திருநங்கை வளர்ப்பில் சீறிப்பாயும் ஜல்லிக்கட்டு காளைகள்: “வீரத்தமிழச்சி ஆக்கிய பிள்ளைகள்”

ஜல்லிக்கட்டு காளையுடன் சிந்தாமணி.
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு காளையுடன் சிந்தாமணி.
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பானிபூரி கடையில் தினக்கூலிக்கு வேலை செய்யும் திருநங்கை சிந்தாமணி, தான் ஈட்டும் வருமானத்தை ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கும் காளைகளுக்கு மட்டுமே செலவிடுகிறார். எதனால் காளையின் மீது இவருக்கு இவ்வளவு ஈர்ப்பு? எந்த சூழல் இவரை இப்படி மாற்றியது?

மதுரை அலங்காநல்லூர் அருகில் உள்ள கல்லணை என்ற ஊரைச் சேர்ந்த திருநங்கை வினோத் என்கிற சிந்தாமணி கடந்த 2017ல் இருந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தனது காளையை இறக்கி வருகிறார். பொருளாதாரத்தில் மிகப்பெரிய வசதி ஏதும் இல்லாத இவர், தற்போது தனது பெற்றோர், குடும்பத்தினருடன் கல்லணையிலேயே வசிக்கிறார். குடும்பத்தில் கடைசியாக பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா உண்டு.

சிந்தாமணியின் பெற்றோர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்தவர்கள். இருவருமே தற்போது வயது மூப்பு காரணமாக வீட்டில் இருக்கின்றனர். சிந்தாமணியும் அவரது அண்ணன்கள் இருவரும் கூலி தொழிலில் ஈட்டும் வருமானத்தில் தற்போது குடும்பத்தை கவனித்து வருகின்றனர்.

"ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு என் கனவு"

சிந்தாமணி காளை

சிறிய வயதிலிருந்தே ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகள் பங்கேற்பதைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட சிந்தாமணி, எதிர்காலத்தில் தானும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையைக் களமிறக்க வேண்டும் என்ற கனவை வளர்த்துக்கொண்டார்.

இந்தக் கனவை நனவாக்கிக்கொள்ளும் வகையில், கடந்த 8 ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வருகிறார். 2016ல் ஜல்லிக்கட்டுக்கு தடை என்று அறிவித்த கணத்திலிருந்து ஜல்லிக்கட்டுக்காகக் காளையை வளர்க்கத் தொடங்கியதாக சிந்தாமணி பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்கள் ஊரில், சுற்றியிருக்கும் ஊர்களிலும் பலரும் காளைகள் வளர்க்கிறார்கள். இவர்கள் எல்லாம் தங்கள் காளையை ஜல்லிக்கட்டில் களமிறக்கி, அந்த காளைகளை ஊருக்குள் ஆரவாரத்துடன் கொண்டாடியபடி அழைத்து வருவார்கள். சிறிய வயதில் அவற்றைப் பார்க்கும்போது நாமும் காளைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அப்போது, சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன். 

அப்போது என்னைப் பார்ப்பவர்கள் கேலி, கிண்டல் செய்வார்கள். கடை கடையாகச் சென்று கைத் தட்டி காசு வாங்குவதை எல்லோரும் கேவலமாகப் பேசினார்கள். அப்போது ஏன் நம் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று எண்ணி மனசு வலித்தது. நாம் ஏன் மாறக்கூடாது? நாமும் ஒரு வீர தமிழச்சியாக வாழவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த ஆசை போகப் போக அதிகமானது," என்றார்‌ சிந்தாமணி.

"திருநங்கையாக இருந்து வீரத் தமிழச்சியாக..." 

சிந்தாமணி

தமக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து 2016ல் மதுரை மேலூர் பக்கத்தில் உள்ள கொடிக்குளம் என்ற ஊரில் இருந்து தமக்கு ஒரு ஜல்லிக்கட்டு காளை கொடுத்தனர் என்கிறார் சிந்தாமணி. ஆனால், அந்தக் காளையை அவர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இறக்கவில்லை. வெறுமனே வளர்க்க மட்டுமே செய்தார்.

 அதன்பின் தாம் சித்தாள் வேலைக்குச் சென்று சிறுக சிறுக சேமித்த பணத்தில் பால் மாட்டு கன்றுக்குட்டி ஒன்றை வாங்கியதாகவும். அந்த பால் மாடு மூலம் கிடைத்த வருமானத்தில் சொந்தமாக ஒரு ஜல்லிக்கட்டு காளை வாங்கியதாகவும் அவர் கூறுகிறார். இந்தக் காளையைத்தான் அவர் போட்டிகளில் இறக்கினார்.

"2017ல் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சக்குடி இப்படிப் பல ஊர்களில் காளையைக் களமிறக்கினேன். திருநங்கையாக இருந்து, வீரத் தமிழச்சியாக என் அடையாளத்தை மாற்றியது என் காளைதான். 2017ல் இருந்து தொடர்ந்து எல்லா ஊர்களிலும் காளையைக் களமிறக்கி, இன்று திருநங்கை சிந்தாமணி என்றாலே தமிழ்நாடு முழுக்க தெரியும் அளவுக்கு இது சென்றுள்ளது,” என்கிறார் சிந்தாமணி.

கூலி வேலை செய்து காளை பராமரிப்பு 

காளையுடன் சிந்தாமணி
படக்குறிப்பு, 'பிள்ளையை' கொஞ்சும் சிந்தாமணி.

“தற்போது பானிபூரி கடையில் தினக்கூலியாக பணியாற்றுகிறேன். அன்றாடம் வாங்கும் ரூ.250 சம்பளத்தில்தான் என் பிள்ளைகளுக்கு (காளைகள்) தேவையான தீவனத்தை வாங்கி கொடுத்துப் பார்த்துக்கொள்கிறேன். இது தவிர அவ்வப்போது என்னை சமையல் வேலைக்கும் அழைப்பார்கள். அதில் ஈட்டும் வருமானத்திலும் எனக்கும், என் காளைகளுக்கும் செலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் சிந்தாமணி.

தன் “பிள்ளைகளுடன்” ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறும் அவர், “இவற்றை எல்லோரும் ‘காளைகள்’ என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு இவை மிகவும் நெருக்கமான என் பிள்ளைகள்” என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் சிந்தாமணி. 

"ஒரு காலத்தில் தப்பான பொருளில் பார்த்து தப்பாக கேலி செய்து அழைப்பார்கள். அப்போதெல்லாம் மனசு ரொம்பவே வலிக்கும். நாம் ஏன் வாழ்கிறோம்; எதற்கு உயிருடன் இருக்கிறோம் என்று நினைத்து தனிமையில் நிறைய அழுவேன். 

எப்போது என் பிள்ளைகளுடன் எனது வாழ்க்கையைத் தொடங்கினேனோ அதிலிருந்து மனசில் எந்த கவலைக்கும் இடமளிக்காமல், என் பிள்ளைகள் மட்டும் போதும் என்று வாழ்கிறேன். வாழ்க்கையில் வேறெதுவும் வேண்டாம். கடைசி வரை இதே மகிழ்ச்சியுடன் என் பிள்ளைகளுடன் வாழ்வதே நிம்மதி தரும்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் சிந்தாமணி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: