You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதி சர்ச்சை: சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு - பின்னணியில் என்ன நடந்தது?
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க
- பதவி, பிபிசி தமிழுக்காக
அமலாக்கத்துறை சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயி ஒருவருக்கு சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன?
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்குப் பெரிய கல்வராயன் மலையின் அடிவாரப் பகுதியில் ஆறரை ஏக்கர் சொந்த நிலம் உள்ளது.
கிருஷ்ணன் திருமணமானவர், அவருக்குக் குழந்தைகள் இல்லை. கண்ணையனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.
விவசாயிகளான இவர்களுக்கு அமலாக்கத் துறையில் இருந்து அண்மையில் சம்மன் வந்தது. அதில் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, “வழக்கு விசாரணையில் உள்ளதால், இப்போது அது பற்றி பேசமுடியாது” என தெரிவித்தார்.
பாஜக பிரமுகர் மீது புகார் மனு
இது தொடர்பாக விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில் "தங்களது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜக பிரமுகரான குணசேகரன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரைக் கைது செய்திட வேண்டும்," என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
சாதிப் பெயரைக் குறிப்பிட்டு தங்களுக்கு சம்மன் அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய அமலாக்கத் துறையின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
'ஏழைகளான எங்களுக்கு சொத்துக்குவிப்பு சம்மன் ஏன்?'
புகார் மனுவை காவல்துறை உயர் அதிகாரியிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்ட பிறகு, அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் தங்களுக்கு சொத்துக் குவிப்பு, கருப்புப் பணம் பரிமாற்றம் எனக் கூறி அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் கூறினர்.
மேலும் இதற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதோடு, "அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் என்பவரே காரணம் என்றும், விவசாயிகளின் 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டல் விடுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும்" செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கூறினர்.
போலி ஆவணம் தயாரித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?
செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணன், "நானும் என் அண்ணன் கண்ணையனும் சேர்ந்து, எங்கள் நிலத்தில் 5 ஏக்கரை அடமானமாக வைத்து, 1991ஆம் ஆண்டு 1 லட்சம் ரூபாய் பெற்றது போன்ற போலி ஆவணத்தைத் தயாரித்து, ஆத்தூர் சப்-கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார் பா.ஜ.க.வை சேர்ந்த குணசேகரன்."
"இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக நடைபெற்றுக கொண்டிருக்கிறது. அதுவரையிலும் நாங்கள் பயிரிட்டிருந்த பயிர்களை அறுவடை செய்யக்கூடாது. விவசாயம் செய்யக்கூடாது என்று தடுத்து வந்தார்."
"பின்னர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அமலாக்கத் துறையில் எங்கள் மீது கள்ளநோட்டு பரிமாற்றம் செய்து வருகிறோம் என்கிற தவறான புகார்களை அளித்திருக்கிறார்."
"ஜூலை மாதம் அமலாக்கத்துறையின் மூலம் எங்களுக்குக் கடிதம் வந்தது. அதில் எங்களுடைய சாதியைக் குறிப்பிட்டு, நேரில் ஆஜராகும்படி கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் உதவியுடன் நாங்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதமே நேரில் ஆஜரானோம்," என்று கூறினார்.
வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாது
ஜூலை மாதம் நேரில் ஆஜரானபோது தங்களைத் தனியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் உடன் இருக்கக்கூடாது எனவும் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால், "அதற்கு நாங்கள் சம்மதிக்காததால், அங்கேயே எங்களது வழக்கறிஞருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது."
"உடனே நாங்கள் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பா.ஜ.க மாவட்டச் செயலாளர் குணசேகரன் மீதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் புகார் அளித்தோம். அதன் பின்னர் தமிழக காவல்துறையினர், நாங்கள் கொடுத்த புகாரில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகளின் பெயர்களை நீக்கிவிட்டு, புகாரளிக்க வற்புறுத்தினர்."
"அதையடுத்து நாங்கள் ஊடகங்களில் தெரியப்படுத்தினோம். அப்படியிருந்தும் பல்வேறு விதத்தில் பா.ஜ.க நிர்வாகி எங்களுக்குத் தொந்தரவு அளித்து வருகிறார். அதனால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட பா.ஜ.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்திருக்கிறோம்," என்றார்.
விவசாயம் செய்ய இயலாத சூழல்
விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் கண்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "அவர்கள் சாதாரண விவசாயிகள். அவர்கள் சொத்து சேர்த்ததாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு கடன் வாங்கிக் கொண்டுதான் சென்னைக்குச் சென்றார்கள்.
தவறானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும். விவசாயம் செய்ய முடியாத சூழலில் உள்ள இவர்கள் எப்படி சொத்து வாங்க முடியும்!" என்றார் கண்ணன்.
'ஆத்தூர் ஊரக காவல் நிலையம்தான் காரணம்'
நடந்த சம்பவங்கள் குறித்து பா.ஜ.க நிர்வாகி குணசேகரன் பிபிசி தமிழிடம் கூறியதாவது, "காவல்துறைதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். ஆத்தூர் ஊரக காவல் நிலையம்தான் இந்த நாடகத்திற்குக் காரணம்."
"எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. குத்தகைக்கு விவசாய நிலத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றேன். இது தொடர்பாக வழக்கும் உள்ளது. என்மீது சுமத்தப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மைக்குப் புறம்பானவை."
"என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக மேற்கண்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இதை அரசியல் ஆக்குகின்றனர். அமலாக்கத்துறைக்கு நான் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும்,” என்றார்.
'அமலாக்கத் துறைக்கு பூதாகரமான அதிகாரம் கிடையாது'
விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன் தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான பிரவீனா பிபிசி தமிழிடம் கூறுகையில், "இந்தியாவை பொறுத்தவரை சட்டம்தான் நாட்டை வழி நடத்துகிறது. அமலாக்கத் துறைக்கு பூதாகரமான அதிகாரம் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்," என்றார்.
"இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இது தவறு. அமலாக்கத்துறை சொத்துகளை அதிகமாகச் சேர்த்த அமைச்சர்களுக்கு சம்மன் அனுப்புவது என்பது வேறு. ஆனால் சாதாரண விவசாயிகளுக்கு கருப்புப் பண மோசடி குற்றம் சட்டப் பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.
எந்த அடிப்படையில் யார் கொடுத்த புகாரில் என அதற்கான விவரங்கள் எதுவுமே இல்லை. அவர்கள் இருவரும் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களுடன் நானும் சென்றேன்," என்றார் பிரவீனா.
ஆனால், தன்னை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் சட்டத்தில் அதற்கு இடம் உண்டு என அவர்களுக்குச் சொல்லியும் பலனில்லை எனவும் கூறினார் பிரவீனா. இதுகுறித்து காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.
"விசாரணைக்குச் சென்றபோது 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தற்போது நேரடியாக விவசாயிகள் புகார் அளித்திருப்பதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் சொல்வது ஆச்சரியமாக உள்ளது."
"இது போன்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகவே உள்ளது. தமிழக அரசு இந்த விஷயத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் பிரவீனா கூறினார்.
சாதிப் பெயரை சேர்த்தது ஏன்? அமலாக்கத்துறை கூறும் விளக்கம் என்ன?
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி அறிக்கையில், அமலாக்கத்துறை இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, ஒரு அமலாக்கத்துறை அதிகாரி, "விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் இரண்டு காட்டு மாடுகளைக் கொன்றது தொடர்பாக, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேலம் வனத்துறை 2017ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்திருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி தமிழ்நாடு வனத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் மீது மார்ச் 2022இல் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) வழக்குப் பதிவு செய்தோம்.
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் காட்டுயிர் தொடர்பான வழக்குகளைக் கண்காணிப்பதற்கான நிதி நடவடிக்கைக் குழுவின் ஆணைப்படி சமீபகாலமாகப் பல காட்டுயிர் வழக்குகளை விசாரணைக்கு எடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்தோம்.
பி.எம்.எல்.ஏ வழக்குகளில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையாக கண்ணையன் மற்றும் கிருஷ்ணனுக்கு 2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரம் எங்களுக்குத் தற்போதுதான் தெரிய வந்துள்ள்து. அதனால், வழக்கைக் கைவிட முடிவு செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.
மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் விவசாயிகளின் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டது பற்றி பேசுயுள்ள மற்றொரு அமலாக்கத்துறை அதிகாரி, "காவல்துறையில் இருந்து வரும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது, வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பிரயோகித்துத்தான் மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அப்படித்தான் சாதிப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இது மிகவும் சிறிய வழக்கு. முதலில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கக் கூடாது. இதில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை," எனக் கூறியுள்ளார்.
'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'
இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் சாதிப் பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டின் பழந்தமிழ் தொல்குடிகளில் ஒன்றான தேவேந்திரகுல வேளாளர்களின் குடிப்பெயரை நாங்கள்தான் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டோம் என்று பிரதமர் மோதி தலைமையிலான பாஜக அரசு பேசி வந்த நிலையில், தற்போது அதே அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறையே அம்மக்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பியுள்ளது. இத்ஹ பாஜகவின் மனுநீதி முகத்தையே காட்டுகிறது," எனத் தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் க. கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "அமலாக்கத்துறை எதற்காக ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது என்பது குறித்து தேசிய அமலாக்கத்துறை இயக்குநரகம் விளக்கம் அளிக்க வேண்டும். சாதிப் பெயரை குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பிய அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்," என்றார்.
"விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் போராட வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற விஷயங்களில் அமலாக்கத் துறை கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்," என்று கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)