You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உயிரோடு இருக்கும் போதே இறந்தது போல உணர வைக்கும் இந்த நோய் குறித்து தெரியுமா?
- எழுதியவர், மார்க் கிரிஃபித்ஸ்
- பதவி, தி கான்வெர்சேஷன்ஸ்
எண்ணம் மற்றும் செயலில் மாறுபாடு ஏற்படுத்தும் ஸ்கிசோஃப்ரினியா மற்றும் பைபோலார் குறைபாடு போன்ற மனநலக் கோளாறுகள் பொதுவானவை. அதே நேரம், அதிகம் அறியப்படாத சில மனநலக் கோளாறுகளும் உள்ளன.
இந்தக் கோளாறு கொண்ட நோயாளிகளை தங்கள் வாழ்க்கையில் சந்திக்காத மனநல மருத்துவர்களும் பலர் இருப்பார்கள்.
அது மாதிரியான ஐந்து மனநலக் கோளாறு குறித்து இங்கு பார்ப்போம்.
ஃப்ரிகோலி சிண்ட்ரோம் (Fregoli syndrome)
ஃப்ரிகோலி சிண்ட்ரோம் என்பது தன்னை மற்றொருவராக நினைத்துக்கொள்ளும் நிலை. இந்த நிலையில் ஒரு நபர் தன்னுடைய தோற்றத்தை மட்டும் வேறு ஒருவராக நினைத்துக்கொள்வார்.
இந்த நோய்நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு உருவத்தில் இருப்பதாக தான் நம்பும் நபரால் துன்புறுத்தப்படுவதை போல அடிக்கடி உணர்வார்கள்.
இந்த நோய்க்கு இத்தாலிய மேடை நடிகரான லியோபோல்டோ ஃப்ரிகோலியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இவர் மேடையில் தனது தோற்றத்தை விரைவாக மாற்றும் திறனுக்காக அறியப்பட்டவர்.
ஃப்ரிகோலி நோய் பெரும்பாலும் ஸ்கிசோஃப்ரினியா மற்றும் பைபோலார் குறைபாட்டின் இணை நோயாகவே ஏற்படுகிறது.
மூளை காயம் மற்றும் பர்கின்சன் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் லெவோடோபா என்ற மருந்தின் தாக்கத்தாலும் இந்த நோய் ஏற்படலாம்.
உலகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 50க்கும் குறைவானவர்களே இருப்பது 2018ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்தது.
ஆனால், 2020ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வில் 50க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் 1.1 சதவீதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. எனினும், இது அரிதான நோயாகவே உள்ளது.
இந்தக் குறைபாட்டிற்கு எந்த மருந்தும் இல்லை. ஆனால், மனநலக் கோளாறுகளுக்கு எதிராக பயன்படுத்தும் மருந்துகள் நோயின் வீரியத்தைக் குறைக்கலாம்.
கோடார்ட் சிண்ட்ரோம் (Cotard's syndrome)
வாக்கிங் கார்ப்ஸ் சிண்ட்ரோம் என்று பிரபலமாக அறியப்படும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இறந்துவிட்டோம் என்ற மாய நம்பிக்கையில் இருப்பார்கள். சிலர், தங்கள் உடல் உறுப்புகளைக் காணவில்லை என்று நம்புவார்கள்.
இந்த நோயை முதன்முதலின் கண்டறிந்தவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்ச் நரம்பியல் நிபுணர் ஜூல்ஸ் கோடார்ட். அதனால் அவரது பெயரே இந்நோய்க்கு சூட்டப்பட்டது.
ஸ்கிசோஃப்ரினியா, மனச்சோர்வு மற்றும் பைபோலார் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குவதற்கான ஆபத்துகள் உள்ளன. எனினும், இது அசைக்ளோவிர் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தின் அரிய பக்க விளைவு என்றும் கூறப்படுகிறது.
முகங்களை அடையாளம் காணும் மூளையின் பகுதிகள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்படும் போது இந்த நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் ( Alien hand syndrome)
ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்பது அரிதான நரம்பியல் கோளாறு. இந்த நோய்க்கு உள்ளான நபர் தன் கை தனக்குச் சொந்தமானது அல்ல என்று உணர்வார்.
இந்த நோய் முதன்முதலில் 1908ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆனால் 1970களின் முற்பகுதி வரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
சில வகையான மூளை அறுவை சிகிச்சைகளில் இருந்து மீண்டு வரும்போது அரிதாக காணப்படும் நிலையற்ற நடத்தையை விவரிக்க அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜோசப் போகன் என்பவர் ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.
பெரும்பாலும் ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு உணர்திறன் செயலாக்க கோளாறுகளும் உள்ளன.
இந்த நோய் உள்ளவர்கள் தங்கள் கையை அன்னியரின் கையைப் போல உணர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நினைவு இழப்பு, பக்கவாதம், கொடிய மூளை நோயான ப்ரியான், கட்டிகள் மற்றும் வலிப்பு ஆகியவை காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.
இது மிக அரிதான நோய். 2013ஆம் ஆண்டு மருத்துவ சஞ்சிகைகளில் செய்யப்பட்ட ஒரு மதிப்பாய்வில் உலகளவில் மொத்தம் 150 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நோய்க்கு மருந்து இல்லையென்றாலும் பாதிக்கப்பட்ட கையை வேறுவேறு வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுத்தி நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
போட்லினம் டாக்சின் ஊசி சிகிச்சை மற்றும் கண்ணாடி பெட்டி சிகிச்சை போன்ற மற்ற சில சிகிச்சைகளும் உள்ளன.
எக்போம் சிண்ட்ரோம் ( Ekbom syndrome)
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தோலுக்கு அடியில் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் ஊர்வது போல உணர்வார்கள்.
1930களின் பிற்பகுதியில் சுவீடனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் கார்ல் எக்போம் இந்த நோயை முதன்முதலில் கண்டறிந்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 20 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்தது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 1,223 நோயாளிகளின் மெட்டா பகுப்பாய்வின்படி, இந்த நோய் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதேபோல 40 வயதுக்கு மேற்பட்டவர்களிலும் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக இந்த நோய் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும்.
மது அருந்துதல், கொக்கையினை தவறாகப் பயன்படுத்துதல், பக்கவாதம், மூளையின் தலாமஸ் பகுதியில் ஏற்படும் சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று நினைப்பதால் பெரும்பாலும் உளவியல் மருத்துவரை அணுகுவதில்லை.
ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் சிண்ட்ரோம் (Alice in Wonderland Syndrome)
ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் சிண்ட்ரோம் என்பது ஒரு நபரின் உருவம், பார்வை, செவித்திறன், தொடுதல், இடம், காலம் ஆகியவற்றின் உணர்வு சிதைக்கப்படும் நிலை.
பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களை உண்மையில் இருப்பதை விட சிறியதாகவும், மனிதர்களை உண்மையில் இருப்பதை விட பெரியதாகவும் உணர்வார்கள்.
சிலர் இவை இரண்டையும் நேர்மாறாக உணரலாம்.
இந்த நோய் எவ்வளவு பொதுவானது என்பது குறித்து அதிகம் அறியப்படவில்லை. ஆனால், குழந்தைகள் மற்றும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது.
இந்த நோய் உள்ளவர்கள் பயம் மற்றும் பீதி அடையலாம். எனவே இவர்களுக்கான சிகிச்சையில் ஓய்வும் அடங்கும்.
பெரும்பாலான நேரங்களில் இது ஒப்பீட்டளவில் குறுகிய கால பாதிப்பு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய பாதிபேர் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் குணமடைந்ததாக சமீபத்திய ஒரு மதிப்பாய்வு கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்