," என்று அவர் கூறுகிறார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், பாதுகாப்பை விட லாபத்துக்கு முன்னுரிமை வழங்குவதாக அமெரிக்க செனட்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சவால்கள்

மேலும், சட்டரீதியான சவால்களும் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் 'ஆர்வெல்லியன்' (அதிகக் கட்டுப்பாட்டு தன்மை) என்று குற்றம் சாட்டி, இரண்டு இளைஞர்கள் ஏற்கெனவே அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளனர் .

யூடியூப் மற்றும் கூகுளின் உரிமையாளரான ஆல்பபெட்டும் தனிப்பட்ட ஒரு வழக்கை தொடர்வது குறித்து பரிசீலித்து வருகிறது.

மேலும், மனித உரிமை அமைப்புகளும் சில சட்ட நிபுணர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"ஒரு கொள்கை வெற்றியடைய, 100% குழந்தைகள் சமூக ஊடகத்தில் இல்லாமல் இருக்க வேண்டியதில்லை, சுமார் 80% குழந்தைகள் அதில் இருந்து விலகினாலே, மீதமுள்ளவர்களும் அதைப் பின்பற்றுவார்கள்"என்கிறார் ஆலன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது பாதிப்பைக் குறைக்குமா?

இதைச் செய்ய முடியுமா என்பதைக் கடந்து, இதைச் செய்ய வேண்டுமா என பலரும் வேறொரு கேள்வியை முன்வைக்கிறார்கள்.

முதலில், இந்தக் கொள்கை குழந்தைகளை இணையத்தின் இருண்ட பகுதிகளுக்குத் தள்ளும் அபாயம் உள்ளது என்ற கவலை இருக்கிறது.

அது, இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள கேமிங் தளங்களின் சாட்ரூம்களாக இருக்கலாம் அல்லவா? ஏனென்றால் அவை அதி தீவிர கருத்துகளுக்கான முக்கிய இடங்களாக இருக்கின்றன.

அதே நேரத்தில், டிக்டாக், யூடியூப் போன்ற பல ஆப்களில் கணக்கு இல்லாமல் கூட குழந்தைகள் அவற்றில் உள்ள உள்ளடக்கங்களைப் பார்ப்பது சாத்தியம்.

இது ஃபில்டர் செய்யப்படாத உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்கள் நிறைந்த இன்னும் அபாயகரமான சூழலாக இருக்கலாம். பல தளங்கள் இப்போது சிறுவர்கள் பயன்படுத்தும் கணக்குகளில் இந்த உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துகின்றன.

உள்ளடக்கத்தைக் கண்காணிப்பது தொடர்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது குறை கூறப்பட்டாலும், சிறிய தளங்களை விட அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள் என்ற கருத்தை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

உதாரணமாக, ஃபேஸ்புக்கில், ஒரு பெரியவர் ஒரு குழந்தைக்கு அடிக்கடி செய்தி அனுப்பினால் எச்சரிக்கை மணிகளை எழுப்பும் அமைப்புகள் உள்ளன.

உள்ளடக்கத்தைக் கண்காணிப்பது தொடர்பாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது குறை கூறப்பட்டாலும், சிறிய தளங்களை விட அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள் என்ற கருத்தை பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

பட மூலாதாரம், BBC/Jessica Hromas

படக்குறிப்பு, தடை குறித்து கவலைப்படவில்லை என்று இசபெல் கூறுகிறார்.

சமூக ஊடகங்கள் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிவியலும் சமூக ஊடக தளங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சிறப்பாகக் கண்காணிக்கச் செய்தல், அல்காரிதம்களின் ஆற்றலைக் குறைத்தல், மற்றும் வலைதள வாழ்க்கையின் யதார்த்தத்திற்காகக் குழந்தைகளைத் தயார் செய்வது ஆகியவற்றில்தான் முக்கிய கவனம் இருக்க வேண்டும் என பலரும் பரிந்துரைத்துள்ளனர்.

தனது அரசாங்கமும் அதைச் செய்ய விரும்புவதாக தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். தடைச் சட்டம் பூரண தீர்வாக இருக்காது என்றாலும், பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

"இது ஒரு மருந்தல்ல. மாறாக சிகிச்சைத் திட்டம். சிகிச்சைத் திட்டங்கள் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும்," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு