டிரம்ப் ஆவணப்பட சர்ச்சை: பிபிசி இயக்குநர் ஜெனரல், செய்தி பிரிவு சிஇஓ ராஜிநாமா

- எழுதியவர், அலெக்ஸ் ஃபிலிப்ஸ்
- எழுதியவர், ஹெலென் புஷ்பி
- பதவி, கலாசார செய்தியாளர்
பிபிசி பனோரமா ஆவணப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜிநாமா செய்திருக்கின்றனர்.
தொடர் சர்ச்சைகளும் பாரபட்சமாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் பிபிசியை பின்தொடர, ஐந்து ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த டிம் டேவி நெருக்கடியை சந்தித்து வந்தார்.
2021-ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் நடந்த கேபிடல் ஹில் கலவரங்களைத் தூண்டும் விதமாக டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பேசியதாகத் தோன்றும் வகையில், அவரது உரையின் இரு பகுதிகள் எடிட் செய்யப்பட்டு பனோரமா நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டதாகக் கசிந்த பிபிசியின் உள் குறிப்பு (internal BBC memo) அடிப்படையில் 'தி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்த ராஜிநாமாக்கள் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும் என பிரிட்டன் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் டிரம்ப் இதனை வரவேற்றிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இயக்குநர் ஜெனரல் மற்றும் செய்திப் பிரிவு சிஇஓ ஆகிய இருவரும் ஒரே நாளில் ராஜிநாமா செய்திருப்பது இதுவரையிலும் நடந்திராத ஒன்று.
ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த முடிவை அறிவித்த டேவி "எல்லா பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே பிபிசியும் பூரணத்துவம் கொண்டது அல்ல. நாம் எப்போதும் திறந்த மனப்பான்மையுடன், வெளிப்படையாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும்" என்றார்.
"இது மட்டுமே இந்த முடிவுக்குக் காரணம் இல்லையென்றாலும், பிபிசி செய்திகளைச் சுற்றி நடக்கும் விவாதங்கள் இதற்கு வித்திட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பிபிசி நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே சில தவறுகள் நடந்திருக்கின்றன. அதற்கு இயக்குநர் ஜெனரலாக நானே பொறுப்பேற்க வேண்டும்" என்றும் டேவி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அறிக்கை வெளியிட்ட டர்னஸ், பனோரமா சர்ச்சை பிபிசியின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் நிலையை அடைந்துவிட்டதாகக் கூறினார். "இதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன். இந்தப் பழி என்னுடனேயே முடிவுக்கு வர வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
"பொது வாழ்க்கையில் தலைவர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ளவேண்டும். அதனால் தான் நான் ராஜிநாமா செய்கிறேன். சில தவறுகள் நடந்திருக்கின்றன என்றாலும், பிபிசி நியூஸ் ஒரு சார்புடையதாக செயல்படுகிறது என்கின்ற குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று டர்னஸ் கூறினார்.
டர்னஸ் மூன்று ஆண்டுகளாக செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் (News and Current Affairs) பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பணியாற்றி வந்தார்.
இஸ்ரேல் - காஸா போர் குறித்து பிபிசி அரபிக் வெளியிட்ட செய்திகளில் காணப்படும் 'கட்டமைப்பு சார்ந்த பாரபட்சம்' (systemic problems of bias) குறித்த பிரச்னைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கை இல்லாதது குறித்து டெலிகிராப் வெளியிட்ட அந்த பிபிசி உள் குறிப்பு கவலை தெரிவிக்கிறது.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் பேசிய டிரம்ப், "நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்; நமது செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தப் போகிறோம்." என்றார்.
ஆனால், பனோரமா ஆவணப்படத்தில் அவர் கூறியதாக காட்டப்பட்ட உரையில், "நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்... நான் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். நாம் கடுமையாக போராடுவோம்." என்றிருக்கிறது.
சுமார் 50 நிமிட இடைவெளியில் பேசப்பட்ட இரண்டு விஷயங்கள் எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டு அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அந்த பிபிசி உள் குறிப்பு கசிந்தது பிபிசிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழச் செய்தது. அதில் வெள்ளை மாளிகையும் இணைந்தது. "பிபிசியை 100% போலி செய்தி" என்று அது கூறியது.
இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை பேசிய டிரம்ப், "ஜனவரி 6-ஆம் தேதி, நான் பேசிய அந்த சிறப்பான (சரியான!) பேச்சை ஜோடித்து மாட்டிக் கொண்டதால் பிபிசி-யின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது ராஜிநாமா செய்கிறார்கள் அல்லது வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று கூறினார்.

பட மூலாதாரம், BBC/Jeff Overs
பிபிசி தலைவர் சமீர் ஷா திங்கள்கிழமை நாடாளுமன்றக் குழுவிற்கு வழங்கவுள்ள அறிக்கைக்கு முன்பாக இந்த ராஜிநாமா அறிவிப்புகள் வந்துள்ளன. அந்த அறிக்கையில், டிரம்பின் உரை தொகுக்கப்பட்ட விதத்திற்காக சமீர் ஷா மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ராஜிநாமாக்கள் குறித்து கருத்து தெரிவித்த சமீர் ஷா, இது 'பிபிசிக்கு ஒரு துயரமான நாள்' எனக் குறிப்பிட்டார்.
மேலும், "டேவி தனது பணிக்காலம் முழுவதும் என்னிடமிருந்தும் [பிபிசி] நிர்வாகக் குழுவிடமிருந்தும் முழு ஆதரவைப் பெற்றிருந்தார். இருந்தாலும் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அவர் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளானதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுதான் அவரை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவும் அவருடைய முடிவையும் அதற்கான காரணங்களையும் மதிக்கிறது " என்றும் அவர் தெரிவித்தார்.
கசிந்த அந்தக் குறிப்பானது, பிபிசி-யின் ஆசிரியர் தரநிலைக் குழுவின் முன்னாள் சுயாதீன வெளிப்புற ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அவர் கடந்த ஜூன் மாதம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.
அந்தக் குறிப்பில், திருநர்கள் (trans) தொடர்பான பிபிசியின் செய்தி வெளியீடு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். பிபிசியின் சிறப்பு எல்ஜிபிடி (LGBT) செய்தியாளர்கள், 'திருநர் ஆதரவு போக்கை' முன்னெடுத்து, அதற்கேற்ப செய்திகளை தணிக்கை செய்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கசிந்த அந்தக் குறிப்பில், பிரச்னைகள் வெளிச்சத்துக்கு வந்தபோது பிபிசி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து தாம் விரக்தி அடைந்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த ஆண்டில் பிபிசி செய்தி சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் "கர்ப்பிணிகளை" என்று குறிப்பிடும் ஒரு ஸ்கிரிப்டை தொகுப்பாளர் மார்ட்டின் க்ரோக்ஸல் மாற்றியமைத்த விதம் தொடர்பாக வந்த 20 புகார்களை வியாழக்கிழமை பிபிசி ஏற்றுக் கொண்டது.
அதுமட்டுமல்லாமல் காஸா பற்றிய ஆவணப்படத்திற்கு குரல் கொடுத்தவர் ஒரு ஹமாஸ் அதிகாரியின் மகன் என்பதை வெளிப்படுத்தாததால் பிபிசி நிறுவனம் சமீபமாக விமர்சனங்களை சந்தித்தது.
பங்க் இசை ஜோடி பாப் விலன் "இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) மரணம், மரணம்" எனக் கோஷமிட்ட கிளாஸ்டன்பரி நிகழ்ச்சியை பிபிசி ஒளிபரப்பியதும், 'தீங்கு விளைவித்தல் மற்றும் குற்றம்' குறித்த பிபிசியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுகளுக்கான எம்.பி.க்கள் குழு தலைவரான டேம் கரோலைன் டைனேஜ், "தொடர்ச்சியான நெருக்கடிகள் மற்றும் தவறான நடவடிக்கைகள் காரணமாக பிபிசி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

பட மூலாதாரம், Jeff Overs / BBC
இந்த சர்ச்சையை பிபிசி கையாண்ட விதத்தை சில பத்திரிகை வர்ணனையாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
பிபிசி டிவி நியூஸ் முன்னாள் தலைவரான ரோஜர் மோஸி, பிபிசி சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு தாமதமாக பதிலளித்துள்ளது என்று கூறினார்.
டிரம்பின் உரைத் தொகுப்பு பிரச்னையில் தற்காப்புக்கு சாத்தியமில்லாதது போல் தோன்றுகிறது என்று பிபிசி நியூஸிடம் அவர் தெரிவித்தார். அந்த உள் குறிப்பில் குறிப்பிடப்பட்ட 'திருநர் தொடர்பான மொழி பயன்பாடு' போன்ற பிற பிரச்னைகளில், பிபிசி தனது கொள்கைகளை காலத்திற்கேற்ப மறுவடிவமைத்து, சீரமைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.
சேனல் 4 நியூஸின் முன்னாள் தலைவரான டாரதி பைர்ன், டிரம்பின் பேச்சை தொகுத்ததில் நடந்த அடிப்படை தவறுக்கு மட்டும் பிபிசி-யை விமர்சிக்கவில்லை. மன்னிப்புக் கேட்பதற்கு அதீத அவகாசம் எடுத்துக்கொண்டதற்காகவும் பிபிசி-யை அவர் விமர்சித்தார்.
இந்நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றிய டேவி, "எமது செய்தி வெளியிடும் பாங்கும், தரமான உள்ளடக்கமும் தங்கத் தரத்தில் (gold standard) இருப்பதாக போற்றப்படுகிறது" என்றும், நிறுவனம் "மிகவும் கருணையுள்ள, பொறுமையான மற்றும் ஆர்வமுள்ள" அமைப்பாக உள்ளது என்றும் கூறினார்.
