You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகாரில் முந்துவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியும், மகாகட்பந்தன் எனப்படும் மகா கூட்டணியும் போட்டியில் இருந்தன. இதற்கு மத்தியில் பிரபல முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் இறங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ராம் விலாஸ் உட்பட சில கட்சிகள் அங்கம் வகித்தன.
மகா கூட்டணியில் தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட சில கட்சிகள் இடம்பெற்றன. இந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்கினார்.
கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
தைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது. என்.டி.ஏ 145 - 160 இடங்கள் வரையும், மகா கூட்டணி 73 - 91 இடங்கள் வரையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீப்பில்ஸ் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு என்.டி.ஏ கூட்டணி 133-159 இடங்கள் வரையும் மகா கூட்டணி 75-101 இடங்கள் வரையும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
பீப்பில்ஸ் இன்சைட் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ கூட்டணி 133-148 இடங்கள் வரையும் மகா கூட்டணி 87-102 இடங்கள் வரையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்ரிசஸ்-ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் என்டிஏ கூட்டணி 147-167 இடங்கள் வரையும் மகா கூட்டணி 70-90 இடங்கள் வரையும் இதர கட்சிகள் 2-6 இடங்கள் வரையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாஜகவுக்கு 65-73 இடங்கள், ஜேடியுவிற்கு 67-75 இடங்கள், எல்ஜேபி(ஆர்) கட்சிக்கு 7-10 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மகா கூட்டணியில் ஆர்ஜேடிக்கு 53-58 இடங்கள், காங்கிரசுக்கு 10-12 இடங்கள், விஐபி கட்சிக்கு 1-4 இடங்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு 9-14 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி என்டிஏ கூட்டணி 48% வாக்குகளையும் மகா கூட்டணி 37% வாக்குகளையும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாணக்யா ஸ்ட்ராடஜிஸின் கருத்துக்கணிப்பின்படி, என்டிஏ கூட்டணி 130-138 இடங்கள் வரையும் மற்றும் மகா கூட்டணி 100-108 இடங்கள் வரையும் மற்றும் இதர கட்சிகள் 3-5 இடங்கள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போல்ஸ் டைரி நடத்திய கருத்துக்கணிப்பு என்டிஏ கூட்டணிக்கு 184-209 இடங்களும் மகா கூட்டணிக்கு 32-49 இடங்களும் இதர கட்சிகளுக்கும் 1-5 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.
(தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன.)
வாக்கு எண்ணிக்கை எப்போது?
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ல் நடக்க உள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்.
முன்னதாக, பிகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமும் பெரிய விவாதப் பொருளாகியிருந்தது. சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்தப் பின்னணியில்தான் தேர்தலைச் சந்தித்தது பிகார் மாநிலம்.
நவம்பர் 6-ஆம் தேதி 121 தொகுதியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியிருந்தன. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு