"ஆண்கள் என்னை தவறான நோக்கில் அழைத்தனர்" - அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிய பெண்கள் கூறுவது என்ன?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

“ஆண்கள் இருவர் என்னை இரவு நேரத்தில் தவறான நோக்கத்துடன் அழைத்தனர். அடர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசியிருந்ததால்தான் அப்படி கேட்டதாக என் நண்பர்களே கூறினர்.”

“யாரை மயக்குவதற்காக இப்படி அடர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசியிருக்கிறாய் என ஆசிரியர்களே கூறுவார்கள்.”

“அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூசினால், கொடிய வில்லி போன்று இருக்கிறாய் என கூறுவார்கள்.”

இவையெல்லாம், அடர்நிறத்தில் உதட்டுச்சாயம் பூசும் போது பெண்கள் கேட்கும் சில வார்த்தைகள்.

சிவப்பு, பழுப்பு போன்ற அடர் நிறங்களில் உதட்டுச்சாயம் பூசும்போது, சிலர் தங்களையே உற்றுநோக்குவார்கள் என்றும், அலுவலகங்களில் வித்தியாசமாக பார்ப்பார்கள் என்றும் பெண்கள் கூறுகின்றனர்.

என்ன நடந்தது?

சில தினங்களுக்கு முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி அடர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் உதட்டுச்சாயம் என்பது பேசுபொருளானது.

சென்னை மேயர் பிரியா இதுகுறித்து ஆங்கில நாளிதழான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில், “அமைச்சர்கள், அதிகாரிகள் வந்துபோகும் இடம் என்பதால், அத்தகைய அடர் நிற உதட்டுச்சாயங்களை பூச வேண்டாம் என என்னுடைய உதவியாளர் அவரிடம் தெரிவித்தார்” என்று கூறியிருந்தார்.

கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற பெண்கள் தின கொண்டாட்டத்தின்போது, "ஃபேஷன் ஷோ" நடத்தப்பட்டது. "அதன் பிறகே, தான் உதட்டுச்சாயம் போட்டுக்கொள்வது ஒரு பிரச்னையாக மாறியது," என்று பிபிசி தமிழிடம் மாதவி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பணிக்கு தொடர்ச்சியாகத் தாமதமாக வந்ததே பணியிட மாற்றத்திற்குக் காரணம் என்று கூறியதுடன், மாதவியின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

மாதவி முன்வைக்கும் காரணத்திற்காக அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை என, சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியது.

என்றாலும், “இந்த நிறத்தில்தான் உதட்டுச்சாயம் அணிய வேண்டும் என்பதை மேயர் எப்படி நிர்ணயிக்க முடியும்?” என பலரும் சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பினர்.

இதையொட்டி, அடர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசும்போது ஏற்படும் அனுபவங்கள் குறித்து சில பெண்களிடம் பேசினேன்.

தவறான நோக்கத்துடன் அழைத்த ஆண்கள்

அரியலூரை சேர்ந்த 24 வயதான சுரேகா, சென்னையில் முதுகலை சட்டப்படிப்பு படித்துவருகிறார். திருச்சியில் இளங்கலை படித்தபோது தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

“இரவு நேரத்தில் மருந்தகம் செல்லும்போது என் பின்னே வந்த ஆண்கள் இருவர், ‘அருகே ஒரு பார் (மதுபான விடுதி) இருக்கிறது, வர்றியா?’ என கேட்டனர். நான் அங்கிருந்து வேகமாக என்னுடைய விடுதிக்கு வந்துவிட்டேன். அதுபோன்ற அனுபவம் முன்பு எனக்கு ஏற்பட்டதில்லை. அதைவிட என் மனதை காயப்படுத்தியது விடுதியில் சக மாணவிகள் கூறிய வார்த்தை தான். ‘அடர்வண்ணத்தில் லிப்ஸ்டிக் போட்டால் இப்படித்தான் அழைப்பார்கள்’ என அவர்கள் கூறினர்.” என்கிறார் சுரேகா.

