'முரட்டு உதை' கால்பந்து உலகில் புரட்சி செய்த 'மன்னர்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஃபெர்னாண்டோ டுவார்டே
- பதவி, .
கடைசியாக நான் பெலேவை நேரில் பார்த்தபோது, அவர் மத்திய லண்டனில் உள்ள ஒரு சுரங்கப்பாதை கிளையின் கவுன்டருக்கு பின்னால், சாலட் ஃபில்லிங்ஸை சாண்ட்விச்சில் பொருத்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
அது மார்ச் 2015. பிரேசிலிய கால்பந்து ஜாம்பவானின் வாழ்வின் கடினமான காலகட்டம் அப்போது தொடங்கியிருக்கவில்லை. தனது நாட்டு மக்களால் ‘கிங் பெலே’ என்று அழைக்கப்பட்ட அவருடன் சேர்ந்து அமெரிக்க துரித உணவு நிறுவனம் செய்த ஒரு விளம்பரத்திற்கான செயல் அது.
அதற்கு முன்பே பெலேவும் நானும் பலமுறை சந்தித்திருந்தோம். பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் அவர் என்னைக் கூட்டிச் சென்றபோது, அவருடைய முகத்தில் ஒரு நீண்ட புன்னைகையை ஏற்படுத்துவதற்கு அந்தச் சந்திப்புகள் போதுமானதாக இருந்தது. அவருடன் நேரடியாக ஒரு நேர்காணலை பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்திருந்தது. அவர் 74 வயதில் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது தான், அன்றைய மதிய நேரத்தின் என்னுடைய மகிழ்ச்சிகரமான நினைவு.
“மருத்துவமனை விஷயத்தில் அனைவரையும் கவலைப்படுத்துவிட்டீர்கள், கிங்” என்று நான் அவரிடம் கூறினேன்.
“நான் டிரெஸ் கொரகோஸ்(போர்ச்சுகீசிய மொழியில் மூன்று இதயங்கள்) என்ற ஊரில் பிறந்தேன் என்பதை மறந்துவிட்டீர்களா? ‘மூன்று இதயங்கள்’ உள்ள ஒருவரைச் சாய்ப்பது கடினம்,” என்று அவர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
"அவெஞ்சர்களில் ஒருவரைச் சந்திப்பதைப் போல் இருந்தது"
ஓராண்டுக்கு முன்பு, சூரிச்சில் நடந்த கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவின் விருது வழங்கும் விழாவில் அவர் தோன்றியபோது அவர் மிகவும் பலவீனமாகத் தெரிந்தார். மற்ற பல பிரேசிலிய செய்தியாளர்களைப் போல, அவர் நீண்ட காலம் இருக்கமாட்டார் என்று நானும் உண்மையிலேயே கவலைப்பட்டேன்.
பெலே ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருந்தார். அவரது 21 ஆண்டுகால தொழில்முறை கால்பந்து வாழ்க்கை முழுவதும் எதிரணி வீரர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆட்டங்கள் நிறைந்தது.
நாங்கள் ஒவ்வொரு முறை சந்தித்துக்கொண்ட பிறகும், அந்தச் சந்திப்பில் நடப்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே அடுத்த நாட்களைக் கழித்தேன். நம்மைப் பார்ப்பதில் எப்போதும் மகிழ்ச்சியடையக் கூடிய அவெஞ்சர்களில் ஒருவருக்கு முன்னால் இருப்பதைப் போல் எனக்கு இருந்தது.
பல கால்பந்து ரசிகர்களுக்கும், குறிப்பாக பிரேசிலியர்களுக்கும், எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோவாக பிறந்த இவர் ஒரு சூப்பர் ஹ்யூமன். கால்பந்தை உதைத்தவர்களிலேயே மிகப்பெரிய விளையாட்டு வீரர்.
ஜான் லெனான் ஒருமுறை ராக் அண்ட் ரோலை சக் பெர்ரி என்றழைக்க வேண்டுமெனக் கூறியதைப் போல், கால்பந்துக்கு பெலே எனப் பெயரிட்டிருக்க வேண்டும்.
ஒரு வீரராக மூன்று ஃபிஃபா உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நபர் அவர் தான். 1958இல் உலகக்கோப்பையை முதலில் வென்றபோது, அவருக்கு வயது 17 தான். பிறகு, 12 ஆண்டுகள் கழித்து மெக்சிகோவில் பட்டத்தை வென்ற பிரேசில் அணியிலும் அவர் இருந்தார். இன்று சிறந்த அணிகளுக்கான வாக்கெடுப்பை நடத்தினால்கூட அந்த அணி அதில் வெற்றி பெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அந்தப் போட்டியில் பெலேவின் செயல்திறனுக்கான சிறந்த பாராட்டுகளில் ஒன்று, இறுதிப்போட்டியில் அவரைக் குறிவைத்து ஆடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தற்காப்பு ஆட்டக்ககாரரான இத்தாலியின் டார்சிசியோ பர்க்னிச்சின் பாராட்டு.
“அனைவரையும் போலவே அவரும் தோல், எலும்புகளால் ஆனவர் தான்’ என்று ஆட்டத்திற்கு முன்பு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனால், நான் தவறு செய்துவிட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பிரேசில் தனது மூன்றாவது உலகக்கோப்பையை வென்ற ஆட்டத்தில், பெலே ஒரு கோல் அடித்தார், இரண்டு கோல் வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தார். அந்த கோல், அவர் தனது வாழ்க்கையில் அடித்த 1,200க்கும் மேற்பட்ட கோல்களில் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
தேசத்தின் பொக்கிஷம்
பெலே விளையாட்டையும் மீறிய ஒரு தோற்றத்தைப் பதிய வைத்தார். மறைந்த அமெரிக்க கலைஞரான ஆண்டி வார்ஹோல், புகழின் நிலையற்ற தன்மை குறித்த அவருடைய புகழ்பெற்ற மேற்கோளை திருத்திக்கொள்வதற்கே பெலேவின் புகழ் வழிவகுத்தது.
“எனது கோட்பாட்டிற்கு முரண்பாடான சிலரில் பெலேவும் ஒருவர். 15 நிமிட புகழுக்குப் பதிலாக, அவருடைய புகழ் 15 நூற்றாண்டுகளுக்கு இருக்கும்” என்று வார்ஹோல் கணித்தார்.
நான் 1973இல் பிறப்பதற்கு முன்பே பெலே சர்வதேச விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஆனால், பிரேசிலில் வளர்ந்ததால் அவருடைய சாதனைகளைப் பற்றிய கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பதிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
ஆனால், பிரேசிலை உலகின் மிக வெற்றிகரமான கால்பந்து நாடாக மாற்ற உதவுவதோடு, கறுப்பின மனிதரான பெலே, இன்னும் குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்தார்.
வெட்கக்கேடான அடிமைத்தனமும் பிரிவினை வரலாறும் நீடித்த ஒரு நாட்டின் தேசியப் பொக்கிஷமாக உயர்ந்து, இன்றும் அந்தப் புகழோடு இருக்கிறார்.
அன்றும் சரி இன்றும் சரி, அவர் மிகவும் பிரபலமான பிரேசிலியன். நியூயார்க்கில் இருந்து துணை-சஹாரா ஆப்பிரிக்கா வரை நான் பயணித்த அனைத்து இடங்களிலும், நான் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் கூறிய பிறகு எவரும் முதலில் குறிப்பிடும் பெயர் அவருடையதுதான்.

பட மூலாதாரம், Getty Images
பெலே, நிச்சயமாக விமர்சகர்களையும் கொண்டிருந்தார். 1964, 1985-க்கு இடையில் பிரேசிலை இரும்புக்கரத்துடன் ஆட்சி செய்த ராணுவ ஆட்சிக்கு எதிராக அவர் பேசியிருக்க வேண்டும் என்று நினைத்தவர்களும் இருந்தனர். அந்த ஆட்சியின் தலைவர்கள் தேசிய கால்பந்து அணியின் வெற்றியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் வெட்கப்படவில்லை.
அடக்குமுறைகளுக்கு கண்ணை மூடிக் கொண்டிருந்தது பெலே மட்டுமல்ல. ஆனால், அவர்களில் எவருக்கும் அவருக்கு இருந்த அளவுக்கான கவர்ச்சி மக்களிடையே இருக்கவில்லை.
2021ஆம் ஆண்டு வெளியான நெட்ஃப்லிக்ஸ் ஆவணப்படத்தில் ராணுவ ஆட்சி நடந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் “கால்பந்து வீரர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள்” என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் பெலே கூறினார்.
“[மனித உரிமை மீறல்கள்] குறித்து எனக்குத் தெரியாது என்று நான் சொன்னால், அது பொய். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை.”
பிந்தைய ஆண்டுகளில், ராணுவத்திற்கு எதிராக 1974 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு சர்வதேச ஓய்விலிருந்து திரும்பி வர மறுத்ததாக பெலே கூறுவார்.

பட மூலாதாரம், Getty Images
பெலே விளையாடிய நாட்களிலோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ, பிரேசிலில் இனவெறிக்கு எதிரான முறையான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவில்லை.
2014ஆம் ஆண்டில், பிரேசிலிய சாம்பியன்ஷிப் விளையாட்டில் ஓர் இனவெறி சம்பவத்தை இயல்பாக்கிய பிறகு அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் விளையாடிய நாட்களில், “நான் பங்கேற்ற ஒவ்வொரு விளையாட்டையும் நிறுத்துவதற்கு” போதுமான இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாகக் கூறினார்.
பெலேவின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளால் சூழப்பட்டது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக அவருடைய மகன் எட்சன் கைது செய்யப்பட்டார். 1960களின் முற்பகுதியில் ஒரு நெருக்கமான உறவில் பிறந்த மகள் சாண்ட்ராவை அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார்.
நெட்ஃப்லிக்ஸ் ஆவணப்படத்தில், பெலே “எனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் எனத் தெரியாத அளவுக்குப் பல தொடர்புகள்” இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
1977-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மோசமான முதல் தொழில்முறை கால்பந்து லீக்கில் விளையாடிய பிறகு பெலே கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவர் நிர்வாகத்தின் பக்கமாகச் செல்லவில்லை. மேலும் விளையாட்டின் மீதான அவருடைய ஈடுபாடு பெரும்பாலும் தொலைக்காட்சியில் கருத்து தெரிவிப்பதாக மட்டுமே இருந்தது. 1994ஆம் ஆண்டு பிரேசில் ஆண்கள் பிரிவு அணி உலகக்கோப்பையை வென்றபோது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தின் பத்திரிகை பெட்டியில் ஹெட்செட் அணிந்தபடி அவர் மேலும் கீழும் குதிக்கும் காட்சி, இன்னும் என் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அவர் சோப் ஓபராக்கள், எஸ்கேப் டு விக்டரி போன்ற திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். 1995-98-க்கு இடையில் பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
பெலே எண்ணற்ற தேசிய, சர்வதேச நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துள்ளார். இது சில நேரங்களில் கேலிக்கு வழிவகுத்தது. ஆனால், பின்னோக்கிப் பார்த்தால் அதுவொரு துணிச்சலான நடவடிக்கையாகவும் இருந்தது.
பெலே தேசிய, சர்வதேச ஊடகங்களின் மேற்கோள்களுக்கான ஆதாரமாக இருந்தார். பிரபலமான சக ஊழியர்களை வருத்தப்படுத்தியும்கூட, அவர் தனது வார்த்தைகளை அதிகம் அளவிட்டுப் பேசவில்லை.
பிரேசிலின் உலகக் கோப்பையை வென்ற முன்கள வீரர் ரொமாரியோ ஒருமுறை, “பெலே வாயை மூடிக்கொண்டிருந்தால், அவர் ஒரு கவிஞர்” எனக் கூறினார்.
அவரால் அசாதாரணமான கணிப்புகளையும் கூற முடியும்.
1970களில் ஓர் ஆப்பிரிக்க அணி “21ஆம் நூற்றாண்டுக்கு முன்பு உலகக் கோப்பையை வெல்லும்” என்று கணித்தவர் பெலே. இதை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அரையிறுதியைக் கூட எட்டவில்லை.
1994ஆம் ஆண்டு அர்ஜென்டினாவை வீழ்த்தி தகுதிச்சுற்றில் கொலம்பியா வெற்றி பெற்ற நேரத்தில் அது உலகக்கோப்பையை வெல்லும் என்றும் அவர் தெரிவித்தது பிரபலமானது. ஆனால், அவர்கள் அமெரிக்காவிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்கள்.
பெலேவின் கணிப்புகள் பிரேசில் செய்தியாளர்களிடையே கேலிக்குரியதாக மாறியது.

பட மூலாதாரம், Getty Images
‘விளையாட்டில் எனக்குள்ள வரலாறு, என் மனதிலுள்ளதை வெளிப்படையாகப் பேசும் உரிமையை எனக்குக் கொடுக்கிறது’
2006இல் பெர்லினில் நடந்த மற்றோர் அதிசயமான தருணத்தில், “விளையாட்டில் எனக்குள்ள வரலாறு எனக்கு என் மனதைப் பேசுவதற்கான உரிமையை அளிப்பதாக நான் கருதுகிறேன்,” என்று அவர் என்னிடம் கூறினார். ஒரு சொகுசு ஹோட்டலில் அவர் மற்றும் அவருடைய ஊழியர்களுடன் நான் இங்கிலாந்து, ஈக்வடாருக்கு இடையிலான ரவுண்ட் ஆஃப் 16 சுற்று உலகக்கோப்பை போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அன்று பிற்பகலில், அவர் அனைத்திற்கும் எதிராகவும், டியாகோ மாரடோனா உட்பட அவரது கருத்தை நியாயமற்ற முறையில் விமர்சித்த அனைவருக்கும் எதிராகவும், ஒரு முழு விளக்கத்தைப் பேசினார். அதுவொரு சிறப்பான கட்டுரைக்கு வித்திட்டது. ஆனால், அது வெளியுலகில் வெளியிடப்படவே இல்லை. ஏனெனில், “நீ இங்கே ஒரு நண்பராக வந்திருக்கிறாய், செய்தியாளராக இல்லை” என்று கிங் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கால்பந்து மன்னரை எதிர்ப்பதற்கு நான் யார்? ஆனால், அந்தப் போட்டியின் காலிறுதியில் பிரேசில் பிரான்ஸிடம் தோற்று வெளியேறியபோது, பெலே அளித்த ஒரேயொரு செய்தித்தாள் பேட்டியும் எனக்குத்தான்.
லியோனெல் மெஸ்ஸி கால்பந்து உலகில் வலம் வரத் தொடங்கியதிலிருந்து, உலகின் சிறந்த கால்பந்து வீரராக பெலே வீழ்த்தப்பட்டதாகச் சொல்லிக்கொள்ள பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், பிரேசிலிய ஜாம்பவானின் பார்வையில் அப்படியில்லை.
“என்னால் ஹெட்டர்களை அடிக்க முடியும், இரண்டு கால்களாலும் பந்தைக் கையாள முடியும். மெஸ்ஸி இடதுபுறத்தையே அதிகம் பயன்படுத்த முனைகிறார். அதோடு அவர் ஆயிரம் கோல்களை அடித்தாக வேண்டும்,” என்று என்னிடம் பெலே லண்டனில் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












