You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உதயநிதி ஸ்டாலின்: சினிமா முதல் அரசியல் வரை அதிவேக வளர்ச்சி - முழு பின்னணி
"சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானதுதான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்."
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் மேற்கண்ட கருத்துகளும், கூடுதலாக முன்வைத்த விமர்சனங்களும் தேசிய அளவில் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொடுத்தாலும், அவர் கவனம் பெறவும் காரணமாக அமைந்தன.
உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை, சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலுமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைவாகவே நகர்ந்து வந்திருக்கிறார். குருவி திரைபடம் மூலம் திரைத்துறையில் தயாரிப்பாளராக நுழைந்த அவர், விரைவாகவே திரையில் நாயகனாகி மாநிலம் முழுவதும் அறியப்படும் முகமானார்.
அரசியலில் நுழைந்த ஐந்தே ஆண்டுகளில் இன்று துணை முதல்வராக வளர்ந்துள்ளார். மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் துணை முதலமைச்சரான மூன்றாவது நபர் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் 15 ஆண்டுகளில் தமிழ்நாடு மூன்றாவது துணை முதலமைச்சரைக் கண்டிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் அரசியலிலும், சினிமாவிலும் சாதித்தது என்ன? அவரைச் சுற்றியுள்ள விமர்சனங்கள், சர்ச்சைகள் என்ன?
சினிமா பிரவேசம்
தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், 2008ஆம் ஆண்டு வரையிலும் உதயநிதி ஸ்டாலின் பெரிதாக அறியப்படாத ஒருவராகவே இருந்து வந்தார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் நிர்வாக இயக்குநராக அவர் இருந்து வந்தார். 2008 ஆம் ஆண்டில், முன்னணி நடிகர் விஜயை நாயகனாக வைத்து குருவி என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் திரைத்துறைக்குள் உதயநிதி ஸ்டாலின் நுழைந்தார்.
மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என அவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் யாவும் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்ட பெரிய படங்களாகவே அமைந்தன.
கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமானார். நகைச்சுவை, காதல் படமான அந்தப் படம் சிறப்பாக அமைய, ஒரே படத்தில் தமிழ்நாடு முழுவதுமே தெரிந்த முகமாக அவர் மாறினார்.
முன்பு நகைச்சுவை, காதல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் அடுத்து வந்த ஆண்டுகளில் நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற சமூகப் பிரச்னைகளைப் பேசும் படங்களிலும் நடித்தார்.
அவரது ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம் திரைப்படங்களை விநியோகிக்கவும் செய்தது. பொன்னியின் செல்வன் உள்பட சமீப ஆண்டுகளில் வெளியான பல பெரிய படங்களை இந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக கடந்த ஆண்டு அவர் அறிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படமே அவரது கடைசி திரைப்படமாக அமைந்தது.
அரசியலில் அதிவேக வளர்ச்சி
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அதே ஆண்டு ஜூலையில் திமுக இளைஞரணி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை முன்னிறுத்தி, ஒற்றை செங்கலைக் கையில் ஏந்தி தமிழ்நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட பிரசாரம் பெருமளவில் கவனம் ஈர்த்தது.
அந்தத் தேர்தலில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கும் அவர் தேர்வானார். அடுத்த ஆண்டு டிசம்பரில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைத்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் அண்மைக் காலமாக ஒலிக்கத் தொடங்கின. திமுக நிர்வாகிகள் மட்டுமின்றி, அமைச்சர்களும்கூட அந்தக் கோரிக்கையை பகிரங்கமாக பொதுவெளியில் முன்வைத்தனர். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப் பயணத்திற்கு முன்பாக இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்த நிலையில், தற்போது அது நிஜமாகியுள்ளது.
விமர்சனங்களும் சர்ச்சைகளும்
உதயநிதி ஸ்டாலின் அரசியலில் நுழைந்தபோதே, அவரது தந்தையும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினை போலவே வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விமர்சனத்தைக் கடுமையாக முன்வைத்தன.
உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிகழ்ச்சியில் பங்கெடுத்தபோது, அதில் அவர் சனாதனம் குறித்துப் பேசிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.
தமிழக எல்லையைக் கடந்து இந்தியா முழுவதுமே அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மத நம்பிக்கைகளைப் புண்படுத்திவிட்டார் என்று கூறி டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும்கூட புகார்கள் கொடுக்கப்பட்டன. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் கண்டிப்பையும் அவர் எதிர்கொள்ள நேரிட்டது.
இதேபோல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை என்று கூறி உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தைத் தொடர்புபடுத்தி முன்வைத்த விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.
சனாதனம் குறித்த பேச்சுகளுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பினாலும்கூட, திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள், சமூக நீதி பேசும் அமைப்புகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவர் மீது 22 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
சென்னையில் அண்மையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டதில் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. எதிர்ப்புகள், வழக்குகளைக் கடந்து வெற்றிகரமாக நடந்து முடிந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் உதயநிதி ஸ்டாலினுக்கு விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேரப் பெற்றுத் தந்தது.
குடும்பம் மற்றும் கல்வி
உதயநிதி ஸ்டாலின் சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றவர். அவரது வயது 46. அவருடைய காதல் மனைவி கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
உதயநிதி - கிருத்திகா தம்பதிக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)