சனாதனம் சர்ச்சை: தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமையாக உருவெடுக்கிறாரா உதயநிதி?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் பதிலளித்து வரும் நிலையில், தேசிய அளவில் அவரது பெயர் அறிமுகமாகியிருப்பதோடு, கட்சியிலும் பொதுவெளியிலும் அவருக்கான ஏற்புத்தன்மை கூடியிருக்கிறது.

சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என தான் பேசிய பேச்சுக்கு இவ்வளவு பெரிய எதிர்வினை வருமென உதயநிதி ஸ்டாலினே எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படி குவிந்த எதிர்வினைகளை உதயநிதி ஸ்டாலின் எதிர்கொண்ட விதமும் எதிர்பாராத ஒன்றுதான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாடு நடத்தப்பட்டது.

இதில் கலந்தகொண்ட உதயநிதி ஸ்டாலின், 'இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்களிப்பு' என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

"இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

பா.ஜ.க. இந்த விவகாரத்தை கையில் எடுக்காவிட்டால், உதயநிதியின் பேச்சை அங்கு கூடியிருந்தவர்கள் மட்டும்தான் கேட்டிருப்பார்கள். ஆனால், இந்த விவகாரத்தை பூதாகரமாக்க பா.ஜ.க. முடிவுசெய்தது.

செப்டம்பர் 2ஆம் தேதி மாலையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.கவின் தகவல் தொழிலநுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா, "இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிப்பதற்கு" உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார்.

பெரிய அளவில் கவனிக்கப்படாத உதயநிதியின் பேச்சு, நாடு முழுவதும் பேசு பொருளாகவும் விவாதமாகவும் மாறியது இப்படித்தான்.

சனாதன சர்ச்சை: பின்வாங்காத உதயநிதி ஸ்டாலின்

இதற்குப் பிறகு, உதயநிதி பேசிய பேச்சின் வீடியோ காட்சிகள் வெட்டப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. பா.ஜ.கவின் மாநிலப் பிரிவுகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

இந்தியா கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் இது குறித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள். அடுத்த நான்கைந்து நாட்களுக்கு, தொலைக்காட்சிகளில் தேசிய அளவிலான தலைப்புச் செய்தியாக, உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியதே இருந்தது.

ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் இரவு விவாதங்களில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை வைத்தே விவாதங்கள் நடைபெற்றன.

இதற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கையை வெளியிட்டார். அதிலும் சனாதனத்திற்கு எதிர்ப்பு என்ற உதயநிதியின் நிலைப்பாட்டை ஆதரித்துக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை வைத்து, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சிகளையும் பா.ஜ.க. மேற்கொண்டது.

இதையடுத்து, காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ் ஆகியவை இது குறித்து தங்கள் பார்வையை தெளிவுபடுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்தார்.

பொதுவாக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகள், சர்ச்சையாகும்போது தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லையென்றும் விளக்கமளிப்பது வழக்கம். ஆனால், உதயநிதி அந்த உத்தியை நாடவில்லை.

இந்த சர்ச்சையை உதயநிதி ஸ்டாலின் பின்வாங்காமல் எதிர்கொண்டார். சனாதன தர்மம் குறித்துத் தான் பேசியதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்ற பொருளிலேயே தான் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களுக்கு ஊடகங்கள் அவரைத் துரத்தித் துரத்திக் கேட்டபோதும், இதே பதிலையே அவர் திரும்பத் திரும்பச் சொன்னார்.

சனாதனம் குறித்த பேச்சு சர்ச்சையான பிறகு, அந்தப் பேச்சில் உறுதியாக நின்றது அவரை எதிர்காலத் தலைவராகக் கருதுபவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

"சனாதனம் குறித்த மாநாடு தி.மு.கவால் நடத்தப்பட்டதுமில்லை. அவருக்காக திட்டமிடப்பட்டதுமில்லை. த.மு.எ.க.ச. நடத்திய மாநாட்டில் அவர் தன் கருத்தைப் பேசிவிட்டு வந்திருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாமே காலகாலமாக தி.க., தி.மு.க. தலைவர்களால் பேசப்பட்டவைதான்.

ஆகவே, இதனைத் திட்டமிட்டு அரங்கேற்றியதாகச் சொல்ல முடியாது. இது இயல்பாகவே நடந்த விஷயம்தான். ஆனால், அந்தப் பேச்சு சர்ச்சையான பிறகு, நான் பேசியதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று சொல்லியிருப்பதுதான் பெரிய விஷயம்.

இந்தியா கூட்டணியிலேயே பலருக்கு சிக்கல் வந்த நிலையிலும் தான் பேசியது சரி என்று நிற்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். அவரை எதிர்காலத் தலைவராக கருதுபவர்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்" என்கிறார் ப்ரியன்.

வேகமாக வளரும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கட்சிக்குள் பதவியளித்தபோதும் பல கடுமையான விமர்சனங்கள் கட்சிக்குள் இருந்தும் கட்சிக்கு வெளியில் இருந்தும் எழுந்தன.

அதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியளித்தபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது வாரிசு என்பதால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினை மிகத் தீவிரமாக முன்னிறுத்துவதாக இந்த விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் தற்போது சனாதனம் குறித்து பேசிய பேச்சு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கட்சிக்குள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினை இதுவரை ஏற்காமல் இருந்தவர்களிடமும் அவருடைய இந்தப் பேச்சு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்த உதவியிருக்கிறது.

மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மிக வேகமானதாகவே நகர்கிறது. 14 வயதில் இருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபாடுகாட்டி வந்த மு.க. ஸ்டாலினுக்கு 31 வயதில்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின், 2006ஆம் ஆண்டில் தனது 53வது வயதில்தான் அமைச்சரானார். ஆனால், திரைத்துறையிலேயே தனது ஆர்வத்தைக் காட்டிய உதயநிதி ஸ்டாலின், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

2019 ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.

தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றிபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

மு.க. ஸ்டாலின் 15 ஆண்டுகள் பணியாற்றிப் பெற்ற பதவியை, அரசியலுக்கு வந்து ஒன்றரை ஆண்டிலேயே பெற்றார் உதயநிதி ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டிலேயே அமைச்சராகவும் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்து வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இருந்தபோதும் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றது.

சனாதன சர்ச்சையால் உதயநிதிக்கு லாபமா ?

கட்சிக்கு வெளியில் இருந்தவர்கள் உதயநிதியின் இந்த வளர்ச்சியை வாரிசு அரசியல் என விமர்சித்தாலும், கட்சிக்குள் இதுபற்றி எந்த முணுமுணுப்பும் இல்லை. இந்த காலகட்டம்வரை, தந்தையின் செல்வாக்கிலேயே அரசியல் செய்பவராக உதயநிதி பார்க்கப்பட்ட நிலையில்தான், சனாதனம் குறித்த அவருடைய சமீபத்திய பேச்சு, அவரை வேறு வண்ணத்தில் பார்க்க வைத்திருக்கிறது.

இந்தியாவில் பல மாநிலக் கட்சிகளில் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். பா.ஜ.க. 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்சியின் பிரதான கொள்கைகளில் தடுமாறிய பல மாநிலக் கட்சிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. பல பிராந்தியக் கட்சிகள் மிகச் சிறியதாக சுருங்கிவிட்டன.

ஆனால், கட்சிக்குள் தனது ஆதரவைப் பெருக்கிக்கொள்ள உதயநிதி இப்படியெல்லாம் பேச வேண்டியதில்லை; இது இயல்பாகவே நடந்த விஷயம்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

"உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை தி.மு.கவில் திட்டமிட்டு அவரைத் தொடர்ந்து முன்னிறுத்துகிறார்கள். இப்போதுகூட இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு சென்று வந்திருக்கிறார். முதல்வர் வர முடியாத நிகழ்ச்சிகளுக்கு அவர்தான் அழைக்கப்படுகிறார். ஆகவே, கட்சிக்காரர்கள் தன்னை ஏற்க வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசினார் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால், இதில் எதிர்பாராத நிகழ்வு என்பது பா.ஜ.க. இதனை பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்றதுதான்" என்கிறார் அவர்.

ஆனால், சாதாரண மக்களிடம் உதயநிதி குறித்த ஏற்புத்தன்மையை அதிகரிக்க இந்தப் பேச்சு உதவியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"உதயநிதிக்கு இப்போதே பதவியைத் தரவேண்டுமா என்று எண்ணியிருந்தவர்களின் மனதில் இந்த பேச்சு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். தவிர, இந்த விவகாரத்தை தி.மு.க. சரியாகவே கையாண்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்தது. ஆனால், அடுத்த நாளே தி.மு.க. ஆட்சியில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது என்ற செய்தி வெளியானது.

அதற்கடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன. இந்து எதிர்ப்பாளராக தி.மு.க.வை முன்னிறுத்த நினைத்தவர்களுக்கு இது பதிலடியாக அமைந்தது" என்கிறார் ஷ்யாம்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்ததன் மூலம், நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் பிரபலமாக பா.ஜ.க. உதவியிருக்கிறது என்கிறார் ஷ்யாம்.

"த.மு.எ.க.ச. நடத்தி உதயநிதி கலந்துகொண்ட கருத்தரங்கு குறித்த போஸ்டர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகவே வாட்சப்பில் வந்துகொண்டிருந்தன.

சனாதனத்தை ஒழிப்போம் என்று மாநாடு நடத்தும்போது, அதை விரும்பாதவர்கள் மாநாடு நடத்தும் முன்பே சென்று தடை வாங்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? தி.மு.க. கூட்டணி இந்தியா கூட்டணியின் அச்சாணியாக செயல்படுகிறது.

அந்த அச்சாணியைக் கழற்ற வேண்டும் என நினைத்து இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அகில இந்திய அளவில் தி.மு.கவிற்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ பெயர் கிடைத்தாலும் அதனால் எந்த இழப்பும் பா.ஜ.கவுக்கு இல்லை. காரணம், தமிழ்நாட்டிற்கு வெளியில் தி.மு.க. இல்லை.

ஆனால், இந்த சர்ச்சையை வைத்து இந்தியா கூட்டணியில் சிக்கல் வந்தால் சரி என நினைக்கிறார்கள். ஆனால், இது உதயநிதியின் பெயரை பிரபலமாக்கத்தான் உதவியிருக்கிறது." என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

தொடர்ந்து பேசுவாரா உதயநிதி ஸ்டாலின் ?

உதயநிதி ஸ்டாலின் பேசிய பல விஷயங்கள் இதற்கு முன்பும் சர்ச்சையாகியிருக்கின்றன.

2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தாராபுரத்தில் நடந்த தேர்தல் பேரணியில், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி இருவரும், பிரதமர் நரேந்திர மோடியின் 'சித்திரவதை' மற்றும் 'அழுத்தம்' காரணமாக இறந்ததாக உதயநிதி குற்றம் சாட்டிப் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், இந்த கருத்தை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டார். அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி பக்ஷியும் இந்தக் கருத்தை மறுத்தார். இதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசிற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தின் போது முழு உரையையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளத் தவறியதாகவும், ஓரிரு வரிகளை மட்டுமே தனியாக கவனித்திருப்பதாகவும் விளக்கமளித்து அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோதி, ''தி.மு.க.வின் இளவரசர் கட்சியில் மூத்தவர்களை ஓரம்கட்டிவிட்டு பதவி வாங்கிவிட்டார்'' என்று உதயநிதியை விமர்சித்துப் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, 'மோதி எத்தனை மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார் தெரியுமா?' என்று கேள்வியெழுப்பியதோடு, மேலே சொன்ன கருத்தையும் தெரிவித்தார்.

அந்தத் தருணத்திலும் உதயநிதி பேசியதும் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் நாடு முழுவதும் செய்தியாயின. உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சுகள் சிலவும் இதற்கு முன்பாக பரவலாக கவனிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமலேயே இருப்பது குறித்து ஒரு செங்கலை கையில் வைத்தபடி உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு மிகவும் பிரபலமான காட்சியாக சமூக வலைதளங்களில் வலம்வந்தது.

பொதுவாக உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களிடம் பேசும்போது, மிகச் சரளமாக மனதில் பட்டதைப் பேசுவதைப் போன்ற தொனி இருக்கிறது. குறிப்பாக, சனாதம் குறித்த அவரது பேச்சு குறித்து ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் அவரிடம் கேள்வியெழுப்பியபோது, அதற்கு முன்பாக பெரியார், மு.கருணாநிதி, திருமாவளவன், ஆ. ராசா என யாரெல்லாம் சனாதனம் குறித்துப் பேசியிருக்கிறார்கள் என்று நீண்ட பட்டியலைக் கூறி தான் பேசியதை நியாயப்படுத்தியது கவனிக்கத்தக்கதாக இருந்தது.

ஆனால், பெரியார், மு. கருணாநிதி, ஆ. ராசா, திருமாவளவன் ஆகியோருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. மேலே சொன்ன தலைவர்கள் அனைவரது அரசியலின் அடிப்படையாகவும் இந்து மத எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என்பதே இருந்தது. ஏதோ ஒரு நாள் அதைப் பேசிவிட்டு அவர்கள் சென்றுவிடவில்லை.

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, தொடர்ந்து தனது பேச்சிலும் எழுத்திலும் சனாதன எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தார்.

ஆ. ராசாவும் திருமாவளவனும் தொடர்ச்சியாக சனாதனம் குறித்த எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினிடம் இதுபோன்ற தொடர்ச்சி இருக்குமா என்ற கேள்வி நீடிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: