செந்தில் பாலாஜி: தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு

செந்தில் பாலாஜி

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதை எதிர்த்து அமலாக்கத்துறை இந்த மேல் முறையீட்டை செய்துள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையின் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அங்கே மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அவரது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது தெரியவந்தது.

மருத்துவமனைக்கே நேரில் சென்று விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை ஏற்று, மருத்துவமனையில் வைத்தே அவரிடம் 8 நாட்கள் விசாரணை நடத்தவும் நீதிபதி அனுமதி அளித்தார்.

மறுபுறம், இதய நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வதற்காக பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சருக்கு அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி...

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வசம் உள்ள துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும் முத்துசாமிக்கும் மாற்றும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் குற்றவியல் வழக்குகள் இருப்பதால் தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் ச.முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசாணை பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி அவர்கள் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அவரை 23ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ள நீதிபதி, மருத்துவமனையில் வைத்தே விசாரணை மேற்கொள்ள அனுமதியளித்தும் உத்தரவிட்டார்.

நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது. அவர் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருப்பார் என்றும் அமலாக்கத் துறையின் மருத்துவர்கள் அவரை சென்று பார்க்கலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, இது சட்டவிரோத கைதா என்பது தொடர்பான விசாரணை ஜூன் 22ஆம் தேதி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சற்று முன்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கி முதல்வர் அளித்த பரிந்துரைக்கு, ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அதேநேரம், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘செந்தில் பாலாஜி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவர் அமைச்சராகத் தொடர்வதை ஆளுநரால் அனுமதிக்க முடியாது’ எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட காணொளி

அதிமுகவும் அதிமுகவை சேர்ந்தவர்களும் யாருக்கும் எந்தக் கட்சிக்கும் அடிமையில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

1999-ஆம் ஆண்டு திமுகதான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேரத்துக்கு தகுந்தபடி நிறத்தை மாற்றிக் கொள்ளும் கட்சி திமுக என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது பற்றி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுகவைும் எடப்பாடி பழனிசாமியையும் "அடிமை" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதலளிக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிசாமி காணொளி வெளியிட்டிருக்கிறார்.

"செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார். அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் முறைகேடாக இயங்குகின்றன." என்று அந்தக் காணொளியில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி, ஸ்டாலின்

ஸ்டாலின் பேசியது என்ன?

செந்தில் பாலாஜியை தீவிரவாதியைப் போல அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளியில், "பாஜகவுக்கு எதிரான 3000 பேர் மீது சோதனை நடத்தப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்." என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

"தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் தந்த உள்ளவுறுதி நமக்கு இருக்கிறது. எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் தாங்கிக் கடந்து செல்வோம்!" என்று குறிப்பிட்டு அந்த காணொளியை முடித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், CMOTamilNadu/Twitter

செந்தில் பாலாஜியின் இலாகாவை மாற்றும் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர்

ஊழல் புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் கவனித்து வந்த பொறுப்புகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு மாற்றி வழங்கப் பரிந்துரைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று (ஜூன் 15) மதியம் கடிதம் எழுதியிருந்ததாக அமைச்சர் பொன்முடி அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஆனால், ஆளுநர் ‘அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரித்து வருவதை காரணம் காட்டி, சரியான காரணத்தை மேற்கோள் காட்டிக் கடிதம் அனுப்புமாறு’ கேட்டிருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி அமைச்சர்களை மாற்றியமைக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது,” என்றும் ஆளுநரின் இந்தச் செய்கை “மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், அரசியல் சட்டத்திற்குப் புறம்பானதாகவும்” அரசு பார்ப்பதாகத் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மேலும் தன் அறிக்கையில், "அமைச்சர்களை நியமிப்பதிலும் நீக்குவதிலும் எப்படி முதலமைச்சரின் பரிந்துரைப்படி ஆளுநர் செயல்பட வேண்டுமோ, அதேபோலத்தான் இலாகா மாற்றுவதிலும் செயல்படவேண்டும்" என்று பொன்முடி கூறியிருக்கிறார்.

“ஒரு இலாகாவை முதலமைச்சர் ஏன் மாற்றுகிறார் என்று காரணம் கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அரசியல் சட்டப்படி உரிமையும் இல்லை,” என்றும் கூறியிருக்கிறார்.

“அமைச்சர் ஒருவர் விசாரணையைச் சந்திப்பது அவரது அமைச்சர் பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது என்ற நிலையில், அதை ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது,” என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த மே 31ஆம் தேதி, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குமாறு கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்குத் தமிழக முதலைச்சர், ஜூன் 1ஆம் தேதி அனுப்பிய பதிலில், ஆளுநரின் கடிதம் சட்டத்துக்கு எதிரானது என்றும், அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று கூறியிருந்ததாகவும் பொன்முடி அறிக்கையில் கூறியிருக்கிறார்.

முதல்வர் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து பாஜகவுக்கு எச்சரிக்கை விடும் விதமாகப் பேசியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது எதிர்வினையாற்றியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “முதலமைச்சர் வீடியோவில் வரம்பு மீறிப் பேசியுள்ளார். கனிமொழி கைதுக்குக்கூட ஸ்டாலின் இந்த அளவுக்கு கோபப்படவில்லை.

இதன்மூலம் திமுகவின் கருவூலம் செந்தில் பாலாஜி என்று பொது மக்கள் பேசுவது உறுதியாகியுள்ளது. அவரது கைதுக்குப் பிறகு ஒரு முதலமைச்சர் போல மு.க.ஸ்டாலின் நடந்துகொள்ளவில்லை.

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது எப்படி அறிவிக்கப்படாத அவசரநிலை என்று ஆகும்,” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த விஷயத்தில் முதலமைச்சர்தான் அச்சுறுத்தும் விதமாக நடந்துகொள்கிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, மத்திய அரசின் கீழ் செயல்படக்கூடிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் நேர்மையாகத்தான் செயல்படுகின்றன. முதலமைச்சரின் பேச்சுதான் நேர்மையற்றதாக இருக்கிறது.

சென்னை மெட்ரோவில் 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருப்பது குறித்த புகாரை சிபிஐ விசாரித்து விடும் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே முதல்வர், சிபிஐ விவகாரத்தில் இந்த நகர்வை எடுத்துள்ளார். சென்னை மெட்ரோ வழக்கை விசாரித்தால் முதலமைச்சர் சிறைக்குச் செல்வது உறுதி என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதை மறைப்பதற்காகத்தான் சிபிஐ அமைப்பின் பொது அனுமதியை ரத்து செய்துள்ளார்,” என்றும் கூறினார்.

அண்ணாமலை

பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER

முதலமைச்சர் பதற்றத்தில் இருப்பதாகக் கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இது நேர்மையாக, சட்டத்தின்படி நடக்கும் ஆட்சி இல்லை என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். அவர் பாஜக தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளார். நாங்கள் எதற்கும் தயாராகத்தான் உள்ளோம்.

திமுகவின் குண்டர்களை தமிழகம் இதற்கு முன்பும் பார்த்துள்ளது. முதல்வருக்கு சவால் விடுகிறேன், பாஜக தொண்டர் மீது கை வைத்துப் பாருங்கள். நிலைமை கை மீறிச் சென்றால், கோட்டையை நோக்கி வரத்தான் போகிறோம்,” என்று கூறினார்.

முந்தைய விசாரணையில் என்ன நடந்தது?

முன்னதாக நடைபெற்ற ஜாமின் மனு மீதான விசாரணையில்,

"செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை" என என். ஆர். இளங்கோ தனது வாதங்களை முன் வைத்தார்.

அதற்கு பதிலளித்து அமலாக்கத்துறை சார்பில், “விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல் நலக்குறைவு என கூறுகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.” என ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்தார்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று மனுக்களும் இன்று விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டன.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், STALIN/TWITTER

மாநில மனித உரிமை ஆணைய விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். செந்தில் பாலாஜி மிகவும் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.

காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

செந்தில் பாலாஜி

பட மூலாதாரம், TNDIPR

இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையிடு செய்யப்பட்டது.

இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.

மேலும் வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: