You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதியின் லட்சத்தீவு பயணத்தால் மாலத்தீவில் என்ன பிரச்னை? 3 அமைச்சர்கள் இடைநீக்கம் ஏன்?
பிரதமர் நரேந்திர மோதியின் லட்சத்தீவு பயணத்தின் போது மாலத்தீவு அரசின் அமைச்சர் மரியம் ஷியுனா மற்றும் பிற தலைவர்கள் கூறிய ஆட்சேபகரமான கருத்துகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
முகமது முய்ஸு அதிபராக பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து சீர்குலைந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு இந்த அறிக்கைகள் பெரும் அடி என்று வர்ணிக்கப்படுகிறது.
இதற்கு இந்திய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். #BycottMaldives எனும் ஹேஷ்டாக் இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
இதற்கிடையில், மாலத்தீவின் முகமது முய்ஸு அரசாங்கம் பதற்றத்தை தணிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. மாலத்தீவு அரசாங்கம் முதலில் அமைச்சரின் கருத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதன் பின்னர், ஆட்சேபகரமான கருத்து தெரிவித்தவர்கள் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாலத்தீவு அரசாங்கம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3 அமைச்சர்கள் இடைநீக்கம்
இதுகுறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்டை நாடான இந்தியாவை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவு குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தில் பதவிகளை வகித்து சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளை செய்தவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின்படி, மரியம் ஷியுனாவைத் தவிர, மல்ஷா ஷெரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் எம்.பியுமான ஈவா அப்துல்லா, அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளதோடு, மாலத்தீவு அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்தி நிறுவனமான ANIஇன் அறிக்கை படி, “மாலத்தீவு அரசாங்கம் அமைச்சரின் கருத்துக்களில் இருந்து விலகி இருப்பது முக்கியம். அரசாங்கம் அமைச்சர்களை இடைநீக்கம் செய்துள்ளது என்று எனக்குத் தெரியும், ஆனால் மாலத்தீவு அரசாங்கம் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்." என்று கூறியுள்ளார் ஈவா அப்துல்லா.
மேலும், "அமைச்சரின் கருத்து வெட்கக்கேடானது. அவரது இனவெறி கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தியா மற்றும் இந்திய மக்கள் குறித்த அவரது கருத்துக்கள் மாலத்தீவு மக்களின் கருத்து அல்ல. நாம் எந்த அளவுக்கு இந்தியாவைச் சார்ந்து இருந்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியா தான் முதலில் உதவியது." என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசியுள்ள அவர், “பொருளாதார உறவுகள், சமூக உறவுகள், சுகாதாரம், கல்வி, வணிகம், சுற்றுலா போன்றவற்றுக்கு நாங்கள் இந்தியாவைச் சார்ந்து இருக்கிறோம். மாலத்தீவு மக்கள் இதை அறிந்திருக்கிறார்கள், அதற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய இழிவான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன." என்று கூறியுள்ளார் ஈவா அப்துல்லா.
முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், இப்ராகிம் முகமது சோலி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாது மாலத்தீவு அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் சமீபத்திய மாதங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக 2023 நவம்பரில் முகமது முய்ஸு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான கசப்பு அதிகரித்துள்ளது.
முய்ஸுவுக்கு முன், இப்ராஹிம் முகமது சோலி மாலத்தீவின் அதிபராக இருந்தார், அவருடைய அரசாங்கம் 'இந்தியா ஃபர்ஸ்ட்' (India First) என்ற கொள்கையை பின்பற்றியது. அதேசமயம் முய்ஸு 'இந்தியா அவுட்' (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்டார். வெற்றி பெற்ற பிறகு, முய்ஸுவின் முடிவுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இடைவெளியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவை விட சீனாவுடன் அதிகம் நெருக்கம் கொண்டவராக கருதப்படுகிறார் முய்ஸு.
பிரதமர் மோதியின் லட்சத்தீவு பயணம்
பிரதமர் நரேந்திர மோதி இந்த வார தொடக்கத்தில் லட்சத்தீவுக்குச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் படங்களை பிரதமர் மோதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படங்களைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோதி, 'சாகசப் பயணத்தை விரும்புபவர்கள் கண்டிப்பாக லட்சத்தீவுக்கு வர வேண்டும்' என்று எழுதியிருந்தார்.
அவர் இந்த பயணத்தின் போது ஸ்நோர்கெலிங் விளையாட்டிலும் ஈடுபட்டார். ஒரு வகையில் லட்சத்தீவுகளின் சுற்றுலாவை அவர் மேம்படுத்துவதை நம்மால் காண முடிந்தது.
இந்தப் படங்களைப் பார்த்ததும் லட்சத்தீவு என்று கூகுளில் திடீரென லட்சக் கணக்கானோர் தேடினர், இனி மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவில் விடுமுறையைக் கொண்டாடுங்கள் என்று சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியது.
இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மாலத்தீவுக்கு வருகிறார்கள்.
மாலத்தீவில் உள்ள இந்திய ஹைகமிஷன் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் 2 லட்சத்து 41 ஆயிரம் பேரும், 2023இல் சுமார் 2 லட்சம் பேரும் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர்.
மாலத்தீவு அமைச்சரின் ஆட்சேபகரமான கருத்து
மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவுக்குச் செல்வது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்தபோது, மாலத்தீவிலிருந்தும் எதிர்வினைகள் வரத் தொடங்கின.
இதில், மாலத்தீவு அரசின் அமைச்சர் மரியம் ஷியூனாவின் கருத்தும் அடக்கம். பிரதமர் மோதியின் புகைப்படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய விஷயங்களைக் கூறினார்.
பின்னர் அவர் தனது பதிவை நீக்கிவிட்டார். ஆனால் மற்றொரு பதிவில், 'மாலத்தீவுக்கு இந்திய ராணுவம் தேவையில்லை' என்று மரியம் கூறினார்.
மரியம் இதுபோன்ற பல பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார், அந்தப் பதிவுகளில் மாலத்தீவின் அழகைக் காண வருமாறு அந்நாட்டு மக்கள் கேட்டுக்கொள்வது போன்ற உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
மரியம் தவிர, மாலத்தீவின் பல தலைவர்களும் மக்கள் விரும்பாத ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.
இதுபோன்ற கருத்துகளுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு சாமானியர்கள் மட்டுமின்றி பாலிவுட் நட்சத்திரங்களும், வீரர்களும் எதிர்வினையாற்றினர்.
அதன் தாக்கம் மாலத்தீவிலும் தெரிந்தது. மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், இந்த விவகாரத்தை சரியாக கையாளுமாறு தனது நாட்டு அரசுக்கு அறிவுறுத்தினார்.
"மாலத்தீவு அமைச்சர் மரியம் மோசமான கருத்துக்களைப் பேசுகிறார், அதுவும் மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும் நட்பு நாடான இந்தியா குறித்து. இதுபோன்ற அறிக்கைகளில் இருந்து முய்ஸு அரசு விலகி இருக்க வேண்டும். அதேவேளை, இவை அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்." என முகமது நஷீத் சமூக ஊடகங்களில் கூறியிருந்தார்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலி இந்தியா குறித்த அமைச்சரின் கருத்துக்கள் அர்த்தமற்றவை என்றும், நல்லுறவை கெடுக்கக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.
“மாலத்தீவு அரசாங்க அதிகாரிகள் சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிராக வெறுப்பு மொழியைப் பயன்படுத்துவதை நான் கண்டிக்கிறேன். இந்தியா எப்போதுமே மாலத்தீவின் நல்ல நண்பராக இருந்து வருகிறது, இதுபோன்ற அர்த்தமற்ற அறிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையேயான பல வருட நட்பை எதிர்மறையாக பாதிக்க நாம் அனுமதிக்கக் கூடாது." என இப்ராகிம் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில் கூறியுள்ளார்.
இது தவிர, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தனது பதிவில், "இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் கண்டனத்திற்குரியது மற்றும் அருவருப்பானது" என்று கூறியுள்ளார்.
"இந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பதவிகளை வகிப்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். சமூக ஊடக செயல்பாடு இனி இருக்காது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும்."
“இந்தியா- மாலத்தீவு பந்தம், பரஸ்பர மரியாதை, வரலாறு, கலாச்சாரம் மற்றும் வலுவான உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா ஒரு உண்மையான நட்பு நாடு", என்றும் அவர் கூறியுள்ளார்.
மாலத்தீவு அரசின் விளக்கம்
சர்ச்சை தொடங்கிய சில மணி நேரம் கழித்து, மாலத்தீவு அரசு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, “வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட தரக்குறைவான கருத்துகள் மாலத்தீவு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்தக் கருத்துகள் தனிநபர் சார்ந்தவை மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துகளை அவை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை."
"பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகம் சார்ந்து, பொறுப்பான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது. அது வெறுப்பு, எதிர்மறைக்கு வழிவகுக்காது மற்றும் சர்வதேச நட்பு நாடுகளுடனான மாலத்தீவின் உறவுகளை பாதிக்காது." என்றும்,
“இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவோர் மீது சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோதிக்கு ஆதரவாக பிரபலங்கள்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இந்தியர்களுக்கு எதிரான மாலத்தீவு பிரமுகர்களின் இனவெறிக் கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்களை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
"அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் இந்திய நாட்டிற்கு இவர்கள் இப்படிச் செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நமது அண்டை வீட்டாரிடம் நல்லவர்களாக நடந்துகொள்கிறோம், ஆனால் இதுபோன்ற வெறுப்பூட்டும் கருத்துக்களை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? நான் மாலத்தீவுக்கு பலமுறை சுற்றுலா சென்று, அந்நாட்டைப் பாராட்டியிருக்கிறேன், ஆனால் பிரச்சனை என்றால் முதலில் நம் நாடு தான் முக்கியம். இனிமேல் நமது இந்திய தீவுகளுக்கு சென்று நமது நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவோம்." என்று பதிவிட்டுள்ளார் அக்ஷய் குமார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைதளத்தில் அக்ஷய் குமாரின் பதிவை ஷேர் செய்து, "இந்த கருத்துகள் மிகவும் மோசமாக உள்ளது, குறிப்பாக அவர்களின் பொருளாதாரம் உட்பட பல வகையான நெருக்கடிகளைக் கையாள்வதில் இந்தியா இந்தளவு முக்கிய பங்களிப்பை வழங்கும் போது கூட." என்று கூறியுள்ளார்.
மேலும் அவரும் பலமுறை மாலத்தீவுக்கு சென்றுள்ளதாகவும், அங்குள்ள அழகை பாராட்டியதாகவும், ஆனால் தற்போது நமது சுயமரியாதைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ரெய்னா எழுதியுள்ளார்.
மேலும் இந்திய தீவுகளுக்கு சுற்றுலா செல்லுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் ஜான் ஆபிரகாமும் மாலத்தீவின் படங்களைப் பகிர்ந்துகொண்டு, "இந்தியாவின் அற்புதமான விருந்தோம்பல் மனப்பான்மை மற்றும் 'அதிதி தேவோ பவா' என்ற சிந்தனை. மேலும், ஆராய்வதற்கு அதிகமான கடல்வாழ் உயிரினங்கள். லட்சத்தீவு பார்க்க வேண்டிய இடம்" என்று பதிவிட்டுள்ளார்.
#exploreindianislands என்ற ஹேஷ்டேக்கையும் இந்த பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் கடற்கரையின் வீடியோ படத்தையும் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார். "இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. 'அதிதி தேவோ பவா' என்ற எண்ணத்துடன் பார்க்க நிறைய இருக்கிறது. பல அழகிய நினைவுகளை உருவாக்க காத்திருக்கின்றன."
இந்த நட்சத்திரங்கள் தவிர, ஷ்ரத்தா கபூர் போன்ற பல பிரபலங்களும் மாலத்தீவு குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.
மாலத்தீவு ஹைகமிஷனுக்கு இந்தியா சம்மன்
பிரதமர் நரேந்திர மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பாக மாலத்தீவு ஹைகமிஷனர் இப்ராஹிம் ஷாஹீப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை நேரில் அழைத்துள்ளது.
செய்தி நிறுவனமான ANI வெளியிட்ட வீடியோவில், இப்ராஹிம் ஷாஹிப் புது தில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதைக் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)