கிர் சிங்கங்கள் சிறுநீர் மூலம் பிற விலங்குகளுக்கு அனுப்பும் சமிக்ஞை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி செய்தியாளர்
கிர் காடுகளுக்கோ, ஒரு விலங்கியல் பூங்காவிற்கோ செல்லும்போது நீங்கள் சிங்கம் கர்ஜிப்பதை நேரடியாக கேட்டிருக்கக் கூடும்.
சிங்கங்களுக்கு கர்ஜனை செய்வது தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி. இது பெரும்பாலும் செவிவழி தொடர்பாகும். மனிதர்கள் ஒளி மற்றும் ஒலி மூலம் தொடர்புகொள்கின்றனர். விலங்குகளின் உடல்மொழி மற்றும் ஒலிகளுக்கு பதிலளிப்பதன் மூலம் மனிதர்களும் விலங்குகளுடன் தொடர்புகொள்ளமுடியும்.
ஆனால் ஒரு சிங்கம், பிற சிங்கங்கள் மற்றும் பிற விலங்குகளுடன் ரசாயன சமிக்ஞைகள் மூலமும் தொடர்புகொள்கிறது.
சிங்கங்கள், பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ள எங்கு, எப்படி ரசாயனங்களை வெளியிடுகின்றன என்பதை ஆழமாக ஆய்வு செய்ய, கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் கண்காணிப்பாளர் மோகன் ராம் தலைமையில் ஒரு ஆராய்ச்சியாளர் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நவீன கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி கிர் சிங்கங்கள் மீது ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில், கிர் சிங்கங்கள் சில குறிப்பிட்ட வகையான மரங்கள் மீது ரசாயன சமிக்ஞைகளை விட்டுச் செல்வதை விரும்புகின்றன என்றும், இதன் மூலம் அவை மற்ற சிங்கங்களுக்கும் பிற விலங்குகளுக்கும் சில குறிப்பிட்ட சமிக்ஞைகளை அனுப்புகின்றன என்றும் ஆய்வுக்குழு முடிவுக்கு வந்தது.
சிங்கங்கள் பிற விலங்குகளுடன் எப்படி தொடர்பு கொள்கின்றன?

பட மூலாதாரம், Gujarat Forest Department
பூனை குடும்பத்தில் சிங்கம் உயர்ந்த விலங்காக கருதப்படுகிறது. ஆனால் புலியும் அதே பூனை குடும்பத்தை சேர்ந்ததுதான் என்பதால், அதுவும் அந்த குடும்பத்தில் உயர்ந்த விலங்காக கருதப்படுகிறது.
ஆனால் சிங்கங்களும் புலிகளும் இயல்பான சூழலில் ஒன்றாக வாழும் காடோ, புல்வெளியோ தற்போது உலகத்தில் இல்லை.
சிங்கங்கள், புல்வெளிகள் (grasslands), புதர் நிலங்கள் (scrublands) அல்லது கிர் காடு போன்ற அரைகுறை உலர்ந்த காடுகளில் (semi-arid forests) வாழ விரும்புகின்றன. அதேசமயம் புலிகள், அடர்ந்த காடுகள், சுந்தர்பன் போன்ற சேறு நிறைந்த பகுதிகள், மற்றும் குளிர்காலத்தில் பனி உறையும் ரஷ்யாவின் சைபீரியா போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன.
சிங்கம் தனது எல்லையை தானே வகுத்துக்கொண்டு, அதை தனது உயிரையே பணயம் வைத்து காக்கக்கூடிய விலங்காகும்.
பொதுவாக ஆண் சிங்கங்கள், பிற ஆண் சிங்கங்களை தங்களது எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்காமல் அவற்றின் பகுதியில் உள்ள பெண் சிங்கங்களுடன் இனப்பெருக்கம் செய்து தங்களது வம்சத்தை விருத்தி செய்ய முயற்சிக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் தனக்கு மட்டுமே ஆதிக்கம் இருப்பதைக் காட்டவும், மற்ற சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகளை அந்தப் பகுதியிலிருந்து விலகியிருக்கும்படி சமிக்ஞை செய்வதற்கும், பெண் சிங்கங்களை ஈர்க்கவும் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன என பல ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன.
மனிதர்கள் உட்பட வேறு ஏதேனும் விலங்கு அதற்கு அருகே வந்தால் சிங்கம் கர்ஜனை செய்து விலகி இருக்கும்படி எச்சரிக்கை செய்யும்.
இத்துடன் சிங்கங்கள் மரங்களில் ஏறி, அவற்றின் தண்டுகளில் தங்கள் நகங்களால் கீறி, கழுத்து அல்லது உடலை உரசி, அல்லது சிறுநீர் தெளிப்பதன் மூலம் தங்கள் வாசனையை விட்டுச் செல்கின்றன.
இதைத் தவிர சில இடங்களில் மலம் கழிப்பதன் மூலமும் அவை தங்களது வாசனையை விட்டுச் சென்று, ஒரு குறிபிட்ட பகுதி மீது தங்கள் ஆதிக்கம் இருப்பதை பிற விலங்குகளுக்கு உணர்த்துகின்றன.
பெண் சிங்கங்களும் மரங்கள் மற்றும் புதர்கள் மீது தங்கள் உடலை உரசுவதன் மூலமும், நகங்களால் கீறுவதன் மூலமும் தங்களது இருப்பை வெளிப்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Gujarat Forest Department
செமியோ கெமிக்கல்ஸ் என அழைக்கப்படும் இந்த ரசாயனங்கள், உடலில் இருந்து வெளிபடுத்தப்பட்டு பிற சிங்கங்கள் மற்றும் விலங்குகளால் முகரப்படுகிறது. அந்தவகையில் அந்த பகுதியில் வசித்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் பற்றிய சமிக்ஞைகள் அவற்றிற்கு கிடைக்கின்றன.
இவ்வாறு பிற சிங்கங்கள் மற்றும் பிற இன விலங்குகளுடன் ரசாயன சமிக்ஞைகள் மூலம் சிங்கங்கள் தொடர்பு கொள்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய மோகன் ராம், "தங்கள் பிராந்தியத்தை ரோந்து செய்யும் (தனது பகுதியைப் பாதுகாக்க சுற்றிவரும் இயக்கம்) போது, சிங்கங்கள் ஒவ்வொரு 500 முதல் 800 மீட்டர் தூரத்திற்கு ஒரு மரத்தில் அல்லது செடியில் தங்கள் சிறுநீரைத் தெளிக்கின்றன," என்று கூறினார்.
"இந்த வகையில், அது தனது எல்லையை அடையாளப்படுத்துகிறது. இந்த வகையில் சிறுநீர் தெளிக்கப்பட்ட மரமோ, செடியோ ஒரு எல்லை குறியீடாக செயல்படுகிறது."
சிறுநீர் கழிக்கவோ, மலம் கழிக்கவோ சிங்கங்கள் விரும்பும் மரங்கள் எவை?

பட மூலாதாரம், Bipin Tankaria/BBC
மோகன் ராமும் அவரது குழுவினரும், குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர பகுதியில் உள்ள ஜூனாகட், கிர் சோம்நாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் பரவியுள்ள கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் எல்லைக்கு அருகில் 36 இடங்களில் அசைவை கண்டறியும் இன்ஃப்ராரெட் கேமராக்களை பொருத்தினர்.
இந்த வகையான கேமராக்கள் பொதுவாக செயல்படாத நிலையில்தான் விடப்பட்டிருக்கும், ஆனால் ஒரு விலங்கோ, பறவையோ அல்லது வேறு உயிரினமோ அதற்கு அருகே வந்தால் முன்பே நிரல் செய்யப்பட்டதைப் போல் இயங்க ஆரம்பிக்கும்.
