வயநாடு: ராகுல் காந்திக்கு பாதுகாப்பான தொகுதியாக இருக்குமா? கடும் சவால் தரும் இடதுசாரிகள்

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி. காங்கிரஸ் செல்வாக்குடன் திகழும் இந்தத் தொகுதியை இந்த முறை கைப்பற்றிவிட இடதுசாரிகளும் பா.ஜ.கவும் கடுமையாக முயல்கிறார்கள்.

வயநாடு தொகுதியின் கள நிலவரம் என்ன?

கேரளாவில் அரசியல் அமைதி நிலவும் தொகுதிகளில் ஒன்று வயநாடு. 2009-இல் தொகுதி மறுசீரமைப்பை ஒட்டி உருவாக்கப்பட்ட வயநாடு நாடாளுமன்றத் தொகுதி, 2019-வரை யார் கவனத்தையும் ஈர்க்காத ஒரு தொகுதியாகத்தான் இருந்தது.

2019-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, அமேதி தொகுதி தவிர வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதும் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறியது இந்தத் தொகுதி.

அந்தத் தேர்தலில் வயநாடு தொகுதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ராகுல் காந்தி, இந்த முறையும் அதே தொகுதியில் களமிறங்கியிருப்பதால், மீண்டும் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறது.

விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதியில் மானந்தவாடி (தனி), சுல்தான் பதேரி (தனி), வண்டூர் (தனி), கல்பற்றா, திருவம்பாடி, எரநாடு, நிலாம்பூர் என ஏழு தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இதில் மானந்தவாடி, சுல்தான் பதேரி, கல்பற்றா ஆகிய தொகுதிகள் மட்டுமே வயநாடு மாவட்டத்தில் உள்ளன. திருவம்பாடி கோழிக்கோடு மாவட்டத்திலும் எரநாடு, நிலாம்பூர், வண்டூர் ஆகிய தொகுதிகள் மலப்புரம் மாவட்டத்திலும் அமைந்திருக்கின்றன.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, வயநாடு தொகுதி
கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, காங்கிரஸ், இடதுசாரிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம், கேரளா காங்கிரஸ், பா.ஜ.க. என பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் செயல்படும் பகுதி வயநாடு

காங்கிரசின் செல்வாக்கு

கேரளாவின் மத பன்முகத்தன்மைக்கு உதாரணமான ஒரு தொகுதியாக இந்த வயநாடு தொகுதியைச் சொல்ல முடியும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மூன்று மதத்தினருமே கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் வாழும் தொகுதி இது.

அரசியல் ரீதியாகவும் காங்கிரஸ், இடதுசாரிகள், மத சார்பற்ற ஜனதா தளம், கேரளா காங்கிரஸ், பா.ஜ.க. என பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் செயல்படும் பகுதியாகவும் வயநாடு இருக்கிறது.

2019-இல் ராகுல் காந்தி அமேதி தொகுதி தவிர, வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால், அதற்குக் காரணம் இருந்தது.

"இந்தியா முழுவதுமே காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டாலும், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வெல்லும். அந்த அளவுக்கு காங்கிரசிற்குச் செல்வாக்கான தொகுதி இது," என்கிறார் வயநாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பாதுஷா.

தேர்தல் முடிவுகள் பாதுஷாவின் கருத்தோடு ஒத்துப் போகின்றன. 2009-இல் உருவாக்கப்பட்டு மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்திருக்கும் இந்தத் தொகுதியில், மூன்று முறையுமே காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்றிருக்கிறது. 2009, 2014 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம்.ஐ. ஷாநவாசும் 2019ல் ராகுல் காந்தியும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றனர்.

2019ஆம் ஆண்டுத் தேர்தலில் ராகுல் காந்தி 7,06,367 வாக்குகளைப் பெற, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.பி. சுனீர், 2,74,597 வாக்குகளையே பெற்றார். ஆகவே, ராகுல் காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆனி ராஜா

ராகுல் காந்தியை விமர்சிக்கும் இடதுசாரி வேட்பாளர்

இந்த வயநாடு தொகுதியில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் காங்கிரஸ் வசமும் இரண்டு தொகுதிகள் சி.பி.எம். வசமும் ஒரு தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வசமும் ஒரு தொகுதி இடது முன்னணியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வசமும் உள்ளன.

ஆனால், இந்த முறை வயநாட்டில் போட்டி கடுமையாக இருக்கிறது. ராகுல் காந்தியை எதிர்த்து, இடது முன்னணியின் சார்பில் சி.பி.ஐயைச் சேர்ந்த ஆனி ராஜா போட்டியிடுகிறார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான கே. சுரேந்திரனும் களமிறங்கியிருக்கிறார்.

தேசிய அளவில் காங்கிரசும் இடதுசாரிகளும் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், இந்த முறையும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது இடதுசாரிகளை கடுமையாக எரிச்சலூட்டியிருக்கிறது. அவருடைய பிரதான எதிரி நரேந்திர மோதியா அல்லது இடதுசாரிகளா எனக் கேள்வி எழுப்புகிறார் அவரை எதிர்த்துப் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆனி ராஜா.

"தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 20 நாட்களுக்கு முன்பாகவே நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டேன். மார்ச் 1-ஆம் தேதி தேர்தல் வேலையையும் துவக்கிவிட்டேன். இதற்குப் பல நாட்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யு.டி.எஃப்) சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

"இங்கே இடதுசாரிகளின் சார்பில் ஒருவர் களமிறங்கியிருப்பது தெரிந்தும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றால், இந்தியா கூட்டணியை அடிக்க நரேந்திர மோதிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் என்றுதான் அர்த்தம்.

"ஓர் இடத்தை வெல்வதுதான் அவரது அரசியல் என்றால் அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கலாமே. கர்நாடகத்தில், தெலுங்கானாவில் போட்டியிட்டிருக்கலாமே. அப்படியானால், அவருடைய பிரதான எதிரி யார்? பா.ஜ.கவா அல்லது இடதுசாரிகளா?" என்கிறார் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியின் (எல்.டி.எஃப்) சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆனி ராஜா.

அவரது பரப்புரையில் பா.ஜ.க. குறித்த விமர்சனங்களோடு, ராகுல் காந்தி குறித்த விமர்சனங்களையும் முன்வைக்கிறார். வயநாடு தொகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க ராகுல் காந்தி எதுவுமே செய்யவில்லை என்றும் பேசுகிறார்.

"இந்தத் தொகுதி உருவாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று தேர்தல் நடந்திருக்கிறது. மூன்று முறையுமே காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்றிருக்கிறது. ராகுல் காந்தியும் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால் வயநாடு என்ற பெயர் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைக்காக உச்சரிக்கப்பட்டதே இல்லை. இங்குள்ள எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவேயில்லை. இந்தத் தொகுதியில் பெரிய பேரழிவுகள் நடந்துள்ளன. ராகுல் காந்தி அப்போதெல்லாம் இங்கு வந்ததேயில்லை," என்கிறார் ஆனி ராஜா.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன்

பா.ஜ.க வேட்பாளர் சொல்வது என்ன?

ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, வெகு சில தடவைகளே இங்கு வந்து பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார் என்றாலும் கட்சியின் சார்பில் தீவிர பிரசாரம் செய்கிறார்கள். தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு முதல் நாள், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்தில் ஈடுபட்டுச் சென்றிருக்கிறார். பிரியங்கா காந்தி இன்று பிரசாரம் செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான பாரத ஜன சேனாவைச் சேர்ந்த துஷார் வெல்லப்பள்ளி போட்டியிட்டு, சுமார் 79,000 வாக்குகளையே பெற்றார். ஆனால், இந்த முறை பா.ஜ.க-வே நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது. அந்தக் கட்சியின் சார்பில், அதன் மாநிலத் தலைவரான கே.சுரேந்திரன் இந்தத் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.

வாகனப் பிரசாரம் தவிர, வயநாட்டின் உள்ளடங்கிய பகுதிகளுக்கும் சென்று, சிறு கூட்டங்களை நடத்தியும் வாக்கு சேகரிக்கிறார் சுரேந்திரன்.

இந்தத் தொகுதிக்கு ராகுல் காந்தி எதுவுமே செய்யவில்லையென்று குற்றம்சாட்டும் சுரேந்திரன், தான் இந்தத் தொகுதிக்கு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வரப் போவதாகப் பேசுகிறார்.

பிபிசி-யிடம் பேசிய அவர், ராகுல் காந்தி ஒரு 'ஃப்ளாப்' எம்.பி. என்கிறார்.

"இந்தத் தொகுதியில் மருத்துவக் கல்லூரி, ரயில்பாதை போன்றவை இல்லை. தொழிற்சாலைகள் இல்லை. நல்ல சாலைகள் இல்லை. இதையெல்லாம் மக்களிடம் பேசுகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி-தான் இந்தத் தொகுதியில் இருக்கிறார். இந்த 15 ஆண்டுகளில் கடந்த ஐந்தாண்டுகளாக ராகுல் காந்தி எம்.பியாக இருக்கிறார்.

அவர் ஒரு 'ஃப்ளாப்' எம்.பி. அவர் இங்கே வருவதேயில்லை. எந்தப் பிரச்னையையும் கவனிப்பதில்லை. சாதாரண மக்களுக்காக வேலை பார்ப்பதில்லை. நாடாளுமன்றத்தில் வயநாடு பிரச்னை குறித்து கேள்வி எழுப்புவதில்லை. நான் வெற்றிபெற்றால் ஸ்மிருதி இரானி அமேதியில் கொண்டு வந்ததைப் போன்ற வளர்ச்சித் திட்டங்களை இங்கும் கொண்டுவருவேன்," என்கிறார் அவர்.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, கல்பற்றா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான டி. சித்திக்

'ராகுல் காந்தி பல முறை இங்கே வந்திருக்கிறார்'

ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் இதனை மறுக்கின்றனர். முக்கியமான அனைத்துத் தருணங்களிலும் ராகுல் காந்தி இங்கே வந்து மக்களுடன் இருந்திருக்கிறார் என்கிறார் கல்பற்றா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான டி. சித்திக்.

"ராகுல் காந்தி பல முறை இங்கே வந்திருக்கிறார். ஒரு முறை இங்கே வந்தால் 5- 10 நாட்கள் தொடர்ச்சியாகத் தங்குகிறார். பிரதமர் மோதி வாரணாசிக்குச் செல்வதைவிட, காந்தி நகருக்கு அமித் ஷா செல்வதைவிட அதிக முறை ராகுல் காந்தி இங்கே வருகிறார். அவர் வயநாட்டிற்கு வரும்போது மத்திய அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதத்தை ஆராயும் 'திஷா' கூட்டங்களை நடத்துகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 3-4 மணி நேரம் அவர் தொடர்ச்சியாகச் செலவிடுகிறார். பல சிக்கலான தருணங்கள் வயநாட்டிற்கு வந்திருக்கின்றன.

புத்துமல நிலச்சரிவின்போது பலர் புதையுண்டு இறந்து போனார்கள். இரண்டாவதாக, வெள்ளத்தில் வயநாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மூன்றாவதாக கோவிட்டின் போதும் நான்காவதாக மனித - மிருக மோதல்களின் போதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அந்த எல்லா தருணங்களிலும் ராகுல் காந்தி இங்கே வந்திருக்கிறார். ஆனி ராஜாவை அப்போது பார்க்க முடியாது. பா.ஜ.கவின் சுரேந்திரனைப் பார்க்க முடியாது," என்கிறார் டி. சித்திக்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனையும் கடுமையாக விமர்சிக்கிறார் சித்திக். "முதலமைச்சர் பிணராயி விஜயனின் பல்வேறு பேச்சுகளில் அவர் நரேந்திர மோதியின் பெயரைக்கூட சொல்வதில்லை. அவரைப் பார்த்து பயப்படுகிறார். ராகுல் காந்தியை 56 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை செய்தது. அவர் நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 12, துக்ளக் சாலையில் இருந்த வீட்டிலிருந்து அவர் தூக்கியெறியப்பட்டார். இந்தியா முழுவதும் 21 வழக்குகள் போடப்பட்டன. இந்திய ஒற்றுமை யாத்திரையின் முடிவில் ஸ்ரீ நகரில் பேசிய பேச்சுக்காக தில்லி காவல்துறை விசாரணை நடத்தியது. இப்படி மோதி அரசு அவருக்கு எவ்வளவோ தடைகளையும் அழுத்தங்களையும் கொடுத்தாலும் அவர் நரேந்திர மோதியையும் மத்திய அரசையும் எதிர்த்துக் கடுமையாகப் போராடுகிறார்," என்கிறார்.

இங்கிருக்கும் முதலமைச்சர் பினராயி விஜயன், ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் குற்றம் சுமத்துகிறார். யார் மத்தியில் ஆட்சி செய்கிறார்கள். பா.ஜ.க-வும் நரேந்திர மோதியும்தானே. ஆனால், பினராயி விஜயன், நரேந்திர மோதியைத் தாக்கிப் பேசுவதேயில்லை. அவர் நரேந்திர மோதியின் பெயரைச் சொல்லக்கூட பயப்படுகிறார்" என்கிறார் டி. சித்திக்.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, சமீப காலமாக காபி, மிளகு, பாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவது இங்குள்ள விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கிறது

வயநாட்டின் முக்கியப் பிரச்னைகள் என்ன?

வயநாடு தொகுதி பெரிதும் விவசாயத்தைச் சார்ந்த பகுதி. காபி, தேயிலை, பாக்கு, தென்னை, நெல், ரப்பர் உள்ளிட்ட பயிர்கள் இங்கே விளைவிக்கப்படுகின்றன. விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்ற பிரச்னை இருந்தாலும், சமீப காலமாக காபி, மிளகு, பாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்து வருவது இங்குள்ள விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

இங்குள்ள மக்களிடம் பெரிய புகார்கள் ஏதும் இல்லை. தொகுதியில் உள்ள பிரச்னைகளைப் பற்றிக் கேட்டால், இந்தப் பகுதிக்கென அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி முழுமையாகச் செயல்பட வேண்டும் என்பதைத்தான் பலரும் சொல்கிறார்கள்.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, கல்பற்றா பகுதியைச் சேர்ந்த ரமேஷ்

"இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று பார்த்தால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத்தான் சொல்ல வேண்டும். அது இங்கிருந்து 70 - 75 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கு செல்ல வேண்டுமானால், வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் செல்லவேண்டும். அந்தப் பாதைகளில் சிறிய விபத்து நடந்தாலே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும்.

மருத்துவத்திற்காக ஆம்புலன்சில் செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசல் காரணமாக வழியிலேயே இறந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆகவே, உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முழுமையாக செயல்படச் செய்ய வேண்டும்," என்கிறார் கல்பற்றா பகுதியைச் சேர்ந்த ரமேஷ்.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
படக்குறிப்பு, சமூக ஆர்வலரும் வயநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவருமான பாதுஷா

'மெல்லமெல்ல பாலைவனமாகும் வயநாடு'

கேரள மாநிலத்திலேயே கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே மாவட்டம் வயநாடுதான். இந்த மூன்று மாநிலங்களும் சந்திக்கும் பகுதியில் பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம், வயநாடு சரணாலயம் ஆகியவை அமைந்திருக்கின்றன. இந்தியாவிலேயே புலிகள் அதிகம் வசிக்கும் பகுதியாக இந்த வனப்பகுதி கருதப்படுகிறது.

வனப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் மிருகங்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது இப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், மைசூருடன் வயநாட்டை இணைக்கும் பிரதான சாலை பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தின் ஊடாக வருவதால், அந்தச் சாலை இரவு 9 மணிக்கு மூடப்படும். இந்தப் பாதை எப்போதும் மூடப்படக் கூடாது என்ற கோரிக்கையும் சிலரிடம் இருக்கிறது.

ஆனால், காலநிலை மாற்றம்தான் வயநாட்டின் மிகப் பெரிய பிரச்னை என்கிறார் சமூக ஆர்வலரும் வயநாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவருமான பாதுஷா.

ஒரு காலத்தில் வருடத்திற்கு 11,000 மி.மீட்டர் மழை பெய்த இந்தப் பகுதியில் தற்போது வெறும் 2,300 மி.மீ மழையே பெய்வதாகக் கூறுகிறார் பாதுஷா. காடுகளை அழிப்பது மிகப் பெரிய அளவில் நடப்பதாகக் கூறும் அவர், பல இடங்களில் யூகலிப்டஸ், தேக்கு, பாக்கு போன்ற ஒரே விதமான மரங்களை வளர்க்கும் போக்கு வந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

"வயநாடு மெல்லமெல்ல பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. தக்காணப் பீடபூமியின் வெப்ப நிலை இங்கே வந்துகொண்டிருக்கிறது. வயநாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகள் அதாவது முல்லங்குள்ளி, புல்பள்ளி பஞ்சாயத்துகள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இது ஒரு மிக முக்கியமான பிரச்னை," என்கிறார் பாதுஷா.

நஞ்சன்கூட்டிலிருந்து வயநாட்டிற்கு ரயில் பாதை போட வேண்டும் என்ற கோரிக்கையை இவர் ஏற்கவில்லை. அது இந்தப் பகுதியின் சூழலை மேலும் பாதிக்கும் எனக் கருதுகிறார்.

காலநிலையில் உள்ள நிலையற்ற தன்மை இங்கு விவசாயத்தை பாதிப்பதாகக் குறிப்பிடுகிறார் விவசாயியான ராஜேஷ் கிருஷ்ணா.

"இங்கே 90 சதவீதத்திற்கு மேல் விவசாயத்தைச் சார்ந்திருக்கிறார்கள். இங்கே இரண்டு முக்கியப் பிரச்னைகள் இருக்கின்றன. இரண்டுமே நிலையற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒன்று, விவசாய சந்தையில் உள்ள நிலையற்ற தன்மை. மற்றொன்று, காலநிலையில் உள்ள நிலையற்ற தன்மை. இந்த இரண்டையும் சரிசெய்யாமல் வயநாட்டிற்கு எந்த நல்லதையும் செய்ய முடியாது" என்கிறார் ராஜேஷ் கிருஷ்ணா.

கேரளா, வயநாடு, காங்கிரஸ், ராகுல் காந்தி, பா.ஜ.க., அரசியல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

வயநாடு மக்களின் மனநிலை என்ன?

வேறு சில தேவைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். வயநாட்டில், குறிப்பிடத்தக்க உயர் கல்வி நிலையங்களும் உயர் மருத்துவ வசதிகளும் இல்லாததால் இளைஞர்கள் 12ஆம் வகுப்பை முடித்த பிறகு வெளியேறிவிடுவதாகச் சொல்கிறார் அவர்.

ஆனால், தேர்தல் களத்தில் இந்தப் பிரச்னைகள் பெரிதாக எதிரொலிக்கவில்லை. ராகுல் காந்தி போட்டியிடுவதால் இந்தத் தொகுதிக்கு கிடைத்திருக்கும் கவனம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. தொகுதியின் குறுக்கும் மறுக்குமாகச் சென்றுவரும் பிரசார வாகனங்களை புன்சிரிப்புடன் கவனிக்கும் மக்கள், தேர்தல் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)