பா.ஜ.க. எம்.பி. மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை தாமதம் ஏன்? ஜனவரி முதல் இதுவரை நடந்தது என்ன?

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2023, ஜனவரி 18ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் மல்யுத்த சாம்பியன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர். மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தங்களது போராட்டத்திற்காக அவர்கள் மீண்டும் வீதிக்கு வந்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்ந்த இந்த வீரர்கள் கூறி வருகின்றனர்.

ஜனவரி மாதம், பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் புகார் வைத்த போது, அதனை அவர் மறுத்தார்.

கடந்த மூன்று மாதங்களில் இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தற்போது மல்யுத்த வீரர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்ற விசாரணை, பிற விளையாட்டு வீரர்களின் ஆதரவு என மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போராடும் வீரர்களின் பின்னால் காங்கிரஸ் இருப்பதாக பிரிஜ் பூஷண் குற்றம்சாட்டிய நிலையில், விளையாட்டு வீரர்கள் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர். எந்த அரசியல் கட்சியையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது?

எப்போது தொடங்கியது?

2023, ஜனவரி 18ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

பின்னர், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் மல்யுத்த வீராங்கனையுமான சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா மற்றும் சில வீரர், வீராங்கனைகள் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தர்ணாவில் பங்கெடுத்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தார் என்பது அவர்களது குற்றம் சாட்டு. பிரிஜ் பூஷண் ஷரண் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்.

மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இந்திய விளையாட்டுத் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டு என்ன ?

2012 முதல் 2022 வரையிலான பத்து ஆண்டுகளில் பிரிஜ் பூஷணால் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளானதாக 10க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் தன்னிடம் தெரிவித்ததாக வினேஷ் போகத் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பெண்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களில் ஒருவர் மைனராக இருக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனம், விளையாட்டை சரியாக நிர்வாகம் செய்வதில்லை என்றும் மல்யுத்த வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக ஜனவரி மாதம் வினேஷ் போகத் பேசும்போது, இந்தியப் பெண்கள் மல்யுத்தக் குழுவில் பிசியோதெரபிஸ்ட் இல்லை. அந்தச் சூழ்நிலையில், நான்கு மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஒரு பெண் பிசியோதெரபிஸ்ட் இருப்பது முக்கியமா அல்லது மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் விளையாட்டு கிராமத்திற்கு செல்வது முக்கியமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மனரீதியாக சித்திரவதைக்கு உள்ளானதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் வினேஷ், பஜ்ரங் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷண் மறுத்தார். பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இவ்வாறு செய்யப்படுவதாக கூறினார்.

மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை என்ன?

பிரிஜ் பூஷணை கைது செய்து, அவர் வகித்துவரும் பதவிகளில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கலைக்கப்பட வேண்டும், அமைப்புக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.

கண்காணிப்புக் குழு என்றால் என்ன?

மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் சர்வதேச ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை ஜனவரி 23, 2023 அன்று விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.

குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவரும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான எம்.சி.மேரி கோம் தலைமையில் இந்த மேற்பார்வைக் குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்,

குளிர்கால காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றவரான துருப்தி முர்குண்டே

இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாகி ராதிகா ஸ்ரீமன்

டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன்

வினேஷின் சகோதரியும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவருமான பபிதா போகத் 6வது உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.

கண்காணிப்புக் குழு விசாரணையில் தெரிய வந்தது என்ன?

பிரிஜ் பூஷண் மீதான குற்றச்சாட்டுகள், இந்திய மல்யுத்த சம்மேளனம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது ஆகியவை குறித்து விசாரிக்க இந்த குழுவுக்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டு, இறுதியாக ஏப்ரல் முதல் வாரத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அதற்கு பின்னர் கண்காணிப்புக் குழு கலைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

டெல்லி காவல்துறையின் நிலைப்பாடு என்ன?

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி போலீஸை நாடினர். தாங்கள் புகார் அளிக்க முயன்றதாகவும் ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்றும் விளையாட்டு வீரர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, நீதி வேண்டி மீண்டும் ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே மல்யுத்த வீரர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய போலீஸுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

ஏப்ரல் 28ஆம் தேதியன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் மைனர் புகார்தாரரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், ஜந்தர் மந்தரில் தங்களது தர்ணா போராட்டம் தொடரும் என்று அறிவிந்த மல்யுத்த வீராங்கனைகள், நீதிதான் தங்களின் இறுதியான இலக்கு என்றும், வழக்குப் பதிவு செய்வது அல்ல என்றும் குறிப்பிட்டனர்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?

20 ஜனவரி 2023 அன்று, விளையாட்டு அமைச்சகத்தால் மேற்பார்வைக் குழு அமைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) பிரச்னையை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

ஆனால் ஐஓஏவில் இருக்கும் சில உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழுவை உருவாக்கியதைக் காரணம் காட்டி வீரர்கள் இந்த குழுவின் முன் ஆஜராகவில்லை.

27 ஏப்ரல் 2023 அன்று, ஐஓஏ நிர்வாகக் குழு உறுப்பினர் பூபேந்தர் சிங் பஜ்வா, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சுமா ஷிரூர் மற்றும் ஐஓஏவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைஆகியோரைக் கொண்ட தற்காலிகக் குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா, போராடும் வீரர், வீராங்னைகள் குறித்து முன்வைத்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

"எங்களிடம் வருவதற்குப் பதிலாக, அவர்கள் நேராக தெருக்களுக்குச் சென்றுள்ளனர். இது விளையாட்டிற்கு நல்லதல்ல. பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் ஒரு குழு மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆணையம் உள்ளன. அவர்கள் தெருவுக்கு செல்வதற்குப் பதிலாக எங்களிடம் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் வரவே இல்லை" என்று விமர்சித்திருந்தார்.

பிற விளையாட்டு வீரர்களின் எதிர்வினை என்ன?

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்தவர்களும் எதிர்வினை ஆற்றத் தொடங்கியுள்ளனர். போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக பல முன்னாள் மற்றும் தற்போதைய இந்திய விளையாட்டு வீரர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோரும் இதில் அடங்குவர்.

நாடு முழுவதும் உள்ள பல மல்யுத்த வீரர்கள் குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த சத்யவ்ரத், அன்ஷு மாலிக், மஹாவீர் போகத் போன்றோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வினேஷ் மற்றும் பிறருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், பிரிஜ் பூஷன் சரண் சிங் பிறந்த மாநிலமான உத்தரபிரதேசத்தின் பல மல்யுத்த வீரர்கள் இந்த விஷயத்தில் அமைதியாக உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்