கார் விபத்து: கண்ணாடியை உடைத்து வெளியே வந்த ரிஷப் பந்த்

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையில் நடுவே இருந்த தடுப்பில் மோதி தீப்பிடித்து விபத்துக்கு உள்ளானது. காயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லியில் இருந்து உத்தராகண்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு அவர் காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹரித்வார் மாவட்டத்தில் மங்களூர் மற்றும் நர்சன் இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. ஊடகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மங்களூர் PS பகுதியின் NH-58 இல் விபத்து நடந்தது என எஸ்பி தேஹத் ஸ்வபன் கிஷோர் கூறியுள்ளார்.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யவும், தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஏ.என்.ஐ. ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ரிஷப் பந்தின் காயம் குறித்து டெஹ்ராடூன் மேஸ் மருத்துவமனையின் மருத்துவர் ஆஷிஷ் யாக்நிக் கூறுகையில், "ரிஷப் நிலைமை சீராக உள்ளது. எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட டாக்டர்கள் குழு அவரது காயத்தை பரிசோதித்து வருகிறது. பரிசோதனை விரைவில் முடிவடையும். அதன்பிறகுதான் அடுத்தகட்ட சிகிச்சை என்னவாக இருக்கும் என்பது தெரியவரும். அது குறித்து மருத்துவ புல்லட்டின் மூலம் தெரிவிக்கப்படும்." என்றார்.
25 வயதாகும் ரிஷப் பந்த், இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இலங்கை அணி 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை.
கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த பந்த்
ஹரித்வார் எஸ்.எஸ்.பி. அஜய் சிங் பிபிசியிடம் இது குறித்து கூறுகையில், “காலையில், 5.30 முதல் 6 மணிக்குள் விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் நடுவில் உள்ள தடுப்பு மீது அவர் கார் மோதியுள்ளது. முகப்பு கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்துள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று தெரிவித்தார். மேலும், “மருத்துவரிடம் பேசியபோது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தெரிவித்தனர். உள்காயம் எதுவும் இல்லை. காலிலும் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவை எக்ஸ்.ரே அறிக்கை வந்ததும் தெரியவரும்” என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
இதனிடையே, விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்த் விரைந்து குணமடைய வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் மேட்ஸ்பேன் விவிஎஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்துக்காக பிரார்த்தனை செய்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.
அவர் விரைந்து குணமடைய வாழ்த்துகள். விரைந்து நலம் பெறுங்கள் சாம்பியன்` என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பந்து விரைந்து நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ரிஷப் பந்த் குறித்து நான் கேள்விப்பட்ட செய்திகள் சரியானதுதானா? அவர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று இந்திய அணியின் மற்றொரு முன்னாள் வீரரான முனாஃப் பட்டேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான சாம் பில்லிங்க்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், `ரிஷப் நலமாக இருக்கிறார் என நம்புகிறேன்` என்று பதிவிட்டுள்ளார்.
பிசிசிஐ கூறுவது என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள ஊடக குறிப்பில், “இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே வெள்ளிக்கிழமை காலை விபத்தில் சிக்கினார். சக்ஷாம் மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் ட்ராமா சென்டரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
வலது முழங்காலில் ஒரு தசைநார் கிழிந்துள்ளது மற்றும் அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரல் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரிஷப்பின் நிலை சீராக உள்ளது, அவர் இப்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் மூலம் மேல் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.
தற்போது ரிஷாப்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் மருத்துவக் குழு நெருங்கிய தொடர்பில் இருக்கும் நிலையில், ரிஷப்பின் குடும்பத்தினருடன் பிசிசிஐ தொடர்ந்து தொடர்பில் உள்ளது. ரிஷப் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதையும், இந்த அதிர்ச்சிகரமான கட்டத்தில் இருந்து வெளிவரத் தேவையான அனைத்து ஆதரவையும் பெறுவதையும் வாரியம் பார்த்துக் கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