ஆனால், அதன் பின்பும் தயக்கம் இல்லாமல் அடர்வண்ண உதட்டுச்சாயத்தை நம்பிக்கையுடன் பூசிக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மதுரையை சேர்ந்த 22 வயதான பிரசிதா, சென்னையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் சமூக ஊடக மேலாளராக பணிபுரிந்துவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவியாக தனக்கு நேர்ந்த விரும்பத்தகாத அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு உதட்டில் திட்டுகள் (pigmentation) இருந்ததால் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். அதனால் லிப்ஸ்டிக் பூச ஆரம்பித்தேன். கல்லூரி காலத்தில் விடுதியில் இருக்கும் சக மாணவிகளே ‘கல்லூரிக்கு படிக்கத்தானே செல்கிறோம், அதற்கு எதற்கு லிப்ஸ்டிக்?’ என்றுகூட கேட்பார்கள். நான் மாநிறமான பெண். அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசினால் திரைப்படங்களில் கொடுமையான வில்லி கதாபாத்திரத்தில் வருபவர்களை போன்று இருப்பதாக கூறுவார்கள். இதற்காக சக மாணவிகளுடன் வாக்குவாதம் கூட நிகழ்ந்திருக்கிறது” என்றார்.

பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனமொன்றில் பணிபுரியும் 33 வயதான ஜெயலஷ்மி, தான் அடர்நிற உதட்டுச்சாயத்தைப் பூசினால் சக பணியாளர்கள் தன்னை உற்றுநோக்குவார்கள் என்கிறார்.

"ஆண் பணியாளர்கள் என்றல்ல, பெண்களுமே என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள். பெங்களூரு போன்ற பெருநகரத்தில் பன்னாட்டு ஐடி நிறுவனத்திலேயே இப்படித்தான் இருக்கின்றனர். இருந்தாலும் அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் எனக்குப் பிடிக்கும் என்பதால் அதை தினமும் பூசுகிறேன்" என்றார் அவர்.

சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை மின்னணு ஊடகவியல் படித்துவரும் வசுமிதா, தனக்கு அடர் நிறத்தில் வண்ணச்சாயம் பூசுவதில் தயக்கம் இருப்பதாக கூறினார்.

“நான் மிகவும் லேசான லிப்ஸ்டிக் நிறத்தையே தேர்ந்தெடுப்பேன். அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் அணிந்தால் திருநங்கையுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். அடர் நிற லிப்ஸ்டிக் எனக்குப் பிடிக்கும். ஆனால், அதை பூசிக்கொண்டு வெளியே செல்வதில் தயக்கம் உள்ளது. தனியாக இருக்கும் போது அடர் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசி ரசித்திருக்கிறேன்” என்றார்.

சென்னையில் நன்கு அறியப்பட்ட, பெயர் தெரிவிக்க விரும்பாத தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர், தான் இன்னும் தன்னுடைய கிராமத்திற்கு சென்றால் தன் உதட்டுச்சாயம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என தெரிவித்தார். “சிறு வயதில், ‘யாரை மயக்குவதற்காக இப்படி லிப்ஸ்டிக் போடுகிறாய்?’, ‘இவள் யாரையாவது இழுத்துக்கொண்டு சென்றுவிடுவாள்’ என்றெல்லாம் பேசுவார்கள். இன்றளவும் என்னுடைய தோழிகள் சிலர், திருமணத்திற்கு பின்னர் லிப்ஸ்டிக் அணிந்ததால் அதற்காக கணவர்கள் இழிவாக பேசும் சம்பவங்களும் எனக்குத் தெரியும்” என்கிறார் அவர்.

பெண்ணுடல் மீதான கட்டுப்பாடு

உதட்டுச்சாயம் யார், எப்படி, என்ன வண்ணத்தில் பூச வேண்டும் என்பதில் சமூகத்தில் நிலவும் இத்தகைய கட்டுப்பாடுகள், பெண்ணின் உடலை கட்டுப்படுத்தும் குணத்தின் வெளிப்பாடு என்கிறார், எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசாமி. இவர், பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக வலியுறுத்தும் ‘பொலிட்டிக்கல் ஷக்தி’ (Political Shakti) எனும் அமைப்பின் இணை நிறுவனர்.

“பெண் உடல் மீது அவளுக்கிருக்கும் உரிமையை பறிப்பது இந்தியா என்றல்ல, எல்லா உலக நாடுகளில் நடக்கிறது. இங்கு அது உதட்டுச்சாயம் வடிவில் இருக்கிறது. ஆடை மீதான கட்டுப்பாடு, இந்த உதட்டுச் சாயம் விவகாரம் எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. நேற்று அது ஹிஜாப் வடிவிலோ அல்லது அதற்கு முன்பு அவள் அணியும் ஜீன்ஸ் அல்லது துப்பட்டா வடிவிலோ இருந்திருக்கிறது” என்கிறார் அவர்.

குறிப்பாக இந்திய சமூகத்தில் உதட்டுச்சாயம் குறித்த இத்தகைய பேச்சுகள், ஆணாதிக்கம், சாதிய, வர்க்கம் சார்ந்த பாகுபாடாகவும் பார்க்க வேண்டியிருப்பதாக அவர் கூறுகிறார்.

என்னிடம் பேசிய பெண்கள் பலர், அடர் வண்ண குறிப்பாக அடர் சிவப்பு நிற உதட்டுச்சாயம் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்படுவதாக தெரிவித்தனர்.

“திரைப்படங்களில் வில்லியாக வருபவர்கள் சிவப்பு லிப்ஸ்டிக் அணிந்திருப்பர். குறிப்பாக சிவப்பு லிப்ஸ்டிக் அணிந்தால் ஆண்களை மயக்குபவள் என நினைக்கின்றனர்” என்கிறார், எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ். இவர், ‘வட சென்னைக்காரி’, ‘சண்டைக்காரிகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் கடந்த ஏழு ஆண்டுகளாகவே தன்னை விமர்சிப்பவர்கள் தொடர்ச்சியாகவே தான் அணியும் அடர்நிற உதட்டுச்சாயம் குறித்தே கேலியுடன் விமர்சிப்பதாக கூறுகிறார் ஷாலின்.

“அடர்வண்ண லிப்ஸ்டிக் அணிபவர்கள் ஒழுங்கீனமானவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ‘எதையும் செய்ய துணிந்தவள்’, ‘பாலியல் தேவைக்காக எளிதில் பயன்படுத்தலாம்’ என நினைக்கின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்தான் சிவப்பு லிப்ஸ்டிக் போடுவார்கள் என உருவாக்கி வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் பயணித்திருக்கிறேன். தென் இந்தியாவில்தான் இந்த எண்ணம் அதிகம் இருப்பதாக நினைக்கிறேன்” என்கிறார் ஷாலின் லாரன்ஸ்.

தலித் பெண்ணான தான், மிக இளம் வயதிலிருந்தே அடர்நிற உதட்டுச்சாயத்தை விரும்பி பூசுவதாக கூறும் ஷாலின், வட இந்தியாவிலோ அல்லது வடகிழக்கு இந்தியாவிலோ தைரியத்துடன் அடர்வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ளும் தலித், பழங்குடி பெண்களை பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

“சிறுவயதிலிருந்தே எனக்கு உதடு கருமை நிறமாக இருக்கும். அதனால் கேலி செய்துள்ளனர். அதிலிருந்து லிப்ஸ்டிக் போட ஆரம்பித்தேன்” என்றார் அவர்.

ஐநா. சபையிலோ, அமெரிக்காவிலோ மிக உயர் பதவியில் இருப்பவர்கள் அடர் வண்ண உதட்டுச்சாயத்தை தைரியமாக அணிவதாக ஷாலின் தெரிவித்தார்.

உதட்டுச்சாயம் உள்ளிட்ட அலங்கார பொருட்களுக்குப் பின்னால் மிகப்பெரும் வணிகம் இருப்பதாக குறிப்பிடும் ஷாலின், பெண்ணியத்திற்கும் நுகர்வு கலாசாரத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருப்பதாகவும் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணர வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

சிவப்பு உதட்டுச்சாயம் - வரலாறும் போராட்டமும்

சிவப்பு நிற உதட்டுச்சாயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருப்பதாக, Red Lipstick: An Ode to a Beauty Icon புத்தகத்தின் ஆசிரியர் ரேச்சல் பெல்டர் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதிகாரம் மற்றும் செழுமையின் அடையாளமாக பண்டைய எகிப்து ராணி கிளோயோபட்ரா சிவப்பு லிப்ஸ்டிக் அணிந்ததாக அவர் கூறுகிறார்.

மேற்கத்திய நாடுகளில் அடர் சிவப்பு உதட்டுச்சாயம் பெரும்பாலும் போராட்டம், பிற்போக்குத்தனங்களை நோக்கிய எதிர்ப்பின் ஓர் அங்கமாக இருந்துவந்துள்ளது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடைபெற்ற இயக்கத்தில் சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் முக்கிய பங்கு வகித்தது. எலிசபெத் ஆர்டன் எனும் அழகுக்கலை பொருட்கள் விற்பனையின் முன்னோடி, அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களுக்கு அடர் சிவப்பு நிற உதட்டுச்சாயத்தை வழங்கினார். அக்காலத்தில் போராட்ட, சுதந்திர குணத்தின் வெளிப்பாடாக அடர்சிவப்பு நிறம் பார்க்கப்பட்டது.

