கத்தார்: முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டு வெவ்வேறு அளவிலான சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இவர்கள் 60 நாட்களில் தங்களது சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

கத்தார் அல்லது இந்தியா என இரண்டு நாடுகளுமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

ஆனால், ஃபினான்ஷியல் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை ஆகியவை அந்த அதிகாரிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அடையாளம் தெரியாத வழியிலிருந்து தகவல் கிடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா, கத்தார் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதுவரை இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கின் நீதிமன்ற ஆணையும்கூட பொதுவெளியில் பகிரப்படவில்லை. அரசின் ராஜதந்திர சோதனையாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கின் முக்கியமான முன்னேற்றங்களை மட்டுமே இந்தியா வெளியிட்டு வந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மரண தண்டனையைக் குறைக்கும் நீதிமன்ற ஆணையைத் தற்போது அந்த 8 பேரின் சட்டக் குழு பெற்றுள்ளது என்றும், மேலும் அதுவொரு "ரகசிய ஆவணம்" என்றும் கூறியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

“இந்தியாவை சேர்ந்த 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, வெவ்வேறு கால அளவிலான சிறைத் தண்டனைகளாக மாற்றப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார். மேலும் தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள்

மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சிறைத் தண்டனையின் அளவு என்ன என்பதை அவர் வெளியிடவில்லை.

“அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தற்போது சட்டக்குழுவின் முடிவு” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2023 அக்டோபர் மாதம், முதலில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் 8 பேருக்கும் மரணதண்டனை விதித்தபோது, இந்தியா “மிகவும் அதிர்ச்சி” அடைந்ததாகக் கூறியது.

அப்போது அனைத்து விதமான சட்டரீதியான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகம், பின்னர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை நமது நாட்டின் “முன்னாள்-படைவீரர்கள்” என்று குறிப்பிட்டார். அந்த 8 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவர்களின் கடற்படை பணி குறித்த விவரங்களை உள்ளூர் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் யார்?

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்டா, கேப்டன் வீரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுக்னகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

இந்திய அரசு மரண தண்டனை செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் அப்போது தெரிவித்திருந்தது.

நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?

நிறுவனத்தின் பழைய இணையதளம் இன்னும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. கத்தார் அமிரி தேசியப் படைக்கு (QENF) பயிற்சி, தளவாடங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்கியுள்ளது என்று நிறுவனத்தின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய இணையதளத்தில் நிறுவனத்தின் பெயர் டஹ்ரா குளோபல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கத்தார் அமிரி தேசிய படைக்கு வழங்கப்பட்ட அதன் சேவைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதன் தலைமைப் பொறுப்புகளில் இருந்த கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு கத்தார் அரசுக்கு இந்நிறுவனம் உதவுவதாக பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நிறுவனத்துடனான தொடர்பு என்ன?

இந்த வழக்கில் சிக்கியுள்ள 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களில் ஒருவரான கமாண்டர் பூர்ணேந்து திவாரி இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கப்பட்டது.

அப்போது கத்தாருக்கான அப்போதைய இந்தியத் தூதரும், கத்தார் பாதுகாப்புப் படைகளின் சர்வதேச ராணுவக் கூட்டுறவின் முன்னாள் தலைவருமான பி.குமரன் மூலம் கௌரவிக்கப்பட்டார்.

இந்திய கலாசார மையத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, ​​இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் கவுசிக் விழாவில் கலந்துகொண்டார்.

தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கு முன் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் டஹ்ராவில் பணிபுரிந்துள்ளனர்.

எதற்காக, எப்படி இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன?

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளை கத்தாரின் உளவுத்துறை நிறுவனமான ஸ்டேட் செக்யூரிட்டி பீரோ கைது செய்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் இந்திய தூதரகத்துக்குத் தெரிய வந்தது.

அவர்கள் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அவர்களுக்கு தூதரக அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் இவர்களைச் சந்தித்தார்.

முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)