ஈரோடு மாவட்டத்தில் அருந்ததியரின் மாட்டிறைச்சி கடைகள் அகற்றம் - சாதிய தீண்டாமையா?

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்
படக்குறிப்பு, புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி சந்தையில் இருந்து அகற்றப்பட்ட கடைகள்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட புன்செய்ப்புளியம்பட்டியில் அருந்ததியர் சமூக மக்கள் நடத்தி வந்த மாட்டிறைச்சி கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அருந்ததியர் சமூக மக்கள் பல கட்ட போராட்டம் நடத்தியும் இந்தப் பிரச்சனையில் தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை என்கின்றனர்.

என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வட்டத்திற்கு உட்பட்டு புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சியில் பேருந்து நிலையத்திற்கு எதிரே புன்செய்ப்புளியம்பட்டி வாரச் சந்தை 28 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு காய்கறி, பழக் கடைகள், இறைச்சி சந்தை எனப் பல தரப்பட்ட வியாபாரம் இயங்கி வருகின்றன.

சந்தையின் முன்பகுதியில் காய்கறி பழக் கடைகள் இயங்கி வருகின்றன. சந்தைக்கு உள்புறம் ஆடு, மாடு, கோழிகளுக்கு எனத் தனித்தனி இடங்களில் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. வாராந்திர மாட்டு சந்தை நடைபெறும் இடத்திற்கு அருகிலே மாட்டிறைச்சி கடைகளும் இயங்கி வந்துள்ளன.

இந்த சந்தையில் 13 மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வந்தன. இதே ஊரைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்கள் தான் இந்த கடைகளை நடத்தி வந்தனர். கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி அதிகாலை நகராட்சி நிர்வாகத்தினர் 13 கடைகளையும் அகற்றினர். உரிய முன்னறிவிப்பின்றி தங்களின் கடைகள் அகற்றப்பட்டதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியின் 15 மற்றும் 16 வார்டுகளுக்குக் கீழ் வாரச் சந்தை வருகிறது. இங்கு நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு உள்ளூர் மக்கள் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்து தான் இறைச்சிக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில் நகராட்சி நிர்வாகத்தால் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்

`நவீன தீண்டாமை இது' - வியாபாரிகள் குமுறல்

சந்தையில் மற்ற இறைச்சிக் கூடங்களும் கடைகளும் தடையின்றி இயங்கி வருகின்ற நிலையில் மாட்டிறைச்சி கடைகளை மட்டும் குறிவைப்பது தீண்டாமையாகவே தெரிகிறது என்கிறார் புளியம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைகளில் இதுவும் ஒன்று. சந்தை இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக இங்கு மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறேன். இங்குள்ள வியாபாரிகள் அனைவருமே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இங்கு நடைபெறும் வாராந்திர மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகாவிலிருந்து மாடுகள் விற்பனைக்கு வரும். 30 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து தான் மாட்டிறைச்சி செல்கின்றது. எங்கள் சொந்த செலவில் தான் கடை அமைத்து நடத்தி வந்தோம்

13 குடும்பங்கள் நேரடியாகவும் சுமார் 250 மறைமுகமாகவும் மாட்டிறைச்சி கடைகளை வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருந்தனர். நான் மூன்றாவது தலைமுறையாக இதில் ஈடுபட்டுள்ளேன். பி.காம் படிப்பை முடித்த என் மகனும் இதில் தான் ஈடுபட்டுள்ளான். இதுநாள் வரை இங்கு எங்களுக்கு உள்ளூர் மக்களிடமிருந்தோ வேறு தரப்பிலிருந்தோ எந்த எதிர்ப்பும் ஆட்சேபனையும் வந்ததில்லை.

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்
படக்குறிப்பு, 13 மாட்டிறைச்சி கடைகளையும் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்

திடீரென்று ஒருநாள் அதிகாலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் கடைகளை இடித்துவிட்டனர். இதே சந்தையில் ஆடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. ஆடு இறைச்சிக் கூடமும் இயங்கி வருகின்றது.

ஆனால் மாட்டிறைச்சி மட்டும் விற்கக்கூடாது எனச் சொல்வது தீண்டாமையாகவே தெரிகிறது. எங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது. கடந்த நான்கு மாதங்களாக கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறோம்.

நகராட்சி தலைவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் தான். துணைத் தலைவர் தான் அவரைச் செயல்பட விடாமல் இந்த பிரச்சனையில் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என நாங்கள் கருதுகிறோம். நகராட்சி துணைத் தலைவர் சிதம்பரம் தான் இதற்கு காரணம். தற்போது தீர்வு கிடைப்பதற்கும் தடையாக உள்ளார். நாங்கள் மூன்று தலைமுறையாக வியாபாரம் செய்த இடத்திலே எங்களுக்கு கடை அமைத்து தர வேண்டும். நாங்கள் வாடகை செலுத்தவும் தயாராகவே உள்ளோம் என்றார்.

பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்தும் தீர்வு கிடைக்காததால் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி காலவரையற்ற குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்த பேச்சுவார்த்தையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி கடைகள் மீண்டும் அமைத்து தரப்படும் என வாய்மொழி உத்திரவாதம் அளிக்கப்பட்டதால் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

'திராவிட மாடல் ஆட்சிக்கு அழகா?'

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி பிபிசி தமிழிடம் பேசுகையில், “வியாபாரிகள் நகராட்சி இடத்தில் தான் கடைகளை நடத்தி வந்தனர். அதற்கு ஏலத் தொகையும் செலுத்தி வந்தனர். மூன்று தலைமுறையாக இதே இடத்தில் இவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் திடீரென்று மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள் எனக் கூறி வியாபாரிகளிடம் விளக்கம் கேட்காமலே இடித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே காவல்துறை, வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் எனப் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் இதை தீர்க்க வேண்டும்ம் என அறிவுறுத்தியுள்ளார். சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனியாக கடிதமும் எழுதியுள்ளார்

இதை சுமூகமாக தீர்க்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் நகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்திய பிறகும் தற்போது வரை தீர்வு கிடைக்காமலே வைத்துள்ளனர். பேச்சுவார்த்தையில் வாய்மொழியாக ஒரு உத்திரவாதத்தை வழங்கிவிட்டு அதற்கு முரணான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். நகராட்சி ஆணையர் முன்மொழிந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலே நிராகரித்துள்ளனர்.

'திராவிட மாடல்' ஆட்சி எனக் கூறும்போது நகராட்சி மன்றம் இவ்வாறு சாதி ஆதிக்கம் நிறைந்ததாக இருப்பது தவறான முன்னுதாரணமாக அமைகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இது அழகல்ல,” என்றார்.

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்
படக்குறிப்பு, சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் ஒன்றிய செயலாளர்

நகராட்சி மன்ற கூட்டத்தில் நடந்தது என்ன?

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அவசர நகராட்சி மன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் இடிக்கப்பட்ட இடத்திலே இறைச்சி கூடம் மற்றும் கடையை அமைத்து தர ஆணையர் முன்மொழிந்த தீர்மானத்தை நகராட்சி மன்றம் ஏற்கவில்லை. அதற்கு மாறாக நகராட்சி தலைவர் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருகிறார்.

அதில் ஆறு வியாபாரிகளுக்கு சந்தையில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் கடை அமைத்து தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது சிலர் நகராட்சி ஆணையரை தாக்கியதாகவும் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நகராட்சி நிர்வாகத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்
படக்குறிப்பு, கடைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

'நகராட்சி ஆணையர் தான் காரணம்'

நகராட்சி மன்றத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நகர சபையில் பெறப்பட்ட புகார்களை வைத்து ஆணையர் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே இறைச்சிக் கடைகளை இடித்துவிட்டார். அது தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தொடக்கப்புள்ளி. இந்த மாதிரி புகார்கள் வந்துள்ளது என எங்களிடம் கலந்தாலோசித்திருந்தால் பேச்சுவார்த்தை மூலம் இதை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்போம். மக்களுக்கு தேவையானவற்றை செய்து தர நாங்கள் ஆதரவாக உள்ளோம். ஆணையர் தீர்மானம் முன்மொழிந்து அது நிராகரிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை.

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்
படக்குறிப்பு, சந்தை வளாகத்தில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடம்

மற்றபடி என் மீதோ, துணைத் தலைவர் மீதோ வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. மாவட்ட நிர்வாகம் தான் எங்கு இறைச்சி கடைகளை அமைத்து தர வேண்டும் என்கிற இடத்தை அடையாளம் காட்ட வேண்டும். மாவட்ட நிர்வாகம் எந்த இடத்தை அடையாளம் காட்டுகிறதோ அங்கு அனைத்து வசதிகளுடன் இறைச்சிக் கூடம் மற்றும் கடைகளை அமைத்து தருவதற்கு தலைவர் என்கிற முறையில் நான் தயாராகவே உள்ளேன்,” என்றார்.

நகராட்சி மன்றத்தின் ஒத்துழைப்பு தேவை

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்

ஆனால் நகராட்சி ஆணையர் மாறுபட்ட விளக்கம் ஒன்றை முன் வைக்கிறார். புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி ஆணையர் சையது ஹுசைன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நகர சபை புகார்களின் அடிப்படையில் தான் கடைகள் அகற்றப்பட்டன. தீர்மானம் நிறைவேற்றும் பொறுப்பு ஆணையரிடம் இல்லை. நகராட்சி மன்றம் நிறைவேற்றும் தீர்மானத்தை செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே ஆணையருடையது. அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அதே இடத்தில் இறைச்சிக் கூடமும் கடையும் அமைத்து தரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதற்கான நிர்வாக தீர்மானத்தையும் முன்மொழிந்தேன். ஆனால் மன்றம் அதை விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நிர்வாகம் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தால் அதை விவாதித்து ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலே விட முடியாது.

நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமில்லாத மேய்ச்சல் நிலத்தில் இறைச்சிக் கடைகளை அமைக்கலாம் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிலம் கைமாற்ற மாவட்ட நிர்வாகம் ஒத்துக்கொள்ள வேண்டும். செயல்படுத்த முடியாத இந்த தீர்மானம் மேலும் சட்ட சிக்கலை தான் உருவாக்கியுள்ளது.

ஈரோடு, மாட்டிறைச்சி கடை, திமுக, கம்யூனிஸ்ட் போராட்டம்
படக்குறிப்பு, சந்தை வளாகத்தில் உள்ள ஆட்டிறைச்சி கடைகள்

சந்தையிலே போதிய இடவசதி உள்ளது. நகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் அங்கே இறைச்சிக் கூடமும் கடையும் மீண்டும் அமைத்து தருவதில் எந்த சிக்கலும் இருக்காது. நகராட்சி நிர்வாகத்திற்கும் அதிலிருந்து வருமானம் கிடைக்கவே செய்யும். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை செய்து தருவதற்கு தடை இருக்காது,” என்றார்.

புளியம்பட்டி நகராட்சி துணைத் தலைவர் சிதம்பரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஆணையர் தான் தன்னிச்சையாக பெறப்பட்ட புகார்களை வைத்து கடைகளை இடித்துவிட்டார். இதில் நகராட்சி மன்றத்திற்கும் தலைவர், துணைத் தலைவருக்கும் எந்த பொறுப்பும் இல்லை. மக்கள் புகார் அளிக்கிறார்கள் என்றால் நாங்கள் வியாபாரிகள், பொதுமக்கள் என இரு தரப்பையும் பார்க்க வேண்டும். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. வியாபாரிகள் ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி அவர்களைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். அமைச்சர் விரைவில் வந்து பார்வையிட உள்ளார். அமைச்சர் எங்கு அமைத்து தரச் சொல்கிறாரோ அங்கு மீண்டும் கடைகளை அமைத்து தருவோம்," என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: