நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் வல்லுறவு - நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை - முழு விவரம்

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, காசி

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த குற்றச்சாட்டின் பேரில், நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்திருக்கிறது?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு பெண்களிடம் பழகி வந்த காசி, அவர்களிடம் பாலியல் ரீதியாகவும் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் இதனை வீடியோ மற்றும் புகைப்படமாகவும் பதிவு செய்து வந்துள்ளார்.

இவர் அந்த வீடியோக்களையும் , புகைப்படங்களையும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் காண்பித்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்ததாக காசி மீது புகார் கூறப்பட்டது.

காசியால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர், இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை, காசி மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் தமிழகம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பள்ளி, கல்லூரி மாணவிகளையும் இதுபோன்று மோசடி செய்தது தெரியவந்தது.

அந்த சமயத்தில் காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுவது போன்ற காட்சிகளும், அவர்கள் கதறி அழுவது போன்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து காசி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டியது போன்ற குற்றத்திற்காக போக்சோ உட்பட காசி மீது 7 வழக்குகள் பதிவாகின. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து காசியை கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டு, பின் ஓராண்டிற்கு பின் பிணையில் வெளிவந்தார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக காசியின் நண்பர்களான டேசன் ஜினோ, தினேஷ் கௌதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே காசி பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஆய்வு செய்த போலீசார் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களும் விடியோக்களும் பதிவாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, காசி

யார் இந்த காசி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (28). இவர் பொறியியல் படித்துள்ளார். காசியின் தந்தை, அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். கல்லூரி படிப்பு முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் இருந்து வந்தார்.இறைச்சி வியாபாரம் முடிந்த பின்பு சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.பெண்ணியம் குறித்தும், பெண்களின் நலன் பற்றியும் பல கருத்துக்களை பதிவிடுவார்.

பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, ஆடம்பரமான ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த பைக்கில் இருப்பது போன்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

காசியிடம் ஈர்க்கப்பட்டு பழகும் பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் ஆபாசமாக உரையாடுவது , அவ்வாறு உரையாடும் போது அவர்களின் அந்தரங்க போட்டோ வீடியோக்களை எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புமாறு கேட்பது, காசியின் பாணியாக இருந்துள்ளது என்று விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

காசியின் பேச்சில் மயங்கிய பெண்கள் அவர்களுடைய புகைப்படங்கள், காணொளிகளை அனுப்பி வைக்கும்போது அதை பதிவு செய்து கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம், நகை பறிப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

சில பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் போது அதனை காணொளியாக பதிவு செய்து, அதை வைத்து அந்த பெண்ணின் தோழிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு மிரட்டி சம்மதிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காணொளிகள் மூலம், காசி இயற்கைக்கு மாறாக பல பெண்களிடம் மிக கொடூரமான முறையில் பாலுறவு கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காசிக்கு உதவிய நண்பர்கள்

காசிக்கு உதவியாக இருந்த இரண்டு பேரில் முக்கிய குற்றவாளியாக நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ என்பவர் இருக்கிறார்.

இது குறித்து காவல்துறை தரப்பிலிருந்து பிபிசி தமிழிடம் பேசிய அதிகாரி ஒருவர், “பொதுவாக காசி வசம் இருக்கும் பெண்ணுக்கு அவனைப்பற்றி தெரியவந்தால், அந்தப் பெண்கள் காசியை விட்டு விலகுவார்கள். அப்படி விலகும் பெண்களை மிரட்டுவதற்காக, காசி அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படத்தை டேசன் ஜினோவிற்கு அனுப்புவார்.

டேசன் ஜினோ அந்த புகைப்படத்தை சம்பந்தபட்ட பெண்ணுக்கு அனுப்புவார். புகைப்படம் வெளியானதும் சம்பந்தப்பட்ட பெண்கள் பதறியடித்து அந்தப் புகைப்படத்தை வெளியிட்ட டேசனைத் தொடர்புக் கொண்டு பேசியிருக்கிறார்கள்.

அப்போது காசி பற்றிய விஷயங்களை கூறிவிட்டு அவன் சொல்வதைச் செய்யாவிட்டால் புகைப்படத்தை 'அனைவரும் பார்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்'என மிரட்டியுள்ளார் டேசன் ஜினோ. இப்படி இவர்கள் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட காசி

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, காசி

இந்த சம்பவம் குறித்த சிபிசிஐடி விசாரணையில், காசி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ”நானாக எந்த பெண்ணையும் தேடி சென்று ஏமாற்றவில்லை, என் உடல் அழகை பார்த்து என் மீது ஈர்க்கப்பட்டு வந்த பெண்களை நான் ஏமாற்றினேன்” என்று விசாரணையில் காசி கூறியதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின் போது முதல் இரண்டு நாட்கள் காசியிடம் இருந்து எந்த தகவல்களையும் பெற முடியவில்லை. மூன்றாவது நாள் விசாரணையின் தொடக்கத்தில் 'அனைத்து குற்றங்களையும் நான்தான் செய்தேன்’ என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், “நான் இந்த தவறுகளை தெரியாமல் செய்து விட்டேன், காவல் துறை இப்படி விசாரணை செய்து கண்டு பிடிக்கும் என எனக்கு தெரியாது' என காசி பேச தொடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரமாக நடைபெற்று வந்த காசியின் வழக்கு

இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்திலும், போக்சோ சிறப்பு நீதிமன்றத்திலும் (பாதிக்கப்பட்டதில் ஒருவர் சிறார் என்பதால்) நடந்து வருகிறது.

இதில், 21- வயது பெண் ஒருவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு, அதை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவரை மிரட்டி மீண்டும் மீண்டும் துன்புறுத்தி வந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., பதிவு செய்த வழக்கு ஒன்றும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 14 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, காசி

மகிளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், பாதிக்கப்பட்ட பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக காசிக்கு ஐ.பி.சி., 376(2), 354 சி மற்றும் 506(22) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டணையும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் பி.பி.சி தமிழிடம் பேசினார்.

"இந்த வழக்கில் இருந்த சாட்சியங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமான சாட்சியங்களும் (Scientifical evidences), வாய்மொழி சாட்சியங்களும் (Oral evidences) தான். வாய் மொழி சாட்சியம், பாதிக்கப்பட்ட பெண் கூறியவை, அறிவியல் பூர்வமான சாட்சியங்கள் குற்றம்சாட்டப்பட்ட காசி பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள். இவற்றை சைபர் நிபுணர்கள் (Cyber Expert) மூலம் நிரூபித்து வழக்கை நடத்தினோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர் தரப்பில் உரிய நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளிக்க வில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு வாதங்களை முன்வைத்தனர். அதே போல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்குடன் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் எதிர் தரப்பினர் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட காசிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டணையும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட காசியின் தந்தை தங்கபாண்டியனை நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்” என்று வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் தெரிவித்தார்.

விசாரணையில் ஏற்பட்ட சவால்கள்

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு, காசி

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி.,யில் 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றி தற்போது பணி மாறுதலாகி கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஆய்வாளர் சாந்தி பி.பி.சி தமிழிடம் பேசினார்.

அவர் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணை மிகவும் சவாலாக இருந்தது. நாங்களும் கடுமையாக தொடர்ந்து பணியாற்றினோம். குற்றவாளி பிணையில் விடுதலை ஆக முடியாத நிலையில், நாங்கள் உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். இதனால் பிணையில் வெளிவர முடியாமல், கைது செய்யப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளாக குற்றவாளி தொடர்ந்து சிறையிலேயே இருந்தார்."

"பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு ஆய்வக அதிகாரிகளிடம் பேசி, முடிவுகளை கூட நாங்கள் விரைவாக பெற்று தந்தோம். இதனால் விசாரணை விரைவாக நடைபெற்று, காசி விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்திலேயே அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது."

"இவ்வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் மிகவும் எளிமையான பின்புலம் உள்ளவர்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த தீர்ப்பை வரவேற்று அவர்களது மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்டனர்” என்று ஆய்வாளர் சாந்தி விவரிக்கிறார்.

காசியிடம் கைப்பற்றப்பட்ட கைபேசி மற்றும் மடிக்கணிணியில் 1900 த்திற்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்களும், 300 க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண விடியோக்களும் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி மீது தொடுக்கப்பட்டுள்ள 7 வழக்குகளில் ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மீதமுள்ள வழக்குகளில் இரண்டு வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: