'வெள்ளை தங்கம்' என்றால் என்ன? அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இதை கைப்பற்ற ஏன் இவ்வளவு போட்டி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிசிலியா பாரியா
- பதவி, பிபிசி
உலகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிபொருட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மூன்று நாடுகளில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் வகையில் மிகப்பெரிய இயற்கை வள இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலகில் உள்ள லித்தியம் கனிம இருப்புக்களில் பாதி அளவு அர்ஜென்டினா, சிலி, பொலிவியாவில் உள்ளது. இந்த மூன்று நாடுகளும் உலகின் லித்தியம் முக்கோணமாக மாறிவிட்டன. இதன் மூலம் உலக நாடுகள், முதலீட்டாளர்களின் கவனம் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது விழுந்தது.
மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் இந்த கனிமம் எதிர்கால ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம் சந்தை, சர்வதேச அளவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பலர் இந்தத் துறையில் நுழைய ஆர்வமாக உள்ளனர்.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இந்த முக்கியமான லித்தியம் இருப்புக்கள் சொந்தமாக்குவதற்கான எந்த வாய்ப்பையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
"உலகம் புதிய எரிபொருளை நோக்கி நகர்கிறது. உலக வல்லரசுகள், இதற்கு தேவையான கனிமங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெற ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன,'' என்று வில்சன் சென்டரில் உள்ள லத்தீன் அமெரிக்கா திட்டத்தின் இயக்குனர் பெஞ்சமின் கைடன் கூறினார்.
“ஏற்கனவே சீனா தனது முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. இந்த விஷயத்தில் அமெரிக்கா சற்று பின் தங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா இப்போது சீனாவுக்குப் பின்னால் இருக்கத் தயாராக இல்லை," என்று பெஞ்சமின் கூறினார்.
சீனாவின் முயற்சிகள்

பட மூலாதாரம், Reuters
'வெள்ளை தங்கம்' என்று சொல்லப்படும் இந்த லித்தியம் இருப்புகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க சீன நிறுவனங்கள் பல ஆண்டுகளாக கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. அதற்காக உலகின் 60 சதவீத லித்தியம் டெபாசிட் உள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர்.
2022ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 86 மில்லியன் டன்(8.6 கோடி டன்) லித்தியம் இருப்பு உள்ளது. லத்தீன் அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் லித்தியத்தின் பெரிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, சிலி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சமீபத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 5.9 மில்லியன் டன் லித்தியம் வளம் உள்ளதை அரசு உறுதி செய்தது.
லித்தியத்தை சுரங்கத்தில் இருந்து எடுப்பதிலும், அதை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதிலும் சிலி நாடு முன்னணியில் உள்ளது.
1.7 மில்லியன் டன்கள் (17 லட்சம் டன்) லித்தியம் இருப்பை கொண்டுள்ள மெக்சிக்கோ, வட அமெரிக்க கண்டத்தில் அதிக இருப்பை கொண்ட நாடாக இருக்கிறது. புவியியல் ரீதியாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் அருகில் இருப்பதால், பேட்டரி கார் உற்பத்தியின் மையமாக மெக்சிக்கோ மாறி வருகிறது.
முக்கிய கார் நிறுவனங்களான டெஸ்லா, பிஎம்டபிள்யூ ஆகியவை சமீபத்தில் மெக்சிகோவில் கார் தயாரிப்பு நிறுவனங்களை அமைத்துள்ளன.

பட மூலாதாரம், Reuters
அதிக லித்தியம் இருப்புகளை கொண்டுள்ள நாடுகள்
அமெரிக்க புவியியல் ஆய்வு கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிக லித்தியம் இருப்புகளை கொண்டுள்ள நாடுகளின் பட்டியல்
- பொலிவியா - 21 மில்லியன் டன்
- அர்ஜென்டினா - 19.3 மில்லியன் டன்
- சிலி - 9.6 மில்லியன் டன்
- ஆஸ்திரேலியா - 6.4 மில்லியன் டன்
- சீனா - 5.1 மில்லியன் டன்
- பிரேசில் - 4.7 மில்லியன் டன்
- காங்கோ - 3 மில்லியன் டன்
- ஜெர்மனி - 2.7 மில்லியன் டன்
- மெக்ஸிகோ - 1.7 மில்லியன் டன்
அமெரிக்கா என்ன செய்து கொண்டிருக்கிறது?

பட மூலாதாரம், Reuters
மார்ச் 2022 இல், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் லாரா ரிச்சர்ட்சன், லத்தீன் அமெரிக்காவில் சீனா தனது முதலீடுகளை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற ஆயுத சேவைக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் சீனா தனது எல்லையை பொருளாதார ரீதியாகவும் நட்புறவு மூலமாகவும் விரிவுபடுத்தி வருகிறது. தொழில்நுட்பம், தகவல் மற்றும் ஆயுதப் படைகளின் அடிப்படையில் அது வலுவடைந்து வருகிறது என்று அவர் எச்சரித்தார்.
"இது கனிம வளங்கள் நிறைந்த பகுதி. நமது எதிரிகள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அவர்கள் இந்த பிராந்தியத்தில் முதலீடு செய்வது போல் தோன்றினாலும், அவர்கள் உண்மையில் வளங்களை சூறையாடுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
லித்தியம் முக்கோணம் என்று அழைக்கப்படும் அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலியில் லித்தியம் இருப்பு விஷயத்தில் சீனா தீவிரமாக செயல்படுகிறது. இங்கு கிடைக்கும் லித்தியத்தை பிரித்தெடுக்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
முன்னேறிய சீனா

பட மூலாதாரம், Getty Images
எரிசக்தி துறையில், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மரபுவழி எரிபொருளுக்கு (ஹைட்ரோகார்பன்) பதிலாக மாற்று வழியை யோசித்தாலும், சீனா அந்த திசையில் சில நடவடிக்கை எடுத்துள்ளது. இனி வரும் நாட்களில் உலகச் சந்தையில் லித்தியம் இருப்பு எங்கு கண்டறியப்பட்டாலும் அங்கு சீனாவின் பார்வை விழும்.
2001 முதல், சீனா நீண்ட கால திட்டத்தை தயாரித்து வருகிறது. அதன் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலையான ஆற்றலுக்கு முன்னுரிமை அளித்து அதில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் மின்சார கார் தயாரிப்பில் முதலீடு செய்து வருகிறது.
"சீனா, தனது பெரும்பாலான கனிம தேவைகளுக்கு வெளிநாடுகளை பெரிதும் சார்ந்துள்ளது. சர்வதேச அளவில் அரசியல் சூழல்நிலை மாறினால், அது சீனாவின் தேசிய, பொருளாதார பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சர் வாங் குவாங்குவா இந்த ஆண்டு ஜனவரி மாதம் Xinhua செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
2016இல் தேசிய கனிம வளத் திட்டத்தை சீனா கொண்டு வந்தது. இதில் 24 வகையான
2016ல் சீனா தேசிய கனிம வளத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, ஷேல் வாயு, இரும்பு, தாமிரம், அலுமினியம், தங்கம், நிக்கல், கோபால்ட், லித்தியம் உள்ளிட்ட 24 வகையான அத்தியாவசிய தாதுக்களை வகைப்படுத்தி உள்ளது.
இந்த கனிமங்கள் நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அவசியம். எனவே வளர்ந்து வரும் தொழில்களுக்கு இந்த கனிமங்கள் மிக அவசியமானது," என்று சீனா தனது கனிம வளத் திட்டத்தில் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் அதிகரித்த சீனாவின் முதலீடுகள்

பட மூலாதாரம், Getty Images
ஒருபுறம், தென் அமெரிக்க நாடுகளில் சுரங்கத் தொழிலில் சீனா முதலீடுகளை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், 'லித்தியம் முக்கோண' நாடுகள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு சீன தொழில்நுட்பத்தையும், பெரும் முதலீடுகளையும் பயன்படுத்த விரும்புகின்றன.
கடந்த பிப்ரவரியில், பொலிவியா அரசாங்கம் லித்தியம் தொடர்பாக CATL, BRUNP, CMOC ஆகிய நிறுவனங்களுடன் பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025இல் இங்கிருந்து பெரிய அளவில் லித்தியம் ஏற்றுமதி செய்யப்படும்.
மறுபுறம், அர்ஜென்டினாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் லித்தியம் விஷயத்தில் வலுவடைகின்றன. 2022 ஆம் ஆண்டில் மட்டும் அர்ஜென்டினாவின் சால்டா, கேடமாக்ரா மற்றும் ஜூஜூரிஸ் ஆகிய இடங்களில் வெவ்வேறு திட்டங்களில் ஒன்பது சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அர்ஜென்டினா அரசுடன் இரண்டு லித்தியம் கார்பனேட் தொழிற்சாலைகளுக்கான ஒப்பந்தத்தில் சீன நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டது. இந்த சீன நிறுவனம் தான், Volkswagen, Geely நிறுவனங்களுக்கு பேட்டரிகளை வழங்குகிறது.
கடந்த ஆண்டு, சிலி அரசுடன் லித்தியம் சுரங்க ஒப்பந்தத்தில் சீன நிறுவனம் ஒன்று கையெழுத்திட்டது. இதன் ஒரு பகுதியாக, 80 ஆயிரம் டன் லித்தியத்தை வெட்டி எடுக்கும் வாய்ப்பை அந்நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் சிலியின் அன்டோஃபாகஸ்டாவில் அமைக்கப்படும் லித்தியம் தொழிற்பூங்காவில் அதிக அளவில் முதலீடு செய்வதாக பல சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
முன்னணி நாடுகளுக்கு இடையே போட்டி

பட மூலாதாரம், Getty Images
அட்லாண்டிக் கவுன்சிலின் லத்தீன் அமெரிக்க மையத்தின் பேராசிரியரான பெப்பே ஜாங் கூறுகையில், பசுமை ஆற்றல் சார்ந்த தாதுக்கள், தொழில்நுட்பங்களில் ஈடுசெய்ய முடியாத இடத்தை பிடிக்க அமெரிக்கா விரும்புகிறது. தொழில்நுட்பம் மற்றும் புவிசார் அரசியலில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான சண்டைக்கு இதுவே காரணம் என்று அவர் கூறினார்.
"இருப்பினும் இந்தப் போட்டியில் சீனா முன்னேறி வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள சீன முதலீடுகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்" என்று பெப்பே ஜாங் விளக்கினார்.
2020, 2021ஆம் ஆண்டுகளில் இந்தத் துறையில் 1.1 பில்லியன் டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. இந்த ஆண்டு அவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
“ஜனவரி மாதத்தில் மட்டும் சீன நிறுவனங்கள் பொலிவியாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளன,” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறினார்.
அண்மையில் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா சீனாவுக்கு சென்று இருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் 20 இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்கா vs சீனா

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த போட்டியில் சீனா முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது என்று பெஞ்சமின் கூறினார்.
"இதில் சீனா ஒரு படி மேலே உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் பேட்டரி உற்பத்திக்காக சீனா அதிக முதலீடுகளை செய்துள்ளது. ஆனால், தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான கனிமங்களை மட்டுமே இந்த நாடுகளிடம் இருந்து அமெரிக்கா வாங்குகிறது,” என்றார்.
"இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முன் இரண்டு பாதைகள் உள்ளன. இவற்றில் முதன்மையானது தாதுப்பொருட்களை நேரடியாக அமெரிக்காவிற்கு விற்பது. இரண்டாவது, சீன முதலீட்டை வரவழைத்து தங்கள் நாட்டின் தொழில்துறையை மேம்படுத்துவது. இரண்டாவது பாதை அவர்களுக்கு சற்று கவர்ச்சியாக தெரியலாம்,'' என்றார் பெஞ்சமின்.
ஆயினும், சீனாவை விட தனது கை ஓங்க வேண்டும் என்று அமெரிக்க முயற்சி செய்கிறது. இதன் விளைவாக, இன்று தென் அமெரிக்கா இரண்டு உயர்மட்ட நாடுகளுக்கு இடையே பிளவுபட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












