கர்நாடக மாநிலத்தில் இந்த முறையும் வெற்றிபெறாத தமிழர்கள் - காரணம் என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தமிழர் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை. சுயேச்சைகள் உட்பட சுமார் 30 தமிழர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் ஒருவரும் வெற்றிபெறவில்லை.
இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வசிப்பது கர்நாடக மாநிலத்தில்தான். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 22 லட்சம் பேர் இங்கு தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 3.46 சதவீதம். இங்கு வசிக்கும் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் கேட்டால், தமிழர்கள் எண்ணிக்கையை இன்னும் கூடுதலாகச் சொல்வார்கள்.
2004ஆம் ஆண்டிலிருந்து தொடரும் நிலை
பெங்களூர், மைசூர், ஷிவமோகா, உடுப்பி, கோலார், பத்ராவதி, கொள்ளேகால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
ஆனால், 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தின் எந்தத் தொகுதியிலும் தமிழர்கள் போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை. கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் தமிழர்களாக உள்ள கோலார் தங்க வயல் தொகுதியிலும் அதுதான் நிலைமையாக உள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெங்களூரின் சி.வி. ராமன் நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர், ஹனூர், ஷாந்தி நகர், சிவாஜி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
அதேபோல, இந்த ஆண்டும் கே.ஜி.எஃப்., பெங்களூரில் உள்ள சி.வி. ராமன் நகர், ஜெயநகர், புலிகேசி நகர் ஆகிய இடங்களில் தமிழர்கள் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே தோல்வியடைந்துள்ளனர்.
கே.ஜி.எஃப் தொகுதியில் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட எஸ். ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி. தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர். ஜோதிபாசு, சுயேச்சையாகப் போட்டியிட்ட கலாவதி ஆகியோர் தமிழர்கள்.
பெங்களூரில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் சி.வி. ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழரான எஸ். ஆனந்த் குமார் நிறுத்தப்பட்டிருந்தார். புலிகேசி நகர் தொகுதியில் பா.ஜ.கவின் சார்பில் ஏ. முரளி நிறுத்தப்பட்டிருந்தார். அதேபோல, ஜெயநகர் தொகுதியில் ஆர். செல்வக்குமார் என்ற தமிழர் நிறுத்தப்பட்டிருந்தார். இது தவிர ஆங்காங்கே சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

கே.ஜி.எஃப் தொகுதியில் வேட்பாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கே.ஜி.எஃப் தொகுதியைப் பொறுத்தவரை, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரான எம். ரூபகலாவுக்கும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர் எஸ். ராஜேந்திரனுக்கும் இடையில்தான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கே.ஜி.எஃபில் இருந்த தமிழர்களில் பலர் இந்த முறை தமிழர் ஒருவருக்குத்தான் வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்தனர்.
அதைப் போலவே, ராஜேந்திரன் பங்கேற்ற பிரசாரக் கூட்டங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை நடந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. முதல் சில சுற்றுகளில் ராஜேந்திரன் மிகவும் பின்தங்கி இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும், அவரால் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளரான எம். ரூபகலா கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை பா.ஜ.கவின் அஸ்வினி சம்பங்கி பிடித்தார். இருவருமே தமிழரல்லாதவர்கள்.
சி.வி. ராமன் நகர் தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த முறையும் இந்தத் தொகுதியில் ஒரு தமிழரையே நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. பெங்களூர் நகரின் முன்னாள் மேயரான சம்பத்ராஜ் இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை. இந்த முறையும் இந்தத் தொகுதியில் தமிழரான ஆனந்த் குமாரை நிறுத்தியது காங்கிரஸ். அவருக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆதரவளித்திருந்தது. அவரை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் எஸ். ரகு நிறுத்தப்பட்டிருந்தார். இவர் அந்தத் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். 2008ஆம் ஆண்டிலிருந்தே இந்தத் தொகுதி அவர் வசம்தான் இருக்கிறது. இப்போது நான்காவது முறையாகவும் அந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறார் ரகு. கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட கிட்டத்தட்ட 11 ஆயிரம் வாக்குகள் அவருக்கு அதிகம் கிடைத்திருக்கிறது.
போன முறை சி.வி. ராமன் நகரில் கிடைத்த தோல்விக்கு, அந்தத் தொகுதிக்குள் இருந்த உட்கட்சிப் பிரச்சனை காரணமாக இருந்தது. இந்த முறை கிடைத்த தோல்விக்கு, கடைசி நேரத்தில் ஆனந்த் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது காரணமாகச் சொல்லப்படுகிறது.

புலிகேசி தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்த தமிழர்
புலிகேசி நகர் தொகுதியில் பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ஏ. முரளியால் சுமார் பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட செல்வக்குமார் வெறும் 215 வாக்குகளையே பெற்றிருக்கிறார்.
மேலே சொன்ன தொகுதிகளில், கோலார் தங்க வயல் தொகுதியைத் தவிர, வேறு எந்தத் தொகுதியிலும் வேட்பாளர் எந்த மொழியைப் பேசக்கூடியவர் என்பது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.
பெங்களூரிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் 2004ஆம் ஆண்டுவரை பெரும்பாலும் தமிழர்களே போட்டியிட்டு வென்றனர். சி.எம். ஆறுமுகம் மூன்று முறையும் எம். பக்தவத்சலம் மூன்று முறையும் எஸ். ராஜேந்திரன் இரண்டு முறையும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதில் எம். பக்தவத்சலம் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்டே இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார். 2008ஆம் ஆண்டுத் தேர்தலில் சம்பங்கியும் 2013ஆம் ஆண்டுத் தேர்தலில் ராமக்கா என்பவரும் வெற்றிபெற்றனர். இருவருமே பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். 2018ல் காங்கிரசைச் சேர்ந்த ரூபகலா வெற்றிபெற்றார்.

2001ல் கோலார் தங்க வயல் மூடப்பட்ட பிறகு, அந்த தொகுதியில் வசித்த தமிழர்கள் பலர் அங்கிருந்து வெளியேறி பெங்களூரிலும் அதைச் சுற்றிலும் குடியேற ஆரம்பித்தனர். 2008ல் தொகுதி மறு சீரமைப்பின்போது கோலார் தங்க வயலைச் சுற்றியுள்ள தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள் பல அந்தத் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால், தமிழரல்லாதவர்களின் எண்ணிக்கை கேஜிஎஃப் தொகுதிக்குள் அதிகரித்தது. தவிர, எந்தக் கட்சியும் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி வேட்பாளர்களை போட்டியிடச் செய்வதும் நின்று போனது. இதனால், கோலார் தங்க வயலில் 2004க்குப் பிறகு தமிழர்கள் யாரும் வெற்றிபெறவில்லை.
சி.வி. ராமன் நகர் தொகுதியைப் பொறுத்தவரை, தமிழர் - தமிழரல்லாதவர் என்ற பிரச்னையே எழவில்லை. மற்ற தொகுதிகளைப் போலவே பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே பிரசாரம் நடைபெற்றது. அதைவிட முக்கியமாகக் கவனிக்கத்தக்கது, அந்தத் தொகுதியில் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட ஆனந்த் குமார் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கவே தயங்கினார் என்பதுதான். அவர் ஒரு இடத்திலும் தன்னைத் தமிழராக முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒரு காலத்தில் தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதியான சிவாஜி நகர் (முன்பு பாரதி நகர்) தொகுதியில் இந்த முறை தமிழர்கள் போட்டியிடவேயில்லை.
கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழி தவிர, துளு, கொங்கணி, மராத்தி, தெலுங்கு பேசக்கூடியவர்கள் அவ்வப்போது வெற்றிபெருகிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள தொகுதிகளில் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி போன்றவை தீவிரமாக செயல்படுகின்றன. இந்த முறை, மராட்டியத்தை ஒட்டியுள்ள கானாபூர் தொகுதியில் இந்த முறை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தனது வேட்பாளரை நிறுத்தியது. நாக்தன் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தியது.
ஆனால், தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளில் வழக்கமாக வேட்பாளர்களை நிறுத்தும் அ.தி.மு.ககூட, இந்த முறை எந்தத் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
கோலார் தங்க வயல் தொகுதியை விட்டுவிட்டால், கர்நாடகத்தைப் பொறுத்தவரை, பெரிய கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களில் யாராவது யதேச்சையாக தமிழர்களாக இருந்து, வெற்றிபெற்றால் தமிழ் பேசும் வேட்பாளர் வெற்றிபெற்றதாகச் சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, ஒருவர் தமிழர் என்பதற்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தப்படுவது என்பது கிட்டத்தட்ட அறவே இல்லாமல் போய்விட்டது.
அப்படி யதேச்சையாக போட்டியிடுபவர் வெற்றிபெற்றாலும், கர்நாடகத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனைப் பிரதிபலிப்பவராக செயல்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