எதிர்வரும் மாதங்களில் அடுத்தபடியாக பதவிக்கு வரும் நபருக்கு முறையான மாற்றத்துடன் தனது பதவி விலகல் இருக்கும் என்று அவர் கூறினார். இது அடுத்து வரும் இயக்குநர் ஜெனரல் அடுத்தக்கட்ட ராயல் சார்ட்டரை நேர்மறையாக வடிவமைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராயல் சார்ட்டர் என்பது பிபிசியின் நிதியியல் மற்றும் ஒழுங்குமுறை பொறுப்புகளை நிர்ணயிக்கிறது. இது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக்கொள்ளப்படுகிறது. தற்போதைய ராயல் சார்ட்டர் 2027 இறுதியில் காலாவதியாகும் முன், புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
டேவிக்கு நன்றி தெரிவித்த கலாசார செயலாளர் லிசா நாண்டி, பெரும் மாற்றங்கள் நடந்த காலகட்டத்தில் பிபிசியை வழிநடத்தியவர் டேவி என்று கூறினார்.
"பிபிசி எங்கள் மிக முக்கியமான தேசிய நிறுவனங்களில் ஒன்றாகும்... இப்போது, இதுவரை எப்போதுமில்லாத அளவில், நம்பகமான செய்திகளும் உயர்தர நிகழ்ச்சிகளும் நமது ஜனநாயக மற்றும் கலாசார வாழ்க்கைக்கும், உலகில் நம் நிலைக்கும் அத்தியாவசியம் ஆகியுள்ளன" என்றும் அவர் கூறினார்.
ராயல் சார்ட்டர் மதிப்பாய்வை "பிபிசி இந்த புதிய காலத்துக்கு தன்னைச் சீரமைத்துக் கொள்ள உதவும் ஒரு வினையூக்கியாக (catalyst)" மாற்றுவதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், BBC/Patrick Olner
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சித் தலைவரான கெமி பாடெனாக், டேவியும் டர்னஸும் பதவி விலகியது சரியான முடிவு தான் என்றார். ஆனால், "இதற்கு பின்னால் இரண்டு ராஜிநாமாக்கள் மூலம் துடைக்க முடியாத மிக ஆழமான தோல்விகளின் பட்டியல் இருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
பிபிசியால் தனது நடுநிலைத்தன்மையை நிரூபிக்க முடியாவிட்டால், கட்டாய உரிமக் கட்டணம் (compulsory licence fee) மூலம் பொதுமக்கள் தொடர்ந்து அதற்கு நிதியளிப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் பாடெனாக் தெரிவித்தார்.
லிபரல் ஜனநாயகக் (Liberal Democrat) கட்சித் தலைவரான சர் எட் டேவி, இந்த ராஜிநாமாக்கள் பிபிசி புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், "பிபிசி பூரணத்துவம் கொண்டது அல்ல. ஆனால் பிரிட்டிஷ் விழுமியங்களுக்கும், டிரம்ப்-பாணியில் ஜனரஞ்சகமாக நம் அரசியலை கையகப்படுத்துவதற்கும் குறுக்கே நிற்கும் சில நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது" என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனில் சீர்திருத்தக் கட்சியின் தலைவர் நிகல் ஃபராஜ், "இந்த ராஜிநாமாக்கள் மொத்த மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்க வேண்டும்" என்று கூறினார். "நிறுவனங்களையும் அவற்றின் கலாசாரத்தையும் மாற்றியமைத்த வரலாறு கொண்ட ஒரு தலைவரை நியமிக்க வேண்டும்" என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
பிபிசி நிர்வாகக் குழுவே அதன் சாசனத்தின் கீழ் ஒரு இயக்குநர் ஜெனரலை நியமிப்பதற்கு பொறுப்பானதாகும்.
2020-ஆம் ஆண்டில் லார்ட் ஹாலுக்குப் பதிலாக பிபிசியின் 17வது இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, டிம் டேவி பிபிசி ஸ்டுடியோஸின் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு பெப்சி மற்றும் ப்ராக்டர் & கேம்பிள் ஆகிய நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு நிர்வாகியாக இருந்தார்.
டர்னஸ் இதற்கு முன்பு ஐடிஎன் மற்றும் என்பிசி நியூஸ் இன்டர்நேஷனல் ஆகிய செய்தி நிறுவனங்களை தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.
2012-இல் ஜார்ஜ் என்ட்விஸ்டல் உட்பட பிபிசி நிறுவனத்தில் முந்தைய இயக்குநர் ஜெனரல்கள் சிலரும் ராஜிநாமா செய்துள்ளனர்.
தற்போது டிம்ப் டேவி மற்றும் டர்னஸூக்குப் பதிலாக யார் அந்த பதவிகளுக்கு வந்தாலும், தொடர்ச்சியான விமர்சன செய்தி அறிக்கைகளை நேரடியாகக் கையாள வேண்டியிருக்கும்.
பிபிசியின் இயக்குநர் ஜெனரல் "சூப்பர் மனிதனாக" இருக்க வேண்டியுள்ளதாக மோஸி கூறினார். அதனை கார்பரேட் மற்றும் எடிட்டோரியல் பணிகள் என தனித்தனியாக பிரிப்பது குறித்து நிறுவனம் பரிசீலிக்க வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












