'கணவரின் நிறத்துடன் ஒப்பிட்டனர்' - கேரள பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி வேதனைப்பட்டதன் பின்னணி

    • எழுதியவர், விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

'கறுப்பு என்பது வெறும் நிறம் மட்டுமல்ல, அது கெட்ட விஷயங்களையும் துக்கத்தையும் குறிக்கிறது. கறுப்பு என்பது மிக அழகான நிறம். அதை ஏன் இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும்?' எனக் கேள்வி எழுப்புகிறார், கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்.

தனது கணவரின் வெள்ளை நிறத்தையும் தனது கறுப்பு நிறத்தையும் ஒப்பிட்டுக் கூறப்பட்ட விமர்சனங்களால் தாம் சோர்வடைந்ததாக முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சாரதா முரளிதரன்? நிறப் பாகுபாடுகளை எதிர்கொள்வது குறித்து அவர் கூறியது என்ன?

கேரள மாநில தலைமைச் செயலாளர் கூறியது என்ன?

கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன், செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) தனது முகநூல் பக்கத்தில் நிறப் பாகுபாடுகளை எதிர்கொண்டது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், "என் கணவர் எந்த அளவுக்கு வெள்ளையாக இருக்கிறாரோ அதே அளவுக்கு நான் கறுப்பாக உள்ளதாக என்னை ஒருவர் விமர்சித்தார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்தப் பதிவைத் தாம் ஏற்கெனவே பதிவிட்டுவிட்டு நீக்கிவிட்டதாகக் கூறிய அவர், "ஆனால், இதுதொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும்" எனத் தனது நலன் விரும்பிகள் கூறிய கருத்தில் உடன்படுவதால் மீண்டும் இதைப் பதிவிட்டு அதுகுறித்து விவாதிப்பதாகவும் சாரதா முரளிதரன் கூறியுள்ளார்.

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறியது என்ன?

அந்தப் பதிவில் மேலும், நிறப்பாகுபாடு தொடர்பாகத் தாம் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் அவர் விவரித்திருந்தார்.

அதில், "இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நான் ஏன் தனியாகக் குறிப்பிட வேண்டும்? இதற்கு முன்னர் இந்தப் பதவியில் இருந்தவருடன் தொடர்ந்து பல ஒப்பீடுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். கறுப்பான பெண் என்று முத்திரை குத்தப்பட்டேன். அது ஏதோவொரு அவமானம் என்று நினைத்துக் கூறுகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"பிரபஞ்சத்தின் அனைத்திலும் கறுப்பு பரவியுள்ளது. சக்தியின் ஆற்றலாக கறுப்பு உள்ளது. ஆடை முதல் கண் மை வரை பலவற்றில் கறுப்பு நிறம் உள்ளது" என்று கூறுகிறார் சாரதா முரளிதரன்.

தான் நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று வெள்ளையாக மீண்டும் என்னை வெளியே கொண்டு வர முடியாதா எனத் தனது தாயிடம் கேட்டதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதுமான, நல்ல நிறம் இல்லாத பிம்பத்தில் புதைந்து வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ள அவர், "கறுப்பு நிறத்தில் அழகையோ, மதிப்பையோ காணவில்லை. வெள்ளை நிற தோலினால் கவரப்பட்டேன். அவ்வாறு இல்லாததற்காக என்னை நானே குறைவாக எண்ணிக் கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தனக்கு குழந்தைகள் பிறந்த பின்னர் இந்த நிலை மாறியதாகவும் கறுப்பு நிறத்தில் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் இருப்பதாக அவர்கள் கூறியதாகவும் தனது பதிவில் சாரதா தெரிவித்துள்ளார்.

"மற்றவர்களால் உணர முடியாத அழகை என் குழந்தைகள் அறிந்து கொண்டனர். கறுப்பு மிகவும் அழகாக உள்ளதை என் குழந்தைகள் எனக்கு உணர்த்தினார்கள்" எனவும் சாரதா பதிவிட்டுள்ளார்.

பெருகும் ஆதரவு

சாரதாவின் முகநூல் பதிவுக்குப் பலரும் பின்னூட்டங்கள் மூலம் ஆதரவுகளைத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நீங்கள் எழுதிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதைத் தொடுகின்றன. விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக இது மாறியுள்ளது. எனது தாயாரும் கறுப்பு நிறம்தான்' எனப் பதிவிட்டுள்ளார்.