கேமராக்கள் முன்பே நிரல் செய்யப்பட்டதற்கு ஏற்ப புகைப்படங்கள் அல்லது காணொளியை பதிவு செய்துவிட்டு தன்னிச்சையாக நின்றுவிடும்.
ஒரு சிங்கம் தென்பட்டவுடன் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டு, பின்னர் முப்பது வினாடிகள் காணொளி பதிவு செய்யும்படி ஆய்வாளர்கள் அவற்றை நிரல் செய்தனர், ஆய்வாளர்கள் பொருத்திய 36 கேமராக்களில் 30 கேமராக்களில் சிங்கங்களின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.

பட மூலாதாரம், Gujarat forest department
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கேமராக்களை கிர் காட்டின் எல்லை அருகே இருக்கும் ஷிரீஷ், சலேடி, காக்ரோ (பலாஷ்), ஹல்தர்வோ, மோடட், ஜாம்புடோ மற்றும் பஹேடா ஆகிய ஏழு வகையான மரங்களின் மீது அல்லது அவற்றிற்கு அருகே பொருத்தியிருந்தனர்.
கேமராக்கள் மொத்தம் 15,144 புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்தன. அவற்றில் 1,542 புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் சிங்கங்களின் இருப்பு காணப்பட்டது.
இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்தபோது, சிங்கங்கள் தங்கள் நகங்களால் கீறுவதற்கும், சிறுநீர் தெளிப்பதற்கும் நீர் ஆதாரங்களுக்கு அருகில் உள்ள ஜாம்புடோ (நாவல்) மரங்களை மிகவும் விரும்புகின்றன என்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.
இந்த ரசாயனத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கை கக்ரோ மரத்தில் அதிகம் காணப்பட்டது.
ஏன் ஜாம்புடா மற்றும் காக்ரா மரங்கள்?

பட மூலாதாரம், Gujarat forest department
இந்த இரு மரங்களின் பட்டைகள் கரடுமுரடானவை என்றாலும் மென்மையானவை, மேலும் அவற்றில் கீறும்போது ஒரு வகையான வாசனை வெளிப்படுகிறது மற்றும் திரவம் வெளியாகத் தொடங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் குறித்துக்கொண்டனர்.
அந்தவகையில் அவை சிங்கங்களால் வெளியிடப்படும் ரசாயனங்களை அதிக நேரம் தக்கவைத்துக்கொண்டு சமிக்ஞைகளை அனுப்பும்.
"இத்தகைய மரங்கள் நீர் ஆதாரங்களுக்கு அருகில் அமைந்திருந்தன. நீர் அருகிலுள்ள பகுதிகள் வளங்கள் நிறைந்தவை. சிங்கங்கள் வேட்டையாடக்கூடிய தாவர உண்ணி விலங்குகள் அங்கு அதிக அளவில் உள்ளன, மறைவிடங்கள், குளிர்ந்த சூழல் போன்றவை அதிகமாக உள்ளன," என மோகன் ராம் பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.
"எனவே சிங்கங்கள் அதுபோன்ற இடங்களில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றன. அத்துடன் ஜம்புடா மற்றும் காக்ரா மரங்கள் கரடுமுரடானவை ஆனாலும் மென்மையானவை என்பதால் அவற்றின் மீது தெளிக்கப்படும் ரசாயனங்கள் நீண்ட நேரம் தங்கியிருக்கும். எனவே சிங்கங்கள் கீறல்கள் மற்றும் சிறுநீரை ஜம்புடா மற்றும் காக்ரா மரங்கள் மீது தெளிப்பதை விரும்பும்."

பட மூலாதாரம், Gujarat Forest Department
கிர் காட்டில் தேக்கு மரங்கள் அதிகமாக உள்ளன. "ஆனால் தேக்குமரத்தின் பட்டை மென்மையாகவும் கடினமாகவும் இருக்கிறது, சிங்கங்கள் அதில் மிக அரிதாகவே நகங்களால் கீறி தங்கள் அடையாளங்களை விட்டுச் செல்வது காணப்பட்டது. தேக்கு மரங்களை அவை பெரும்பாலும் சிறுநீர் தெளிக்க பயன்படுத்துகின்றன," என மோகன் ராம் தெரிவித்தார்.
"சிங்கங்கள் ஒரு மரத்தை தேர்வு செய்து அதன் மீது மீண்டும் மீண்டும் ரசாயனத்தை வெளியிட விரும்புவது ஆய்வின்போது எங்கள் கவனத்திற்கு வந்தது''
அப்போதைய குஜராத் மாநில தலைமை வனவிலங்கு காப்பாளர் நித்யானந்த ஸ்ரீவாஸ்தவா மற்றும் கிர் காடு அடங்கிய ஜூனாகட் வனவிலங்கு வட்டத்தின் அப்போதைய தலைமை வனப் பாதுகாவலர் ஆராதனா சாஹு ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக் குழுவில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச்(the Wildlife Institute of India) சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இடம்பெற்றிருந்தார். இந்த ஆய்வு மற்றும் அதன் முடிவுகளை விவரிக்கும் ஒரு ஆய்வறிக்கை, ஃப்ரண்டியர்ஸ் இன் எகாலஜி அண்ட் எவல்யூஷன் (Frontiers in Ecology and Evolution) என்ற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதிக ரசாயன சமிக்ஞைகளை வெளியிடுவது ஆண் சிங்கங்களா, பெண் சிங்கங்களா?

பட மூலாதாரம், Gujarat Forest Department
சிங்கங்களின் ரசாசாயன தொடர்பு நடவடிக்கைகளில் முகர்ந்து பார்த்தல் சுமார் 40 விழுக்காடாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
அதேபோல், 30 சதவீத செயல்பாடு நகங்களால் கீறுவதுடன் தொடர்புடையது, மற்றும் 12 சதவீத செயல்பாடு சிறுநீர் தெளிப்பது உள்ளிட்டவையுடன் தொடர்புடையது.
இந்த செயல்பாடு ஜனவரி மற்றும் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் அதிகமாக இருந்தது. இருப்பினும், மரங்களில் ஏறுவது மற்றும் உரசும் வழக்கம் பெண் சிங்கங்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
இதேபோல் சிங்கங்கள் மற்றும் பெண் சிங்கங்கள் இரண்டிலும் முகர்தல் மற்றும் கீறுவது ஆகியவையே அதிகமாக காணப்பட்ட ரசாயன தொடர்பாக இருந்தன.
சிங்கங்களால் ரசாயன குறியீடுகளை விடும் செயல்பாடு டிசம்பர், பிப்ரவரி மற்றும் ஜனவரி மாதங்களில் இறங்கு வரிசையில் மிக அதிகமாகப் பதிவாகியிருந்தது. ஜனவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நகங்களால் கீறுவது ஆண் சிங்கங்களைவிட பெண் சிங்கங்களில் அதிகமாக காணப்பட்டது.
"ஆசிய சிங்கங்களிடம் இனப்பெருக்கம் குளிர்காலத்தில் அதிகம் இருப்பதால், ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் ஒன்றை ஒன்று கவர்வதற்கும், கண்டுபிடிப்பதற்கும் இதைப் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்." என்றார் மோகன் ராம்.
"ஆப்பிரிக்காவில் வாழும் சிங்கங்களில், கிட்டத்தட்ட அனைத்து பெண் சிங்கங்களும் ஒரே நேரத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. ஆனால், கிர் சிங்கங்களில் இது நடப்பதில்லை. கிர் சிங்கங்களின் இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது."
"அது பெரும்பாலும் குளிர்காலத்தில் ஏற்படுகிறது. இங்குள்ள பருவநிலை மற்றும் புவியியலுக்கு ஏற்ப ஏற்படும் ஒரு தகவமைப்பாக இருக்கலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












