You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரபஞ்சத்தில் மனித அறிவுக்கு சவால் விடும் 'பெரிய வளையம்' கண்டுபிடிப்பு - எவ்வாறு உருவானது?
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
விண்வெளியில் பெரிய, வளைய வடிவிலான அமைப்பு ஒன்றை பிரிட்டனில் உள்ள மத்திய லாங்கிஷா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 130 கோடி ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது மற்றும் பூமியில் இருந்து பார்க்கும் போது இரவு வானில் நிலாவை அளவை விட 15 மடங்கு பெரிதாக உள்ளது.
வானியல் நிபுணர்களால் 'பெரிய வளையம்’ (Big Ring) என்று பெயரிடப்பட்ட இது, பல விண்மீன் திரள்களால் ஆனது.
அளவில் மிகப் பெரிதான இந்த வளையம், பிரபஞ்சத்தைப் பற்றிய மனித அறிவுக்கும் புரிதலுக்கும் சவால் விடுப்பதாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வளையத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. மிகவும் தொலைவில் அமைந்துள்ள இந்த பெரும் அமைப்பை உருவாக்கிய அனைத்து விண்மீன் திரள்களையும் அடையாளம் காண அதிக நேரம் மற்றும் கணினி ஆற்றல் தேவைப்பட்டது.
அண்டவியல் கொள்கை எனப்படும் வானவியலின் வழிகாட்டும் கொள்கைப் படி, இத்தகைய பெரும் அமைப்புகள் இருக்கக்கூடாது. அதன்படி, அனைத்து வானியல் பொருட்களும் பிரபஞ்சம் முழுவதும் சீராகப் பரவுகின்றன.
நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஆகியவை நமது பார்வையில் பெரும் திரள்களாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது அவை முக்கியமானவை அல்ல. மேலும் இத்தகைய பொருட்களின் மிகப் பெரும் திட்டுகள் உருவாகக் கூடாது என்ற கோட்பாடும் உள்ளது.
இந்த பெரிய வளையம் அண்டவியல் தத்துவத்தில் முதல் மீறலாக இருக்க முடியாது. பல்வேறு காரணிகளால் கண்டுபிடிக்கப்படாத மற்றொரு மீறலும் விண்வெளியில் இருக்கலாம்.
வானியலின் மையப்புள்ளி என்ன என்பதை மறுபரிசீலனை செய்வதற்கான சான்றுகள் வளர்ந்து வருகின்றன என்கிறார் ராயல் அஸ்ட்ரோனாமிகல் சொசைட்டியின் துணை இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாஸ்ஸி.
“பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது பெரிய அமைப்பு இதுவாகும். இது, பிரபஞ்சம் சீரானது என்ற பெரும்பான்மை கருத்துக்கு முரணானது. இந்த அமைப்புகள் உண்மையானவை என்றால், அது நிச்சயமாக அண்டவியலாளர்களின் சிந்தனையையும் காலப்போக்கில் பிரபஞ்சம் எவ்வாறு பரிணாமம் அடைந்தது என்பது குறித்த சிந்திக்க தூண்டும்” என்றார்.
இந்த பெரிய வளையத்தை லாங்கிஷா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவி அலெக்ஸியா போபெஸ் அடையாளம் கண்டார். விண்வெளியில் 330 கோடி ஒளி ஆண்டுகளுக்குப் பரவியுள்ள ராட்சத வளைவை (Giant Arc) கண்டுபிடித்தவரும் இவரே.
இவற்றைக் கண்டுபிடித்தது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "இது உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். ஏனென்றால் இதனை நான் தற்செயலாகத்தான் கண்டுபிடித்தேன். ஆனால் இது ஒரு பெரிய விஷயம். அதுகுறித்து நான் பேசுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் தான் கண்டுபிடித்தேன் என்பதை நம்ப முடியவில்லை,” என்றார்.
“பிரபஞ்சம் குறித்த தற்போதைய புரிதலை வைத்துக்கொண்டு இந்த இரு மிகப்பெரிய அமைப்புகள் குறித்தும் பேசுவது எளிதானது அல்ல,” என்றார் அவர்.
“அதன் மிகப்பெரிய உருவமைப்பு, தனித்துவமான வடிவம் போன்றவை, அவை நிச்சயமாக நம்மிடம் ஏதோ முக்கியமான ஒன்றை சொல்லவருவது போலிருக்கிறது. ஆனால் என்ன அது?”
பெரிய வளையம் மற்றும் ராட்சத வளைவு இரண்டும் ’பூட்ஸ் தி ஹெர்ட்ஸ்மேன்’ (Bootes the Herdsman) எனும் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் ஒப்பீட்டளவில் நெருக்கமாகத் தோன்றுகின்றன.
வார்விக் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் பேராசிரியர் டான் பொல்லாக்கோ, இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கலாம், மேலும் இரண்டும் சேர்ந்து இன்னும் பெரிய அமைப்பை உருவாக்கலாம் என்றார்.
"இவ்வளவு பெரிய அமைப்புகள் எப்படி உருவாகின்றன என்பதுதான் கேள்வி,” என்கிறார் அவர்.
"இந்த அமைப்புகளை உருவாக்கக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் கற்பனை செய்வது மிகக் கடினம். அதற்கு பதிலாக ஆரம்பகால பிரபஞ்சத்தின் எச்சங்கள் குறித்து நாங்கள் யூகிக்கிறோம். அதன்படி, அதிக மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பொருட்களின் அலைகள், பால்வெளி மண்டலத்திற்கு வெளியே உறைந்திருக்கும்," என்கிறார் அவர்.
மற்ற அண்டவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இதேபோன்ற பெரிய அமைப்புகளும் உள்ளன. ‘ஸ்லோன்’ என்ற பெருஞ்சுவர் (Sloan Great Wall), சுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது. மேலும், தென்துருவ சுவர் (South Pole Wall), 140 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது.
ஆனால், 1000 கோடி ஒளியாண்டுகள் அகலமுள்ள ஹெர்குலஸ்-கொரோனா பொரியாலிஸ் பெருஞ்சுவர் (Hercules-Corona Borealis Great Wal) எனப்படும் பெரும் விண்மீன் திரள்களையும் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த பெரிய வளையம் வானத்தில் கிட்டத்தட்ட சரியான வளையமாகத் தோன்றினாலும், லோபஸின் பகுப்பாய்வின்படி, அது சுருள் வடிவில் அல்லாமல் திருகி போன்ற வடிவமைப்பில், அதன் முகம் பூமியுடன் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது.
"பெரிய வளையம் மற்றும் ராட்சத வளைவு, தனித்தனியாகவும் ஒன்றாகவும், பிரபஞ்சத்தையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்வதில் பெரும் அண்டவியல் மர்மத்தை நமக்கு அளிக்கிறது," என்றார்.
நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சங்கத்தின் (ஏஏஎஸ்) 243-வது கூட்டத்தில் இந்த கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)