இழிவு செய்தல், பாலியல் வன்புணர்வு, பாதிக்கப்பட்ட பெண்களை குற்றம் சொல்லும் போக்கு என பலவற்றுக்கு எதிரான இயக்கங்கள், போராட்டங்களில் இந்த அடர் வண்ண உதட்டுச்சாயம் இடம்பிடித்துள்ளது.

ஏன் அடர்சிவப்பு நிறம் என்ற கேள்விக்கு, “சிவப்பு எப்போதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. அதனால்தான் மேற்கத்திய நாடுகளின் பெண்கள் சிவப்பு நிற உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவார்கள், அது அவர்களின் தைரியத்தைக் குறிக்கிறது. பழமைகளுக்கு எதிரான கலகத்தின் குறியீடு அது. ஆபத்தை எதிர்கொள்ள துணிந்தவர்கள்தான் அடர்சிவப்பு நிற உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவார்கள்” என்கிறார் ஷாலின் மரிய லாரன்ஸ்.

பெரும்பாலும் அத்தகைய அடர்வண்ண உதட்டுச்சாயம் அணிபவர்களுக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலடியாகவே அவற்றை தொடர்ந்து அணிந்துவருவதையும் நாம் பார்த்துவருகிறோம்.

அமெரிக்காவில் இரு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தங்கள் நம்பிக்கையை குலைக்கும் என்பதால், 44% பெண்கள் மேக்கப் அணியாமல் தாங்கள் வெளியே செல்வதில்லை என கூறியுள்ளனர்.

கருப்பின பெண்களின் வெளிப்பாடு

உதட்டுச்சாயம் மட்டும் அல்லாமல் வெவ்வேறு வித அழகுக்கலை உத்திகள் பல நூற்றாண்டுகள் வெவ்வேறு காரணங்களுக்காக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. கருப்பின வீராங்கனைகள் பல்லாண்டு காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் விரல் நகங்களை நீளமாக வளர்த்து, அதில் வெவ்வேறு வண்ணங்களில் பல டிசைன்களுடன் வண்ணம் தீட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் கருப்பின அமெரிக்க வீராங்கனைகள் அப்படி செய்திருந்ததை பார்க்க முடிந்தது. ஷகாரி ரிச்சர்ட்சன் எனும் கருப்பின வீராங்கனை தன் விரல்களில் இவ்வாறு செய்திருந்தார். தன் பாட்டி, தாயின் வழியில் தானும் அவ்வாறு செய்திருப்பதாக அச்சமயத்தில் பெருமையுடன் கூறியிருந்தார்.

கருப்பின கலாசாரம் மற்றும் அலங்காரத்தை உலகத்திற்கு காண்பிக்கும் விதமாகவும் இவ்வாறு செய்கின்றனர். தங்களை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்வது சில வீரர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக, விளையாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருப்பின பெண்கள் பலரும் அடர் வண்ண உதட்டுச்சாயத்தை தயக்கமின்றி பயன்படுத்துவதாகவும் சமூகத்தில் அதுகுறித்த எண்ணம் மாறியிருப்பதாகவும் கூறுகிறார், பிபிசி ஆப்ரிக்க சேவையில் பணிபுரியும் மூத்த செய்தியாளர் சிம்மெஸியே உச்சாபோ.

“ஆப்பிரிக்க நாடுகளில் அடர் வண்ண உதட்டுச்சாயம் அணிவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நைஜீரியாவில் இருக்கிறேன், அலுவலகத்தில் சிலர் அடர் கருப்பு வண்ண உதட்டுச்சாயம் அணிவார்கள். நான் தற்போது அடர் பழுப்பு நிற உதட்டுச்சாயம் அணிந்திருக்கிறேன். அடர் வண்ண உதட்டுச்சாயம் இங்கு பிரச்னையாக இருந்ததில்லை. ஒருவேளை, கருமையாக இருப்பதால் அது பிரச்னையாக பார்க்கப்படலாம்” என்றார்.

கருப்பின பெண்கள் கலாசார ரீதியாக தங்கள் முகங்களில் கருப்பு வண்ண அடையாளங்களை வரைந்துகொள்வதாக அவர் தெரிவித்தார்.

“அடர்வண்ண உதட்டுச்சாயம் பெண்களை அதிகாரப்படுத்துவதாக நினைக்கிறேன். குறிப்பாக, சிவப்பு நிற உதட்டுச்சாயம். ஒவ்வொருவரும் ஓர் அர்த்தத்துடன் இதைச் செய்கின்றனர். இது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை பொறுத்தது” என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)