'மதிப்பிடுவதே அநீதி' - உ.வாசுகி

"பெண்ணுக்கு அனைத்தையும்விட உடல் சார்ந்த அழகு மட்டுமே பிரதான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. இது ஆணாதிக்கப் பார்வையின் தொடர்ச்சியாக உள்ளது" எனக் கூறுகிறார் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி.

அழகிப் போட்டிகள், அழகு சாதனப் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் என அனைத்தும் நிறத்தை அடிப்படையாக வைத்தே பார்க்கப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நிறம், உயரம், எடை, உடை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை மதிப்பிடுவது மேலோட்டமானது மட்டுமல்ல அநீதியானது" எனக் கூறும் உ.வாசுகி, "இது பாகுபாடு சார்புத்தன்மை கொண்டது. நிறம் என்பது நாம் விரும்பிப் பெறக்கூடிய ஒன்றல்ல. அது முன்னோர்களின் மரபணுக்களுடன் தொடர்புடையது" என்கிறார்.

"கறுப்பு என்பது ஒரு நிறம் மட்டுமே. அதை அவதூறு செய்ய வேண்டாம். சமூகத்துக்கான பங்களிப்பு என்ன என்பதைப் பார்ப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் உ.வாசுகி குறிப்பிட்டார்.

'ஆதிக்கம் மற்றும் உயர்ந்த தன்மையைக் காட்டும் ஒன்றாக நிறம் பார்க்கப்படுகிறது'

"ஒரு பெண் வெள்ளையாக இருந்தால் அதை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருடன் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கமாக உள்ளது. ஆதிக்கம் மற்றும் உயர்ந்த தன்மையைக் காட்டுவதற்காக இவ்வாறு பேசப்படுகிறது" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் அஜிதா.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திரைப்படங்களில் வெள்ளையாக இல்லாத எந்தப் பெண்ணும் கதாநாயகியாக நடிக்க முடியாது. அதில் காட்டப்படும் தெருவோர வியாபாரிகள், சமையல்காரர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களைக் கவனித்தால் கறுப்பாக இருப்பார்கள்," எனக் கூறுகிறார்.

தொலைக்காட்சிகளில் அழகு சாதனப் பொருள்கள் தொடர்பாக வரும் விளம்பரங்களைச் சுட்டிக் காட்டிப் பேசிய அஜிதா, "அவற்றில் கறுப்பாக வரும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வெள்ளையாக இரு என்பதைக் காட்டும் வகையிலேயே விளம்பரங்கள் வருகின்றன," என்கிறார்.

திருமணங்களில் பெண்ணின் நிறம் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது என்று மேற்கோள் காட்டும் அவர், "ஆண்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. அவர்களிடம் கல்வி, வசதி ஆகியவை மட்டுமே பார்க்கப்படுகிறது. வசதி படைத்த பெண்ணாக இருந்தாலும் வெள்ளை நிறத்தில் இருந்தால் மரியாதை கிடைக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

"நிறப் பாகுபாடு காட்டப்படுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஆனால், இதை எதிர்ப்பதற்கு வலுவான சட்டமோ, கொள்கையோ இல்லை. சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழக அரசு, இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" எனவும் அஜிதா தெரிவித்தார்.

யார் இந்த சாரதா முரளிதரன்?

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாரதா, கேரள அரசில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

கேரள அரசின் தலைமைச் செயலாளராகத் தற்போது பதவி வகிக்கும் சாரதா, கடந்த 1990ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவரது கணவர் வி.வேணுவும் இதே பேட்ச்சை சேர்ந்தவர்தான். காதல் திருமணம் புரிந்த இருவரும் கேரள மாநில அரசில் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று கேரள மாநில தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து வி.வேணு ஓய்வு பெற்றார். இதையடுத்து, 'அடுத்த தலைமைச் செயலாளர் யார்?' என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு புதிய தலைமைச் செயலாளராக சாரதா நியமிக்கப்பட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை குடும்பஸ்ரீ - மாநில வறுமை ஒழிப்புத் திட்டத்தின் செயல் இயக்குநராக சாரதா சிறப்பாகப் பணியாற்றினார். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பட்டியல் பிரிவு மக்கள் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்படப் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

கணவரைத் தொடர்ந்து அவர் வகித்த தலைமைச் செயலாளர் பொறுப்பில் மனைவி பொறுப்பேற்றது கேரள அரசு நிர்வாகத்தில் அரிதான விஷயமாக பார்க்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு