மத மாற்றம்: ஐ.எஸ். மிரட்டலுக்கு அடிபணியாத 'யாசிதி' இளம்பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை - கவனம் ஈர்த்த 'தீர்ப்பு'

    • எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
    • பதவி, பிபிசி செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்த ஜெர்மனியை சேர்ந்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குர்தி மொழி பேசும் யாஸதி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின இளம் பெண்ணை அடிமையாக நடத்தியது, மனிதாபிமானம் அற்ற செயல்களில் ஈடுபட்டது மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் (ஐஎஸ்) உறுப்பினராகச் செயல்பட்டது, ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த 37 வயதான நாடின் கே என்ற பெண், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, தனது கணவருடன் சிரியா மற்றும் இராக் நாடுகளில் வசித்து வந்துள்ளார்.

அப்போது அவர், 'யாசிதி இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன், தனது கணவரின் மூலம் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும், அடித்துத் துன்புறுத்தியதும் வழக்கு விசாரணையில் நிரூபணமாகி உள்ளது' என்று ஜெர்மனியின் கோப்வென்ஸ் நகர நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, “யாசிதி இன மக்களின் மத நம்பிக்கையைச் சிதைக்க வேண்டும் என்ற ஐ.எஸ் அமைப்பின் ஒற்றை நோக்கத்தின் வெளிப்பாடாக அந்த இன மக்கள் மீது இதுபோன்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன” என்று கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

‘மதம் மாறு அல்லது செத்துமடி’

இராக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, யாசிதி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினரின் மூதாதையர்கள் வாழ்ந்த சினிஜார் பகுதியில் கடந்த 2014இல் ஐ.எஸ் அமைப்பின் போராளிகள் ஊடுருவினர்.

அங்கு அவர்கள் மதமாற்ற பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களின் இந்த நடவடிக்கையை ஐ.நா.சபை, ‘இனப்படுகொலை பிரசாரம்’ என்று அறிவித்திருந்தது.

‘மதம் மாறுங்கள் அல்லது செத்து மடியுங்கள்’ என்று யாசிதி மதத்தைச் சேர்ந்த 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் ஐ.எஸ் போராளிகள் இறுதி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கைக்கு அடிபணியாத ஆயிரக்கணக்கான ஆண்களும், சிறுவர்களும் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். 7,000க்கும் மேற்பட்ட பெண்களும், சிறுமிகளும் அடிமைகள் ஆக்கப்பட்டதுடன், பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர்.

அடிமையாக்கப்பட்ட இளம்பெண்

இவ்வாறு ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடிமையாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாசிதி இளம் பெண்களில் ஒருவரைத்தான் 2016இல் இருந்து, ஜெர்மனியை சேர்ந்த நாடின் மற்றும் அவரது கணவர் அடிமையாக்கி வைத்திருந்துள்ளனர்.

நாடின் மற்றும் அவரது கணவர் ஐ.எஸ் அமைப்பில் சேர, 2015இல் சிரியாவுக்கு பயணித்துள்ளனர். அதன் பின்னர் ஓராண்டு கழித்து அவர்கள் இருவரும் வடக்கு இராக் பகுதியில் உள்ள மொசூல் நகரத்தில் குடியேறினர்.

அப்போது 20 வயதான யாசிதி இனப்பெண்ணையும் சிரியாவில் இருந்து தங்களுடன் அவர்கள் அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நாடின் மற்றும் அவரது குடும்பத்தினர் 2019இல், சிரியாவில் குர்திஷ் படையினரிடம் சிக்கினர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டு, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, தன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நாடின், தன் மீது வழக்கு தொடுத்துள்ள யாசிதி இளம்பெண்ணுக்கு, தான் நிறைய உதவிகள் செய்திருப்பதாகவும் கூறினார்.

சாட்சியம் அளித்த இளம்பெண்

நாடின் மற்றும் அவரது கணவரின் கட்டுப்பாட்டில் இருந்த யாசிதி இன இளம்பெண் 2019இல் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி நீதிமன்றத்தில் ஆஜரான அவர், நாடினுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். மேலும், கடந்த புதன்கிழமை வழக்கின் தீர்ப்பு வெளியான போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

"தன்னைப் போன்றே தனது இனத்தைச் சேர்ந்த பிற இளம்பெண்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று தனது கட்சிக்காரரான இளம்பெண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்" என்று அவரது வழக்கறிஞர் கூறியதாக அசோசியேட் பிரஸ் நியூஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

ஜெர்மனியை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், யாசிதி இன மக்களைப் படுகொலை செய்தது, கொடுமைப்படுத்தியது தொடர்பாக பல வழக்குகளின் விசாரணை, அந்நாட்டு நீதிமன்றங்களில் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.

இனப்படுகொலை என்று அறிவித்த நீதிமன்றம்

யாசிதி இனப் பெண்ணை அடிமையாக நடத்திய குற்றத்துக்காக, ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அக்டோபர் 2021இல், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜெர்மனி நீதிமன்றம் உலக அளவில் முதல்முறையாக அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.

யாசிதி மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்திய குற்றங்களை ‘இனப்படுகொலை’ என்று ஜெர்மனி நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது உலக அளவில் கவனம் பெற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: