'எங்க வீட்டுல யாரும் தண்ணி கூட குடிக்க மாட்டாங்க' – எய்ட்ஸ் நோய் பற்றிய அறியாமையால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்

எய்ட்ஸ் நோயால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதித்த நபரின் குடும்பம் சமூக புறக்கணிப்புக்கு ஆளாகி வருகிறது.

சாத்தூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கவனக்குறைவால் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்குச் செலுத்தப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியானதால் தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியாமல் ரத்த தானம் செய்த இளைஞர் அவமானத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஆனால், எச்.ஐ.வி நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றியே அவர் உயிர் இழந்ததாக கூறி அந்த இளைஞரின் குடும்பத்தினரை இரண்டு ஆண்டுகள் கிராம மக்கள் ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.

திருவிழாக்கள், சமூக நிகழ்வுகள், ரேஷன் கடையிலும் ஆகியவற்றிலிருந்து அவர்களை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், அவர்களோடு யாரும் உணவு தண்ணீர் கூடப் புழங்குவதில்லை என்கின்றனர் அந்தக் குடும்பத்தார்.

என்ன நடந்தது இந்த விஷயத்தில்?

அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதை

கடந்த 2018-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவால் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞரின் ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்குஅந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டு பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த புது கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞர் ரத்த தானம் செய்யும் போது அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டது அவருக்கே தெரியாது. எனவே இந்த சம்பவம் அவருக்கே அதிர்ச்சியாக இருந்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞரின் பெயர் மற்றும் அடையாளங்களுடன் ஊடகங்களில் செய்தி வெளியிட்டதால் அவமானத்தில், இளைஞர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

எய்ட்ஸ் நோயால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்

வெளிநாடு போக இருந்தவனுக்கு இப்படியா நடக்கணும்'

மகனை இழந்ததோடு முடியவில்லை அந்தk குடும்பத்தின் அவலங்கள்.

தற்போது வரை, அவரது குடும்பம் கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு, திருவிழா, சுப காரியம், மற்றும் துக்க நிகழ்வுகளில் சேர்த்து கொள்ளப்படுவதில்லை. அவரது வீட்டிலிருந்து கிராமத்தினர் யாரும் தண்ணீர், உணவு வாங்கி சாப்பிடுவது இல்லை.

வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது தான் தனக்கு எச்.ஐ.வி இருந்ததே இளைஞருக்கு தெரிய வந்தது என்றும், ரத்தம் தானம் செய்யும் போது அவருக்கு தெரியாது என்றும் பிபிசியிடம் கூறினார் அந்த இளைஞரின் அண்ணன்.

பிபிசி தமிழிடம் பேசிய இளைஞரின் சித்தி மகன், “என் தம்பி மனைவி கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு பிரசவத்தின் போது ரத்தம் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து எனது தம்பி சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.

"இதனிடையே தம்பிக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் வெளிநாடு செல்ல மதுரையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். பரிசோதனை முடிவில் அவனுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரிய வந்தது.

"அதிர்ச்சி அடைந்த அவன் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாகவும், தனது ரத்தத்தை யாருக்கும் செலுத்தி விட வேண்டாம் என்றும் கூறினார். ஆனால், மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது, தம்பியின் ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணி பெண் ஒருவருக்கு செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தனர்,” என்றார்.

இதையடுத்து அந்த இளைஞரும் அவரது அண்ணனும் விருதுநகர் சுகாதாரத்துறை அலுவலகத்தில் விவரங்களை தெரிவித்தனர். இதனிடையே ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவர் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்ததால், இளைஞரின் பெயர் மற்றும் அவரது அடையாளங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.

“தனது அடையாளம் வெளியே தெரிந்த காரணத்தினால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த தம்பி என்னை தொடர்பு கொண்டு தற்கொலை செய்ய போவதாக கூறி விட்டு தற்கொலை செய்து கொண்டான்,” என்கிறார் அவர்.

எச்.ஐ.வி நோய் தொற்றால் இளைஞர் உயிரிழந்ததாகக் கருதிய புதுக்கிராமம் மக்கள் அவரது உடலை ஊருக்குள் கொண்டு வர அனுமதிக்காமல் ஊரை விட்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் வைத்து தகனம் செய்யும்மாறு வலியுறுத்தினர்.

“அவனது உடல் எரியூட்டும் போது வரும் புகையால் எச்.ஐ.வி தொற்று பரவி விடும் என கிராம மக்கள் அனைவரும் வீடுகளில் கதவுகளை அடைத்துக் கொண்டனர். அவன் இறந்தது முதல் அவனது குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது,” என்றார் அவரது அண்ணன்.

எய்ட்ஸ் நோயால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்
படக்குறிப்பு, தன் மகனுக்கு இந்த நோய் எப்படி வந்தது என இதுவரை தெரியவில்லை என்கிறார் இறந்த இளைஞரின் தாய்

பல ஆண்டுகளாகவே ரத்த தானம் செய்த இளைஞர்

“என் மகனுக்கு இந்த நோய் எப்படி வந்தது என இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. என் மகன் இறந்து இரண்டு ஆண்டுகள் கிராமத்தில் எங்களை சேர்க்கவில்லை, கிராம மக்கள் யாரும் எங்களிடம் தண்ணீர், சாப்பாடு வாங்கி சாப்பிடுவது இல்லை,” என்கிறார் இளைஞரின் தாய்.

இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “எனக்கு மூன்று மகன்கள். அதில் மூத்த மகன் தான் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து விட்டான். சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பட்டாசு தயாரிக்கும் வேலை செய்து வந்தான்.

"கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ரத்த தானம் செய்து வந்தான். ஆனால் அவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்தது பற்றி யாரும் அவனிடம் தெரிவிக்கவில்லை. என் மகன் ரத்தத்தை சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி க்கு வழங்கியது தெரிய வந்ததில் இருந்து மன வேதனை அடைந்து அவன் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தான்.

"மன உளைச்சலில் இருந்த அவன் தன் உயிரை மாய்த்துக்கொண்டான்,” என்று அவரது தாய் கூறினார்.

மேலும் பேசிய அவர், “எச்.ஐ.வி தொற்றுடன் என் மகன் உயிரிழந்ததால், எங்களுக்கும் அந்த தொற்று உள்ளது என்ற அச்சத்தில் நான் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரிசையில் நின்றால் எங்க ஊர் மக்கள் தள்ளி நிற்பார்கள். இதனால் நான் ஊர் மக்கள் பொருட்கள் வாங்கிய பிறகு காத்திருந்து கடைசியாக பொருட்களை வாங்கி கொள்வேன்,” என்கிறார்.

"ஒரு சில நேரங்களில் நான் அங்கு நிற்கக் கூடாது என்பதற்காக பொருட்களை முதலில் கொடுத்து அனுப்பி விடுவார்கள். எங்கள் ஊரில் நடக்கும் எந்த நல்லது கெட்டது எந்த நிகழ்ச்சிக்கும் எங்களை அழைப்பதில்லை.” என்று வேதனை தெரிவித்தார்.

நூறு நாள் வேலையை நம்பியே தானும் தனது குடும்பமும் வாழ்ந்து வருகிறதாகவும், அவ்வப்போது விவசாய பணிக்கு செல்வதாகவும் அவரது தாய் தெரிவித்தார். அப்போதும் கூட உடன் வேலை செய்யும் சக பெண்கள் தன்னிடம் பேச மாட்டார்கள் என்றார்.

“அங்குள்ள குடத்தில் இருக்கும் தண்ணீரை நான் எடுத்து குடித்தால் அந்த தண்ணீரை வேறு பெண்கள் யாரும் குடிக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் இது போன்று நடந்தது. அதன்பிறகு காட்டு வேலைக்கு சென்றால் நான் வீட்டிலிருந்து பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்வேன்.

"உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை தவிர்த்தார்கள். வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். ஊரில் நடக்கும் அன்னதான நிகழ்ச்சிக்கு எங்களை யாரும் அழைக்க மாட்டார்கள்,” என்றார் அவரது தாய்.

தனது மூத்த மகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி சக மாணவர்கள் புறக்கணித்ததால் எனது இரண்டாவது மகன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேறு ஊரில் வேலை சென்று விட்டதாகவும் அவரது தாய் கூறுகிறார்.

“என் மகன் எச்.ஐ.வி நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கவில்லை. சமூகம் அவனை குற்றவாளியாக பாவித்து தொடர்ச்சியாக அவமானப்படுத்தியதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டான் எனவே என் மகன் இழப்பிற்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும்,” அவரது தாய் கண்ணீருடன் கேட்டுக் கொண்டார்.

மாவட்ட நிர்வாகம் உதவி கரம் நீட்ட தயார்

எய்ட்ஸ் நோயால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பம்
படக்குறிப்பு, எய்ட்ஸ் நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், எச்.ஐ.வி நோய் குறித்த விழிப்புணர்வு அந்த மக்களுக்கும் அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலும் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

"இப்போது கிராம மக்கள் அவர்களை நிகழ்வுகளில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர், அவர்களுடன் இயல்பாகப் பழகி வருகின்றனர். இருப்பினும் அந்த இளைஞரின் குடும்பத்தினருடன் கிராம மக்கள் நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். இளைஞர் உயிரிழந்த நீண்ட நாட்களானதால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்தக் குடும்பத்துக்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குவோம்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)