தமிழ்நாடு: செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் 3:30 மணிக்கு செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் புதிய அமைச்சர்களாகப் பதவேற்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.

நேற்றிரவு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக சனிக்கிழமை இரவில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி இரா.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுனர்.

மேலும், அந்த அறிவிப்பில் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி ஆகியோரின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ராஜகண்ணப்பனுக்கு பால் வளத்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையுடன் சுற்றுச்சூழல் துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள 4 பேருக்கும் என்னென்ன துறைகள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

துணை முதல்வர் விவாதத்தை தொடங்கி வைத்த அன்பில் மகேஷ்

உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவில் பலரும் கூறிவந்தாலும், அது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக எதையும் அறிவிக்காமல் இருந்தார்.

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு முன்னொருமுறை பதில் அளித்த அமைச்சர் உதயநிதி, "நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருக்கிறோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

"தமிழ்நாடு அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்" என, தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தாலும், ‘அதற்கான வாய்ப்பு பழுக்கவில்லை’ என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், உதயநிதியை முன்னிறுத்தி மீண்டும் துணை முதல்வர் விவாதம் கிளம்பியது. இதனை உதயநிதி ஸ்டாலினின் நீண்டநாள் நண்பரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்," என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசியலில் வேகமாக வளர்ந்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கட்சிக்குள் பதவியளித்தபோதும் பல கடுமையான விமர்சனங்கள் கட்சிக்குள் இருந்தும் கட்சிக்கு வெளியில் இருந்தும் எழுந்தன.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியளித்தபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது வாரிசு என்பதால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை மிகத் தீவிரமாக முன்னிறுத்துவதாக இந்த விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினை இதுவரை ஏற்காமல் இருந்தவர்களிடமும் அவருடைய இந்தப் பேச்சு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்த உதவியதாக அரசியல் விமர்சர்கள் கூறினார்கள்.

மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மிக வேகமானதாகவே நகர்கிறது. 14 வயதில் இருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபாடுகாட்டி வந்த மு.க. ஸ்டாலினுக்கு 31 வயதில்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின், 2006ஆம் ஆண்டில் தனது 53வது வயதில்தான் அமைச்சரானார். ஆனால், திரைத்துறையிலேயே தனது ஆர்வத்தைக் காட்டிய உதயநிதி ஸ்டாலின், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

2019 ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.

தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

அரசியலுக்கு வந்து ஒன்றரை ஆண்டிலேயே கட்சியில் முக்கிய பதவிக்கு வந்தார் உதயநிதி ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டிலேயே அமைச்சராகவும் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவான நிலையில், உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்து வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இருந்தபோதும் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது. இப்போது அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)