ரொனால்டோவை அலறவிட்ட அல் பேட்டின்: அல் நாசரை காப்பாற்றிய கடைசி நிமிட 'மேஜிக்' கோல்கள்

பட மூலாதாரம், Getty Images
சௌதி புரோ லீக்கில் அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த ரொனால்டோவின் அல்-நாசர் அணி, கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து வெற்றியைத் தன்வசமாக்கியது.
கால்பந்து உலகில் அதிகம் அறியப்படாதிருந்த சௌதி புரோ லீக், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த உள்நாட்டுத் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்டது.
வரலாறு காணாத ஊதிய ஒப்பந்தத்துடன் அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள அவர், அந்த அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
முந்தைய 3 ஆட்டங்களில் இரு முறை ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதையும் வென்றார்.
சௌதி புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் யாருக்கு என்பதில் அல்-நாசர் அணிக்கும், அல்-இட்டிஹாட் அணிக்கும் இடையேதான் கடும் போட்டி நீடிக்கிறது. அந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அல்-பேட்டின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மீண்டும் முதலிடத்தப் பிடிக்கலாம் என்ற நிலையில் அல்-நாசர் அணி இருந்தது.
அல்-நாசர் அணி கடந்த செப்டம்பருக்கு பிறகு இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவே இல்லை. மறுபுறம், அல்பேட்டின் அணியோ நடப்புத் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 12 ஆட்டங்களில் அல்-நாசர் அணி 9 முறையும், அல்-பேட்டின் அணி 3 முறையும் வென்றுள்ளன. நடப்புத் தொடரில் 39 கோல்களை அடித்துள்ள அல்-நாசர் அணி சிறந்த தாக்குதல் ஆட்டத்தைக் கொண்ட அணியாக உருவெடுத்துள்ளது. அல்-பேட்டின் அணியோ வெறும் 12 கோல்களுடன் மிகக் குறைந்த கோல்களை அடித்த அணியாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
புள்ளி விவரங்களின்படி பார்த்தால், அல்-பேட்டின் அணியை கிறிஸ்டியானோ ரொனால்டோவை உள்ளடக்கிய அல்-நாசர் அணி எளிதில் வீழ்த்திவிடும் என்றே கால்பந்து வல்லுநர்கள் கணித்திருந்தனர். சிறப்பான ஃபார்மில் இருந்த ரொனால்டோ இந்தப் போட்டியிலும் கோல் மழை பொழிவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் கிங் சௌத் யுனிவெர்சிட்டி ஸ்டேடியத்தில் அல்-நாசர் மற்றும் அல்-பேட்டின் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அல்-நாசர் அணியின் தாக்குதலை அல்-பேட்டின் வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.
அத்துடன், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அல்-பேட்டின் அணி கோல் அடித்து முன்னிலையும் பெற்றது. அந்த அணி வீரர் ரென்சோ லோபெஸ் எதிரணி வீரர்களை ஏமாற்றி தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கோல் வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீண்டு, பதில் கோல் அடிக்க அல்-நாசர் அணி வீரர்கள் கடுமையாகப் போராடினர். குறிப்பாக, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்கடி எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டபடி இருந்தார்.
ஒரு கட்டத்தில் பந்தை ரொனால்டோ கோல் வளைக்குள் திணிக்கவும் செய்தார். ஆனால், அதை ஆஃப்சைடு என்று நடுவர்கள் அறிவித்ததால் அவர் ஏமாற்றமடைந்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அல்-நாசர் அணி வீரர்கள் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வர தீவிரமாக முயன்றனர். தாக்குதல் ஆட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திய ரொனால்டோ, சில கோல் வாய்ப்புகளை உருவாக்கவும் செய்தார்.
ஆனால், அல்-பேட்டின் அணியின் தற்காப்பு மிகவும் வலுவாக இருந்ததால், அவை எதுவும் கோலாக மாறவில்லை. அல்-பேட்டின் அணியின் கோல் கீப்பர் மார்ட்டின் கம்பானா தனி ஒருவனாக மலை போல் நின்று அல்-நாசர் அணியின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் அல்-பேட்டின் ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. வலுவான அல்-நாசர் அணியோ கோல் அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதனால், அல்-நாசர் அணிக்கு அல்-பேட்டின் அணி அதிர்ச்சி கொடுக்கக்கூடும் என்ற நிலையே இருந்தது.
ஆனால், ஆட்டத்தின்போது வீணான நேரத்தை ஈடுகட்டுவதற்காக வழங்கப்பட்ட கூடுதலான 12 நிமிடங்களில் ஆட்டமே தலைகீழாக மாறிப் போனது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் அல்-நாசர் அணியின் இடைவிடாத முயற்சிக்குப் பலன் கிடைத்தது.
அல்-பேட்டின் அணியின் கோல் கம்பத்தை அந்த அணி முற்றுகையிட்டிருந்தபோது கிடைத்த வாய்ப்பை அல்துல் ரஹ்மான் காரீப் கோலாக மாற்றினார். இதனால், ஆட்டம் சமநிலைக்கு நகர்ந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இன்னும் 9 நிமிடங்கள் எஞ்சியிருந்ததால் இரு அணிகளுமே கோல் அடித்து வெற்றியை வசப்படுத்திவிடத் துடித்தன. ஆனால், திரில்லிங்கான இந்தக் கட்டத்தில் வலுவான அல்-நாசர் அணி தனது அனுபவத்தைப் பயன்படுத்தி முத்திரை பதித்தது.
பரபரப்பான இறுதிக்கட்டத்தில், அல்-நாசர் அணிக்கு சப்ஸ்டிடியூட் வீரராக உள்ளே வந்த முகமது அல்-ஃபேட்டில் கோல் அடித்து அசத்தினார். ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது அவர் அடித்த கோல் அல்-நாசர் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து அல்-பேட்டின் அணி மீளும் முன்பே, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மேலும் ஒரு கோலையும் அடித்து, 'சௌதி புரோ லீக்கில் யார் மாஸ்' என்று அல்-நாசர் அணி நிரூபித்தது. முகமது மாறன் இந்த கோலை அடித்து அல்-நாசர் அணிக்கு வலுவான முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார்.
இதன்மூலம் அல்-நாசர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல்-பேட்டின் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 19 ஆட்டங்களில் 46 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அல்-இட்டிஹாட் அணியைக் காட்டிலும் அல்-நாசர் 2 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில், கூடுதல் நேரமாக 12 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பலரும் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர், ரொனால்டோ கோல் அடித்த பின்னரே ஆட்டம் முடிவுக்கு வரும் என்று கிண்டலாக பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.

பட மூலாதாரம், Twitter/Logan
அரபு மண்ணில் கால் பதித்த பின்னர், சௌதி ப்ரோ லீக் தொடரில் ரொனால்டோ இதுவரை 8 கோல்களை அடித்துள்ளார்.
முந்தைய ஆட்டங்களில் அசத்திய அவருக்கு நேற்றைய ஆட்டத்தில் கோல் அடிக்காதது ஏமாற்றமே. போட்டியின் முடிவு அவரது அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் ஏதும் எழவில்லை.
சௌதி ப்ரோ லீக்கில், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் அல்-நாசர் அணியும், அல்-இட்டிஹாட் அணியும் வரும் 9-ஆம் தேதி நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அல்-பேட்டின் அணிக்கு எதிராக ஏமாற்றம் தந்த ரொனால்டோ அடுத்த ஆட்டத்தில் மாயாஜாலம் நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












