நடிகை வழக்கில் சீமான் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? இன்றைய முக்கிய செய்திகள்

சீமான், இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், @NaamTamilarOrg

22/02/2025 அன்று தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

பாலியல் வன்கொடுமை புகாா் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது பிரபல நடிகை ஒருவர் 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தாா். வளசரவாக்கம் போலீஸாா் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2011-இல் அளித்த புகாரை, 2012- ஆம் ஆண்டிலேயே அந்த நடிகை திரும்பப் பெற்றுக் கொண்டாா் என்று குறிப்பிட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சீமான் அளித்த மனு மீதான வழக்கு கடந்த திங்கள்கிழமை நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், நடிகை தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில் அவா், 'பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது' என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தற்போது வழக்கின் தீா்ப்பு முழுமையாக வெளியாகியுள்ளது. அதில், மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. பாதிக்கப்பட்ட நடிகை கொடுத்த வாக்குமூலம் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த பொழுது அந்த நடிகைக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை.

திரைத்துறை தொடா்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளாா். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் அந்த நடிகை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். எனவே இந்த வழக்கைப் பொருத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது" என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்க மாநில அரசு அனுமதி தேவை இல்லை - மத்திய அரசு

புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு மாநில அரசுகளிடம் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்திருப்பதாக தினத் தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்வி வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசுகளிடம் இருந்து பெறக்கூடிய தடையில்லா சான்றிதழ்கள் தொடர்பான விதிமுறைகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு மாநில அரசுகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட நிதியை பெறுவதில் தமிழக அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடி வரும் இந்த சூழலில், தடையில்லா சான்றிதழ் வழங்கும் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு செய்திகள், தமிழக செய்திகள், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடு முழுவதும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது

முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பா? தெற்கு ரயில்வே விளக்கம்

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவை ஆதாரமற்றவை என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.

விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பயனடையும் வகையில் பிப்ரவரி மாதம் முதலே பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே சாா்பில் திட்டமிடப்பட்டது.

ஆனால், அதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் தற்போது மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், மகா கும்பமேளா பிப். 26-ஆம் தேதியுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து மாா்ச் மாதம் முதல் இந்தப் பெட்டிகள் தெற்கு ரயில்வே சாா்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படும்," என்று கூறப்பட்டுள்ளதாக தினமணியின் செய்தி தெரிவிக்கிறது.

தமிழ் நாடு செய்திகள், தமிழக செய்திகள், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெற்கு ரயில்வே

கிருஷ்ணகிரி மலையில் பெண்​ கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது

கிருஷ்ணகிரி மலையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தப்பியோட முயன்ற ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும், மேலும், ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின்படி, "கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மலையில் கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மது போதையில் அமர்ந்திருந்த 4 இளைஞர்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், நகை, பணத்தையும் பறித்துள்ளனர்.

மலையில் இருந்து கீழே இறங்கி வந்த ஆண் மற்றும் பெண் மிகவும் சோர்வாக அழுதபடி வந்தததை, கண்ட அங்கிருந்தவர்கள் விசாரித்த போது, மலையில் நடந்த சம்பவத்தை கூறினர். மேலும்,போலீஸில் புகார் அளிக்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை, தனிப்படை அமைத்து முழுமையாக விசாரணை நடத்தஉத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தனிப்படை போலீஸார் கலையரசன், அபிஷேக் ஆகிய இருவரும் மறுநாள் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை பொன்மலைக்குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

அவர்களைப் பிடிக்க முயன்ற போது போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். இதனால், வேறு வழியின்றி, சுரேசின் வலது முட்டியில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தப்பியோடிய நாராயணன் கீழே விழுந்ததில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது."

கத்திக்குத்தில் காயம் அடைந்த போலீஸார் குமார், விஜயகுமார் மற்றும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிவு ஏற்பட்ட நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு செய்திகள், தமிழக செய்திகள், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தப்பியோட முயன்ற ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும், மேலும், ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

புதிய அரசியலமைப்பு வரைவு விவகாரம் - இலங்கைத் தமிழரசுக்கட்சி பதில்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையில் அதுபற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதவில்லை என்று இலங்கைத் தமிழரசுக்கட்சி தெரிவித்திருப்பதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் ஓரங்கமாக, 'புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான கடிதமொன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கடந்த ஜனவரி மாத நடுப்பகுதியில் கையளிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி சி.வி.கே.சிவஞானத்தினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், "புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்காத நிலையிலும் நாம் அரசியலமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது. எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்திவரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அரசாங்கம் அதன் அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்கவேண்டும் என வலியுறுத்திக் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. உரிய நேரம் வரும்போது நாம் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக வீரகேசரி நாளிதழ் செய்தி கூறுகிறது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)