மௌனா லோவா எரிமலை: உலகின் மிக பெரிய எரிமலைக்குள்ளே நடப்பது என்ன?
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா எரிமலை 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்து, நெருப்பு குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
எரிமலைக்கு கீழே லாவா குழம்பு 1,000சி தட்பவெப்பத்தில் வெளியேறி வருகிறது. உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கு இது இன்னும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
எவ்வளவு பெரிய எரிமலை?
மௌனா லோவா என்றால் ஹவாய் மொழியில் ‘நீளமான மலை’ என்று பொருள். உலகின் மிகப்பெரிய உயிரோட்டத்துடன் இருக்கும் எரிமலை இதுவாகும்.
அமெரிக்காவின் மேற்கே பசுபிக் பெருங்கடலை ஒட்டி ஹவாய் தீவில் மௌனா லோவா எரிமலை அமைந்துள்ளது.
ஹவாய் பெரிய தீவை உருவாக்கும் ஐந்து எரிமலை தொடர்களில் இது 2,035 சதுர மைல்கள் (5,271 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடையது.
இந்த ஒரு எரிமலை மட்டுமே இந்த தீவின் பாதியை ஆக்கிரமித்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 13,680 அடி உயரத்தில் மௌனா லோவாவின் உச்சி அமைந்துள்ளது. ஆனால், அதன் அடிப்பகுதி கடல் தளத்திலே உள்ளது.
அந்த கடல் தளத்தில் இருந்து எரிமலை உச்சி வரை 30,085 அடி (9,170 மீட்டர்) இருப்பதால் எவரஸ்ட் சிகரத்தை விட இது உயரமுடையதாகும்.

மௌனா லோவா எரிமலையின் சீற்றம் ஏன்?
மாக்மா எனப்படுகின்ற மிகவும் சூடான பொருளின் குப்பையும், வாயுவும் மௌனா லோவுவிலும், அருகிலுள்ள எரிமலைகளுக்கு அடியிலும் பூமியின் ஆழமான மிக சூடான பகுதியில் இருந்து பரவி வருகிறது.
போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணர் டாக்டர் கார்மென் சோலானா கூறுகையில், "இந்த சூடான பகுதி ஏன் இருக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் இது பூமியின் மேலடுக்கில் உள்ள கதிரியக்கப் பொருட்களின் சிதைவால் ஏற்படக்கூடும்” என்கிறார்.
"இந்த மாக்மாவின் குப்பையும், வாயுவும் ஹவாயிலுள்ள எல்லா தீவுகளையும் உருவாக்கின." மௌனா லோவா வெடித்தபோது, எரிமலையின் உச்சியில் உள்ள கிண்ண வடிவமான எரிமலை பள்ளமான கால்டெராவில் மாக்மா முதலில் நிரம்புகிறது என்கிறார் டாக்டர் சோலானா. இது 6 சதுர மைல்கள் (15 சதுர கிமீ) பரப்பளவையும், 600 அடி (180 மீ) ஆழமும் கொண்டது.

எரிமலை எவ்வாறு வெடிக்கிறது?
"பிளவுகள்" அல்லது எரிமலையின் பக்கத்திலுள்ள பாறை பிளவுகளில் இருந்து நீரூற்றுகளில் மாக்மா வெளியே வருகிறது. இந்த நீரூற்றுகளில் சில 40மீ உயரம் உடைவை.
1,000C வெப்பநிலை கொண்ட திரவ எரிமலைக் குழம்பாக இது மலைப்பகுதியில் பாய்கிறது.
எரிமலைக் குழம்பு காற்றில் செலுத்தப்படுகிறது, அவற்றில் சில பீலே தெய்வத்தின் முடி என கூறப்படுவதை போல மெல்லிய கண்ணாடி இழைகளாக நீண்டுள்ளன.
"ஹவாயில் வசிப்பதாகக் கூறப்படும் தெய்வத்தின் பெயர் பீலே, மேலும் இந்த மெல்லிதழ்கள் பழுப்பு-தங்க நிறத்தில் உள்ளன" என்று டாக்டர் சோலானா கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மெலானா லோவாவின் வெடிப்பின் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
1843 ஆம் ஆண்டு முதல்முறை பதிவானது முதல் மெலானா லோவா 33 முறை வெடித்திருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், கடைசி எரிமலை வெடிப்பு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் மாக்மா குழம்பு நிரம்பி வரும் சில அறிகுறிகள் இருந்தன, ஆனால், இதுவரை வெடிப்பு நிகழவில்லை என்கிறார் பிரிட்டனின் வீட்ஸ் பல்கலைக்கழகத்தின் புவி இயற்பியல் பேராசிரியர் ஆன்ட்ரூ சகூப்பர்.
மௌனா லோவா இப்போது சீற்றத்தை வெளிப்படுத்தி இருப்பது புதிய தலைமுறை விங்ஞானிகளுக்கு எரிமலை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்ய வாயப்பை வழங்கியுள்ளது என்று போராசிரியர் கூப்பர் கூறுகிறார்.
"மௌனா லோவாவிற்குள் மாக்மா எங்கே சேமிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பது எங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் - அது பூமியின் மேலடுக்கில் இருந்து நன்றாக எழுவதற்கும் எரிமலையின் மேற்பரப்பில் இருந்து வெளியே வருவதற்கும் இடையில் இருக்கும்" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
மௌனா லோவா எரிமலை வெடிப்பு ஆபத்தானதா?
மௌனா லோவா எரிமலையின் குப்பையும், வாயுவும் காற்றில் உயரமாக வெளிப்படும் மற்ற பல எரிமலைகளை போல உண்மையிலேயே வெடித்து சிதறுவதில்லை.
மாறாக, எரிமலையின் பக்கவாட்டில் எரிமலைக் குழம்பு மிகவும் மெதுவாகவே பாய்கிறது.
"வெளியேறும் லாவா குழம்பு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை அல்ல, ஏனெனில் அவை வெளியேறும் பாதையில் இருந்து நீங்கள் வெளியேறிவிடலாம்” என்று பேராசிரியர் ஹூப்பர் கூறுகிறார்.
"மேலும், எரிமலைக்கு கீழே அருகில் உள்ள நகரங்களை நோக்கிச் இந்த லாவா குழம்பு செல்லவில்லை, ஆனால் வடகிழக்கு நோக்கி செல்கிறது. சொத்துக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு அது அந்த திசையில் வெகுதூரம் பயணிக்க வேண்டும்."
இருப்பினும், மௌனா லோவா எரிமலை வெளியிடும் வாயுக்களால் உள்ளூர் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.
"சல்பர் டை ஆக்சைடு உள்ளிட்ட எரிமலை வாயுக்கள்... காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து “எரிமலை மூடுபனி" என்கிற 'வோக்' ஐ உருவாக்குகின்றன” என்கிறார் டாக்டர் சோலானா.
"இது இந்த எரிமலை பகுதிக்கு கீழே வசிப்பர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தலாம். இது கண் எரிச்சலையும், சிலருக்கு சுவாச பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்."
காற்றின் தரம் இன்னும் நன்றாகவே இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனால் அது மோசமாகலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














