மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்படி சேர்வது? எவ்வளவு வட்டி கிடைக்கும்?

இந்திய அரசு சார்பில் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்காக மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் இன்று வரைக்கும் இந்தியாவில் அதிக வட்டியை வழங்கும் பாரம்பரிய சேமிப்புத் திட்டங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் அடிப்படையான தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது என்ன?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) கணக்கு என்பது இந்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் ஓய்வூதிய பலன் பெறுவோருக்கான கணக்காகும். இந்தத் திட்டத்தில் ஓய்வூதியப் பலன்களை பெறும் மூத்த குடிமக்கள் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும்.

ஓய்வு பெறும்போது கிடைக்கும் வருமானத்துக்கான வரிச் சலுகைகள் இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும். இது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டமாகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி எவ்வளவு கிடைக்கும்?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி விகிதம் 8.2 சதவிகிதமாகும். மற்ற வங்கி சேமிப்புத் திட்டங்கள், நிரந்தர வைப்பு நிதிகள் போன்றவற்றைக் காட்டிலும் இது அதிகமாகும். ஒவ்பொரு காலாண்டு தொடக்கத்திலும் இந்த வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். எனினும் திட்டத்தில் சேர்ந்துவிட்டால் அந்த வட்டி விகிதமே சேமிப்புக் காலம் முழுவதும் தொடரும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வட்டியை எப்படிப் பெறுவது?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி ஒவ்வொரு காலாண்டு தொடக்கத்திலும் தொடர்புடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்படி சேருவது?

அருகில் உள்ள வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் இந்தக் கணக்கைத் தொடங்க முடியும். நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து திட்டத்தில் சேரலாம். பான் எண், புகைப்படங்கள், முகவரி ஆவணம் ஆகியவை அவசியம். வாரிசுதாரரை நியமிக்கும் வசதியும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்ய விரும்புவோர் ரொக்கமாகவே டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலை மூலமாகவே கணக்கைத் தொடங்க முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர என்ன தகுதி இருக்க வேண்டும்?

60 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். எனினும் இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஓய்வு பெற்ற 55 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம். 55 வயதுக்கு மேற்பட்ட விருப்ப ஓய்வு பெற்று ஓய்வூதிய பலன்களைப் பெறுவோரும் இதில் முதலீடு செய்யலாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தத் திட்டத்தில் சேர முடியாது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் பலன்கள் என்னென்ன?

மற்ற நிரந்தர வைப்பு நிதிகள், சேமிப்புத் திட்டங்களைக் காட்டிலும் வட்டி விகிதம் இதற்கு அதிகம். இதன் சேமிப்புக் காலம் 5 ஆண்டுகள் என்றாலும் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு காலத்தை நீட்டிக்க முடியும். ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியும். கூட்டுக் கணக்கும் தொடங்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டா?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. எனினும் அசல் தொகைக்கு 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.

முதிர்வு காலத்துக்கு முன்பே அசல் தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடியுமா?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதிர்வு காலத்துக்கு முன்பே அசல் தொகையை எடுக்கலாம். எனினும் அதற்கு 1.5 சதவிகிதம் வரை பிடித்தம் இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: