சென்னை பல்கலைக் கழக வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது ஏன்? 136 கல்லூரிகளுக்கு சிக்கலா?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?
படக்குறிப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டதை எதிர்த்து அப்பல்கலைக்கழகத்தின் ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பல்கலைக்கழக கணக்கு ஏன் முடக்கப்பட்டது?

இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம். 1857-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தற்போது கிட்டத்தட்ட முடங்கிப்போகும் நிலையை எட்டியிருப்பதாகக் கூறி, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இதற்கு முக்கியக் காரணம், இந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கியமான வங்கிக் கணக்குகள் அனைத்தும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருப்பதுதான். இந்தப் பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை பல்கலை.க்கு இந்த நிலைமை ஏன்?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?
படக்குறிப்பு, வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டதை எதிர்த்து அப்பல்கலைக்கழகத்தின் ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

"பல்கலைக்கழகம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்து வருகிறது. தற்போதுள்ள பிரச்னை கடந்த 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்திற்கு என சுமார் 80 - 90 கோடி ரூபாய் நிதியை வழங்கும். 2017-ம் ஆண்டு வாக்கில் பல்கலைக்கழகம் சமர்ப்பித்த கணக்குகளில் சில ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. அந்த ஆட்சேபனைகளை (Audit objections) முன்வைத்து நிதியை நிறுத்த ஆரம்பித்தார்கள். அதாவது கிட்டத்தட்ட 74 கோடி ரூபாய் அளவுக்கு நிதி நிறுத்தப்பட்டது.

இதனால், பல்கலைக்கழகம் அதன் வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டியிலும் தொலைதூரக் கல்விப் பிரிவிலிருந்து கிடைக்கும் வருவாயிலும் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இது இரண்டுவிதமான சிக்கல்களை பல்கலைக்கழகத்திற்கு ஏற்படுத்தியது. முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தின் நிதிநிலை மோசமடைந்தது. இதனால் 2018-க்குப் பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு என வழங்கப்படும் பணிக் கொடைகள் ஏதும் வழங்கப்படவில்லை.

அடுத்ததாக, பல்கலைக் கழகத்திற்கு அரசிடமிருந்து வரவேண்டிய நிதி குறைந்ததால், பல்கலைக்கழகத்தின் கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது ஒரு பல்கலைக்கழகத்திற்கு 51 சதவீதத்திற்கு மேல் அரசிடமிருந்து நிதி வந்தால் மட்டுமே அது பொது பல்கலைக்கழகமாகக் கருதப்படும். இல்லாவிட்டால், சுயநிதி பல்கலைக்கழகமாகக் கருதப்படும். சுயநிதி பல்கலைக்கழகங்கள் வருமான வரியைச் செலுத்த வேண்டும். 2018-க்குப் பிறகு அரசின் நிதி வெகுவாகக் குறைந்துவிட்டதால் இதனை சுயநிதி பல்கலைக்கழகமாகக் கருத ஆரம்பித்தது வருமானவரித் துறை" என்கிறார்கள் சென்னைப் பல்கலைக்கழக போராடும் ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

136 கல்லூரிகளுக்கு சிக்கலா?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?

அதாவது, வருமான வரித்துறையின் விதி எண் 10 (23C)-ன் படி, ஒரு கல்வி நிறுவனம் முழுக்க முழுக்க அரசு நிதியில் இயங்கினாலோ, வெளியிலிருந்து 5 கோடிக்குக் குறைவாக வருவாயைப் பெற்றாலோ அந்த கல்வி நிறுவனத்திற்கு வருமான வரி கிடையாது. ஆனால், அரசு அளிக்கும் நிதி குறைந்து, வெளிவருவாய் அதிகரித்தால் 10 (23 C) VI-ன் படி சில விதிவிலக்குகளைப் பெற வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இப்போது இந்தச் சிக்கலில்தான் சென்னைப் பல்கலைக்கழகம் சிக்கியிருக்கிறது.

"இதன் காரணமாக, இந்த ஐந்தாண்டுகளுக்கும் சேர்த்து 424 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன" என்கின்றனர் போராடும் ஆசிரியர்கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் சந்திக்கும் வேறு சில பிரச்னைகளையும் இவர்கள் பட்டியலிடுகிறார்கள். அதாவது, இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் கௌரியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்த பிறகு, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

இதனால், ஒரு கன்வீனர் கமிட்டியின் மூலமே பல்கலைக்கழகத்தின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதேபோல, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சிண்டிகேட்டின் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு நடக்கவில்லை. இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 136 கல்லூரிகள் இயங்கிவருகின்றன. துணைவேந்தர் இல்லாதது, நிதி பற்றாக்குறை, சிண்டிகேட் கூட்டம் நடக்காதது ஆகிய பிரச்னைகளால் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறுகிறார்கள் ஆசிரியர்கள்.

தமிழக அரசுடன் பல்கலைக்கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது ஏன்?

இந்த நிலையில்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் இயங்கக்கூடிய நான்கு அலுவலர், ஆசிரியர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

"இப்போதைக்கு எங்களுக்கு இரண்டே கோரிக்கைதான். ஒன்று, வருமான வரித்துறை பல்கலைக்கழகத்தின் கணக்குகளை முடக்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்" என்கிறார், சென்னைப் பல்கலைக்கழக அலுவலகப் பேரவையின் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அரசுடன் பல்கலைக்கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, உயர்கல்வித் துறையின் அமைச்சர், உயர் கல்வித் துறையின் செயலர் ஆகியோரின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

'மிக மோசமான நிலையில் ஆய்வுக்கூடங்கள், ஆய்வரங்குகள்'

கடந்த நான்கு ஆண்டுகளாகவே வைப்பு நிதி, தொலைதூரக் கல்வியிலிருந்து கிடைக்கும் நிதி ஆகியவற்றின் மூலம் மட்டுமே இயங்கி வருவதால், பல நிதிச் சிக்கல்களை சென்னைப் பல்கலைக்கழகம் எதிர்கொண்டு வருகிறது. அரசிடமிருந்து வரவேண்டிய நிதி வராததால், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கூடங்கள், ஆய்வரங்குகள் ஆகியவை போதுமான நிதி இல்லாமல் மிக மோசமான நிலையை நோக்கி ஏற்கனவே பல்கலைக்கழகம் சென்றுகொண்டிருப்பதாகக் கூறும் ஆசிரியர்கள், இந்த மாதம் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதால் முற்றிலும் செயல்பட முடியாத நிலையை நோக்கிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் இயங்கக்கூடிய நான்கு அலுவலர், ஆசிரியர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

"இப்போதைக்கு எங்களுக்கு இரண்டே கோரிக்கைதான். ஒன்று, வருமான வரி துறை பல்கலைக்கழகத்தின் கணக்குகளை முடக்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழக அலுவலகப் பேரவையின் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அரசுடன் பல்கலைக்கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகத்தின் பதில் என்ன?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏழுமலையிடம் பிபிசி இது குறித்து கேட்டபோது, "இப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச முடியாது. பேச்சுவார்த்தை முன்னோக்கிச் செல்கிறது, அவ்வளவுதான்," என்று மட்டும் தெரிவித்தார்.

இது குறித்து உயர்கல்வித் துறையின் அமைச்சர், உயர் கல்வித் துறையின் செயலர் ஆகியோரின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)