You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு அதிபர் இந்தியாவை விமர்சித்தாரா? சீன பயணம் முடிந்து தாயகம் திரும்பியதும் என்ன பேசினார்?
மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது என்று அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முய்சு தாயகம் திரும்பியுள்ளார். தலைநகர் மாலேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய பெருங்கடலில் மாலத்தீவு மிகச்சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளோம். இந்திய பெருங்கடலில் இத்தகைய சிறப்பு பெற்ற நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்தியப் பெருங்கடல் குறிப்பிட்ட எந்தவொரு நாட்டிற்கும் சொந்தம் கிடையாது. அது பெருங்கடலைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் சொந்தமானது.
மாலத்தீவு சிறிய நாடாக இருக்கலாம். ஆனால், அதுவே எங்கள் மீது அதிக்கம் செலுத்த பிறருக்கு உரிமத்தை தந்துவிடாது" என்று பேசியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அந்நாட்டு அமைச்சர்கள் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் மாலத்தீவு அதிபர் முய்சு இவ்வாறு பேசியுள்ளார். அவரது பேச்சில் மறைமுகமாக இந்தியாவையே விமர்சித்ததாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
5 நாள் பயணமாக திங்கள்கிழமை சீனா சென்ற முய்ஸுவை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தில் முய்ஸு அவரது மனைவி சஜிதா முகமது மற்றும் உயர்மட்டக் குழுவுடன் சென்றுள்ளார்.
இந்தியாவை புறக்கணித்து முய்சு துருக்கி, சீனா பயணம்
முன்னதாக, மாலத்தீவின் புதிய அதிபர் முய்சு இந்த மாதம் சீனாவிற்கு அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று சீனா தெரிவித்திருந்தது.
அதிபராக பதவியேற்ற பிறகு வெளிநாட்டுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை பயணம் இது என்கிறது சீனா.
முகமது முய்சுவின் மாலத்தீவு முற்போக்கு கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்துப் பிரசாரம் மேற்கொண்டதுடன் மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருப்பதை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியது.
முய்சுவுக்கு முன், மாலத்தீவு அதிபர் யாராக இருந்தாலும் பதவியேற்றதும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருவதே வாடிக்கையாக இருந்தது. முய்சு இந்த பாரம்பரியத்தை மாற்றியுள்ளார். தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு துருக்கியை தேர்ந்தெடுத்த அவர் தற்போது சீனாவை அடைந்துள்ளார்.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் புகைப்படங்கள் குறித்து மாலத்தீவு தலைவர்கள் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலத்தீவு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கருத்து தெரிவித்த தலைவர்கள் அரசாங்கத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முய்சுவின் வருகை குறித்து சீனா என்ன கூறியது?
சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வாங் வென்பின் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பழமையானவை என்றும் அவர் கூறினார்.
"இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜ தந்திர உறவுகள் 52 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அன்றிலிருந்து, இருநாட்டு உறவுகளில் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இது வெவ்வேறு அளவில் இரு நாடுகளுக்கு இடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நலன்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.”
2014 ஆம் ஆண்டில், அதிபர் ஷி ஜின்பிங் மாலத்தீவுக்கு பயணம் செய்ததாகவும் அவர் கூறினார். “அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும், எதிர்கால நலன்களை நோக்கமாகக் கொண்டும் பேச்சுகள் நடந்தன.”
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த பத்தாண்டுகளில், மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு ஆழமடைந்துள்ளது,” என்றார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முய்சுவின் சீனப் பயணம் குறித்து வாங் வென்பின் மேலும் கூறுகையில், “மாலத்தீவு அதிபரான பிறகு முய்சுவின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்,” என்றார்.
இருப்பினும், இதற்கு முன்னர் முய்சு துருக்கி நாட்டுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்தார். மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் தகவலின்படி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவானின் அழைப்பின் பேரில் முய்சு மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டனர் எனத் தெரியவருகிறது.
பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அப்போது இருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.
துபாயில் நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு (COP 28) முய்சு துருக்கி நாட்டுக்குச் சென்றார்.
அங்கு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை முறைப்படி சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும், மாலத்தீவில் உள்ள வேலனா விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய முய்சு, மாலத்தீவு மக்களின் விருப்பத்தை வரவேற்பதாகவும், தங்கள் வீரர்களை இந்தியாவுக்கு திரும்ப அழைப்பதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டு, சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில், 'சீனா-இந்தியப் பெருங்கடல் பிராந்திய வளர்ச்சி ஒத்துழைப்புக்கான மன்றக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், மாலத்தீவு சார்பில் அதிபருக்குப் பதிலாக, துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப் பங்கேற்றார் .
மாலத்தீவுடனான சீனாவின் உறவுகள்
சீனாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது.
இதற்குப் பிறகு, மாலத்தீவு 2009 இல் சீனாவில் தனது தூதரகத்தையும் , சீனா 2011 இல் மாலத்தீவில் தனது தூதரகத்தையும் திறந்தது.
2014 ஆம் ஆண்டில், மாலத்தீவுக்கு சீனா 16 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியது. இந்த ஆண்டு, மாலத்தீவு சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்தது.
2017 இல், மாலத்தீவு சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
முகமது முய்சுவின் மாலத்தீவின் முற்போக்குக் கட்சியில் சீனாவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரது கட்சி 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்ததுடன் மாலத்தீவில் நிலைகொண்டிருந்த இந்திய வீரர்களை திரும்பப்பெறுமாறும் இந்தியாவைக் கேட்டுக்கொண்டது.
முன்னதாக, மாலத்தீவு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது இப்ராகிம் சோலி, ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ என்ற முழக்கத்தை முன்வைத்திருந்தார். அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார்.
2018ல், இப்ராகிம் சோலி மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற போது, பிரதமர் நரேந்திர மோதி அந்த விழாவில் கலந்து கொண்டார்.
அவரது ஆட்சியின் போது, மாலத்தீவு கடந்த ஆண்டு 'இந்தியப் பெருங்கடல் பிராந்திய மன்ற பேச்சுவார்த்தையில்' பங்கேற்க மறுத்துவிட்டது .
முய்சுவின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்தது என்ன?
- 30 செப்டம்பர் 2023 - தேர்தலில் 46 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 17 நவம்பர் 2023 - பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு மாலத்தீவின் 8வது அதிபரானார்.
- 17 நவம்பர் 2023 - மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகளை அகற்றுவது தொடர்பாக கிரண் ரிஜிஜூவிடம் பேசினார் .
- 26 நவம்பர் 2023 - தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக துருக்கி நாட்டுககுப் பயணம் மேற்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 10 அன்று, துருக்கியுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக மாலத்தீவு அங்காராவில் தனது தூதரகத்தைத் திறக்கும் என்று அறிவித்தார்.
- 30 நவம்பர் 2023 - COP 28 இல் பங்கேற்க துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார்.
- 01 டிசம்பர் 2023 - துபாயில், COP 28-ல் பங்கேற்க வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை முய்சு சந்தித்தார் .
- 03 டிசம்பர் 2023 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துககொண்டு மாலத்தீவுக்குத் திரும்பினார் .
இந்தியா - மாலத்தீவு உறவு எப்படி?
மாலத்தீவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
1965 இல், இந்தியா மாலத்தீவில் தனது அதிகாரப்பூர்வ உறவுகளைத் தொடங்கி, அவ்வாறு செய்த முதல் நாடு என்ற இடத்தைப் பெற்றது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில், மாலத்தீவின் அரசாங்கங்கள் இந்தியாவை நோக்கி அல்லது சீனாவை நோக்கி சாய்ந்தன.
இந்த சிறிய தீவின் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. 1988-ல் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றினார்.
கடந்த 2018-ம் ஆண்டு மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்ட போது, பிரதமர் மோடி தண்ணீரை அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு மோடி அரசும் மாலத்தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக பலமுறை கடன் கொடுத்தது.
இந்தியா 2010 மற்றும் 2013 இல் இரண்டு ஹெலிகாப்டர்களையும், 2020 இல் ஒரு சிறிய விமானத்தையும் மாலத்தீவுக்கு பரிசாக வழங்கியது.
இந்த விமானங்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா கூறியிருந்தது.
2021 ஆம் ஆண்டில், இந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை இயக்க சுமார் 75 இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மாலத்தீவுக்கு இந்தியா ராணுவ தளவாடங்களையும் வழங்கி வருகிறது. மாலத்தீவு கடற்படைக்கு கப்பல் கட்டும் தளம் அமைக்க இந்தியாவும் உதவி வருகிறது.
இந்தியாவும் சீனாவும் மாலத்தீவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தெரிகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முய்சு சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தியா மற்றும் மாலத்தீவுகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜதந்திர, ராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன.
மாலத்தீவு பிரச்னையில் இந்தியா vs சீனா
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் 2018 இல் மிகவும் கசப்பானதாக மாறின. இந்த நிலை பிப்ரவரி 1, 2018 அன்று மாலத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புடன் தொடங்கியது.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்ததன் மூலம் அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச விதிகளை மீறியதாக மாலத்தீவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார் என்பதுடன் இதைத் தொடர்ந்து அவர் மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்தார்.
இந்த அவசரநிலை 45 நாட்கள் நீடித்தது. இதை இந்தியா எதிர்த்தது. "மாலத்தீவில் அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்," என்று இந்தியா கூறியது.
மாலத்தீவில் ஏற்பட்ட வியத்தகு அரசியல் நெருக்கடி இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் கவலையளித்தது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் அப்துல்லா யாமீன், சீனா, பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவுக்கு தனது தூதர்களை அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, மாலத்தீவின் உள் விவகாரங்களில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்று எச்சரித்த சீனா, மாலத்தீவின் இறையாண்மையை எந்தச் சூழலிலும் மீறக் கூடாது என்றும் கூறியது.
அதே நேரம், மாலத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் நஷீத், நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு இந்தியாவிடமிருந்து ராணுவத் தலையீட்டை எதிர்பார்த்தார். இதற்கிடையில், சீன செய்தி இணையதளத்தை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், சீன போர்க்கப்பல்கள் மாலத்தீவை நோக்கி நகர்ந்ததாக செய்தி வெளியிட்டது.
இருப்பினும், அந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் இப்ராகிம் சோலி வெற்றி பெற்றார். அவர் இந்தியாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இருப்பினும், அவரது அரசாங்கம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயன்றது.
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட ஒரு நாடாகும். அதன் மக்கள் தொகையில் 98 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். மாலத்தீவு குடியுரிமைக்கு யாராவது விண்ணப்பித்தால், அவர் முஸ்லிமாக இருப்பது அவசியம்.
மாலத்தீவு வெறும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு குடியரசு.
இந்திய மற்றும் சீன நாடுகளின் உத்தி ரீதியிலான பார்வையில் இந்தியப் பெருங்கடலில் ஒரு புவியியல் முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் இந்த நாடு மிகவும் முக்கியமானது.
மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவிடமிருந்து பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. ஆனால் வியூக ரீதியாக அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக சீனாவிற்கு இந்த நாடு மிகவும் முக்கியமானது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)