'இந்து மதத்தை மதிக்கவில்லை'; 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (06/02/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்துக்கள் அல்லாத, இந்து மதத்தை மதித்து நடக்காத 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், "திருமலை திருப்பதி தேவதஸ்தானத்தில் பணியாற்றிக்கொண்டே, வேறு மதத்தை ஏற்று, இந்து மதத்துக்கு கேடு விளைவிக்கும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 தேவஸ்தான ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் பி.ஆர். நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 1060, 1989-ன்படி இந்து மத சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போம் என பிரமாணம் செய்து அதனை கடைபிடிக்காதது மட்டுமின்றி, திருமலை தேவஸ்தான பணியில் இருந்துகொண்டே வேற்று மதத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அதற்கான கூட்டங்களில் பங்கேற்று வரும் 18 வேற்று மத ஊழியர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களின் நடவடிக்கைகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டன, தற்போது ஆதராங்களுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
மேலும், தேவைப்பட்டால் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் கட்டாய ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 18 பேர் தவிர மேலும் பல வேற்று மத ஊழியர்கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்துக்களின் பெயர்களோடு பொய் சான்றிதழ் கொடுத்து இவர்கள் பணியாற்றி வருவது, தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினரின் ரகசிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?
- சீனாவின் பாம்பு புத்தாண்டை நாட்டுப்புற நடனமாடி கொண்டாடிய ரோபோக்கள்
- உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்
- ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது?

தமிழ்நாட்டில் 2024-ல் சைபர் குற்றங்களில் ரூ.1,673 கோடி இழப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் சைபர் குற்றங்கள் மூலமாக ரூ.1,673 கோடி ரூபாயை மக்கள் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்று, தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பாக 2 லட்சம் புகார்கள் பெறப்பட்டன என்று காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சைபர் குற்றங்களால் ரூ.1,673 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சைபர் குற்றங்களில் 99% பாதிக்கப்படுவர்கள் தாமாக கொடுக்கும் தகவல்கள் மூலம் தான் குற்றங்கள் நடைபெறுகின்றன என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சைபர் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பில் ரூ.771 கோடி குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.83.44 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 861 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த குற்றங்களில் ஈடுபட்ட 35 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 15 போலி இணையதளங்கள், 5 சூதாட்ட இணையதளங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபாட்டில்களை அரசு திரும்ப பெற்றதால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.17 கோடி வருமானம்

பட மூலாதாரம், Getty Images
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை அரசு வாங்கிக்கொண்டதன் மூலம் ரூ.16.83 கோடி கிடைத்துள்ளதாக, டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்று, டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நீலகிரி, கோவை, பெரம்பலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களின் ஏழு மலைப்பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்தது.
அப்போது, மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலிருந்து திரும்பப் பெறும் திட்டத்தின் மூலம் ரூ.16.83 கோடி கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு என்று கண்டறிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டுப்பன்றி என நினைத்து ஒருவர் சுட்டுக்கொலை

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்ட்ரா மாநிலத்தில், வேட்டையாட சென்ற குழுவினர், தூரத்தில் இருந்த நண்பரை காட்டுப்பன்றி என நினைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "பால்கார் என்ற இடத்தில் மேனர் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாட 12 பேர் சென்றுள்ளனர். தங்கள் கிராமத்தை சேர்ந்த 60 வயதான ரமேஷையும் அழைத்துள்ளனர். தனது கூட்டாளிகள் காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது, ரமேஷ் அந்தப் பகுதிக்குள் நுழைந்துள்ளார். வருவது ரமேஷ் என்று தெரியாமல், காட்டுப்பன்றி ஒன்று தங்களை நோக்கி வருகிறது என்று நினைத்து தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் அந்த குழுவை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டார்.
இறந்தது தங்கள் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற உணர்ந்த பிறகு, அவர்கள் பதட்டமடைந்துள்ளனர். அவரது உடலை அங்கேயே புதைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வேட்டையாட சென்ற ரமேஷை ஐந்து நாட்களாக காணவில்லை என்று அவரது மனைவி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேட்டையாடச் சென்ற கிராமத்தினரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தம் இப்போது இல்லை என இலங்கை அரசு தகவல்

பட மூலாதாரம், Veerakesari
இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது என்று இலங்கையின் வீரகேசரி செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், "அரசியலமைப்பு திருத்த பணிகளை விட பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். ஆனால், தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பாரிய சவால் பொருளாதார சவாலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான முழு அரசாங்கமும் அந்த சவாலை எதிர்கொள்வதற்கான பணிகளிலேயே ஈடுபட்டுள்ளது. பொருளாதாரம் ஓரளவு ஸ்திர நிலைமையை அடைந்ததையடுத்து அரசியலமைப்பு திருத்தப் பணிகளை முன்னெடுப்போம். அந்த பணிகளையும் நீண்ட நாட்களுக்கு இழுத்துச் செல்ல மாட்டோம்.
குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமையளிப்பதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அதற்கமைய நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் பொறுத்தமான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












